
நாகை மாவட்டக் கழகச் செயலாளர் என்.கௌதமன் அவர்களின் மகன் மகிபாலன் - உமா மகேஸ்வரி ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திவைத்தார்.இந்த திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:-
நாகை மாவட்டக் கழகத்தின் செயலாளர் கௌதமன் அவர்கள் இல்லத்தில் நடைபெறும் மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று, மணவிழாவை நடத்தி வைத்து - மணமக்களை வாழ்த்தும் சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கும் மணமக்களுக்கும், மணமக்களின் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியையும், வணக்கத்தையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 1ஆம் தேதி, அதாவது நேற்று முன்தினம் என்னுடைய பிறந்தநாள் முடிந்திருக்கிறது. அந்தப் பிறந்தநாள் முடிவுற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு, என்னுடைய தாய் மண்ணாக விளங்கிக் கொண்டிருக்கும் இந்த மண்ணிற்கு வந்திருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நம்முடைய கௌதமன் அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், சொல்லிக் கொண்டே இருக்கலாம். இங்கு பேசியவர்கள் எல்லாம் சொன்னார்கள். பேசியவர்களுக்கும் தெரியும்; பேச நேரம் இல்லாத காரணத்தால் பேச முடியாமல் இருப்பவர்களுக்கும் தெரியும்; இங்கு வந்திருக்கும் உங்களுக்கும் தெரியும், அவர் எவ்வளவு வேகமாக இருப்பார் என்று.
இங்கே நம்முடைய தோழர் முத்தரசன் அவர்கள்கூட பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சித் தோழர்கள் எல்லாம் கௌதமனைப் பார்த்து பயப்படுவார்கள் என்று சொன்னார். அவர் பேசுகிற பேச்சு வேகமாக இருக்கும், அதைப் பார்த்து பயப்படுவார்கள் என்ற உணர்வோடு சொன்னார். நான் கூட அப்போது சொன்னதாகச் சொன்னார். "டோன் அப்படி இருக்கும் என்றேன்" என்றார். கூட்டணிக் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, எங்கள் கட்சிக்காரர்களே அவரைப் பார்த்து பயப்படுவார்கள்.
பல நேரங்களில் இந்த மாவட்டத்தைச் சார்ந்த சில தோழர்கள் தலைமைக் கழகம் - அறிவாலயத்திற்கு வந்து கௌதமன் வேகமாகப் பேசுகிறார் என்று புகார் சொல்வார்கள். நான் உடனே அவர்களிடம் சொல்வேன். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். கவலைப்படாதீர்கள், அவர் நல்ல செயல்வீரர் என்று அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைப்பதுண்டு.
எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு நான் இந்த மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் படபடவென இருப்பார். வரவேற்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி; கொடியேற்று விழா நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி; பொதுக்கூட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி; அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எப்போதுமே பரபரப்பாகத்தான் இருப்பார். இங்கே நன்றி சொல்லும் போதுகூட நீங்கள் கவனித்திருக்கலாம். மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, அவர் பேசியதையெல்லாம் நீங்கள் கவனத்திருப்பீர்கள்.
எதற்காகச் சொல்கிறேன் என்றால், அவரிடத்தில் எந்த அளவிற்குக் கழகப் பற்றும், இந்தக் கழகத்தின்மீது இருக்கும் பாசமும், நம்முடைய தலைவர் கலைஞர்மீது கொண்டிருந்த அன்பும், என்மீது இன்றைக்கு அவர் கொண்டிருக்கும் அன்பும், அது இந்த இயக்கத்திற்குப் பயன்படுகிறது என்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நம்முடைய கௌதமன் அவர்கள், முதன்முதலாக அக்கரைப்பேட்டை கிளைச் செயலாளராக தன்னுடைய அரசியல் பணியைத் தொடங்கி, அதற்குப் பிறகு, மாவட்டக் கழகத்தின் பிரதிநிதியாகப் பொறுப்பேற்று பணியாற்றி, நாகை நகர்மன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று - மக்களுக்குத் தொண்டாற்றி, அதற்குப் பிறகு, மாவட்ட மீனவர் அணியின் அமைப்பாளராகப் படிப்படியாக முன்னேறி, இன்றைக்கு மாவட்டச் செயலாளர் என்ற பொறுப்பிலிருந்து பணியாற்றுகிறார் என்று சொன்னால், கழகத் தோழர்களின் உள்ளங்களில் எந்த அளவிற்கு அவர் இடம்பெற்றிருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
