முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இலங்கை கடற்படையின் அட்டூழியங்களை நிரந்தரமாக தீர்க்க வலியுறுத்தி, மீனவ சமுதாயத்திற்கான நிவாரணத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு, “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வு குறித்தும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் குறித்தும், இதனால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வு காணவும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் கைப்பற்றப்பட்டுள்ள மீன்பிடி படகுகளையும் மீட்டுத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத ஒன்றிய அரசை கண்டித்தும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தை சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் 28.02.2025 அன்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், மாண்புமிகு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளம் – மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் இன்று (03.03.2025) இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
இப்பேச்சுவார்த்தையின்போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வு குறித்தும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் குறித்தும், இதனால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து எடுத்துரைத்தும், தங்களது கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி, நிறைவேற்றி தருமாறு மீனவர் சங்க பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், முதலமைச்சர் அவர்கள் நேற்று (03.03.2025) நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட போது அப்பகுதியில் உள்ள மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்கள்.
கடந்த 18.02.2025 அன்று இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவ பிரதிநிதிகளுடனான சந்திப்பின் அடிப்படையில், அம்மாவட்ட மீனவர்களின் முக்கிய கோரிக்கைகளான தங்கச்சிமடம் மீன்இறங்கு தளம் மீன்பிடித்துறைமுகமாக தரம் உயர்த்துதல், குந்துக்கல் மீன் இறங்கு தளத்தை தூண்டில் வளைவுடன் மேம்படுத்துதல் மற்றும் பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்தல் ஆகிய திட்ட செயல்பாட்டிற்கு ரூ.360 கோடியினை ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்கனவே ஆணையிட்டுள்ளார்கள்.
இராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அளித்த கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலித்து, இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் நலன் கருதி, இலங்கையில் நெடுங்காலமாக மீட்க இயலாத நிலையில் உள்ள மீன்பிடி விசைப்படகுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரண தொகையினை ரூ.6 இலட்சத்திலிருந்து ரூ.8 இலட்சமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் இருக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு தின உதவி தொகையாக தற்போது நாளொன்றுக்கு 350 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திட தின உதவித் தொகையினை நாளொன்றுக்கு 500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகளவில் நடைபெறுவதுடன் அவர்கள் மீது சிறைதண்டனை விதிக்கப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவர்களை உடனுக்குடன் விடுவிப்பது மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை மீட்டு தாயகம் கொண்டு வருவதை துரிதப்படுத்திடும் பொருட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளம் - மீனவர் நலத்துறை அமைச்சர், அலுவல்சாரா உறுப்பினர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரநிதிகள் அடங்கியகுழு, விரைவில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்துமாறு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.