குறிப்பாக, மீனவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்காக தொடர்ந்து போராடக்கூடியவர் நம்முடைய கௌதமன் அவர்கள். தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசுத் தரப்பில் அமைத்த குழுவில் இடம்பெற்றவர்தான், நம்முடைய கௌதமன் அவர்கள். இலங்கைக்குச் சென்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அதற்குத் தீர்வு காண வேண்டும் என உதவியவர் நம்முடைய கௌதமன் அவர்கள். அதனால்தான், இன்றைக்குத் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்திற்கு இவரைத் தலைவராக நாம் நியமித்திருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அவரது கழகப் பற்றுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், திருப்பரங்குன்றத்தில் ஒரு இடைத்தேர்தல் வந்தது. அந்த இடைத்தேர்தல் நடக்கிறபோது, தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் ஒரு நாள் அந்தப் பகுதிக்குச் சென்றிருந்தேன். அவ்வாறு நான் சென்றிருந்த நேரத்தில், திருப்பரங்குன்றம் தொகுதியில் ஒரு பகுதியில், கௌதமன் அவர்கள் தலைமையில் கட்சிப் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள், தேர்தல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நான் அன்றைக்குச் சென்றபோது, அவருடைய சகோதரர் மறைந்து விட்டார் என்ற செய்தி வருகிறது. அவர் இருக்க மாட்டார் என்று கருதித்தான் நான் அங்கு சென்றேன். ஆனால், அவர் அங்கு இருக்கிறார். நான் கேட்டேன், “உங்களுடைய சகோதரர் இறந்துவிட்டாரே... நீங்கள் செல்லவில்லையா?” என்று கேட்டேன். “எங்கள் தலைவர் வருகிறபோது நான் இல்லாமல் இருக்க மாட்டேன். ஒரு பொறுப்பை என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறீர்கள்” என்று சொன்னார்.
எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், தன்னுடைய சொந்தச் சகோதரன் மறைவுச் செய்தியை கேட்டுகூட, அந்தக் கட்சிப் பணியை விட்டுவிடாமல் அங்கிருந்து பணியாற்றி இருக்கிறார் என்று சொன்னால், இதுதான் கட்சி - இதுதான் கழகம் - இதுதான் குடும்பம் என்ற அந்த உணர்வை நான் எண்ணிப் பார்த்தேன்.
எனவே, அப்படிப்பட்ட குடும்பப் பாச உணர்வோடு நாம் எல்லாம் இன்றைக்கு அவருடைய இல்லத்தில் நடைபெறும் மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
அண்ணா அறிவாலயத்தில் 1ஆம் தேதி அன்று நான் கழகத் தோழர்களை, எனது பிறந்தநாளையொட்டிச் சந்தித்தபோது - வாழ்த்துகளைப் பெற்றபோது, கிட்டத்தட்ட 8 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணி வரையில், அனைத்துத் தோழர்களும் படங்கள் - புத்தகங்கள் - அவர்கள் வீட்டில் விளைவித்த கீரை வகைகள், காய்கறி வகைகள் அத்தனையும் கொண்டு வந்து என்னிடத்தில் கொடுத்து அன்பைப் பரிமாறினார்கள்.
அப்போது, எனக்குப் பக்கத்தில் ஐந்தாறு பேர் தொடர்ந்து நின்று கொண்டிருந்தார்கள். அதில் முக்கியமாக நம்முடைய டி.ஆர்.பாலு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நேரு - ஆனால், இவர்களெல்லாம் பல மணி நேரம் நின்றார்களா என்றால், நிற்கவில்லை. அரைமணி நேரம் நிற்பார்கள், சென்றுவிடுவார்கள். ஏனென்றால் அவ்வளவு நேரம் நிற்க முடியாது. நான்தான் தொடர்ந்து பல மணி நேரம் நின்றேன். அவ்வளவு நேரம் நிற்கும் தெம்பு எனக்கு எப்படிக் கிடைத்தது என்றால், நம்முடைய தோழர்கள் இன்முகத்தோடு, முகமலர்ச்சியோடு கைத்தறி ஆடைகளை அணிவிக்கும்போது, வாழ்த்துச் சொல்கிறபோது, எனக்கும் கால் வலித்தது; ஆனால், அவர்கள் முகத்தைப் பார்க்கும்போது, மகிழ்ச்சியைப் பார்க்கும்போது என்னுடைய கால் வலியே எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அதுதான் உண்மை.
அவ்வாறு இன்றைக்குக் கழகத்தில் குடும்பப் பாச உணர்வோடு நாம் இருந்து கொண்டிருக்கிறோம். எனவே, அந்தப் பாச உணர்வோடு இன்றைக்கு நம்முடைய கௌதமன் அவர்கள் இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் நாமும் கலந்து கொண்டு வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு நாம் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினை என்ன என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். மும்மொழிக் கொள்கையைக் கட்டாயப்படுத்தி, கொண்டு வந்து விட வேண்டும் என்று இன்றைக்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல், தொகுதி மறுசீரமைப்பையும் கொண்டு வந்து, எப்படியாவது தமிழ்நாட்டின் உரிமையை - எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்கு தெரியும். அதனால்தான் வருகிற 5 ஆம் தேதி நாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் 40 கட்சிகள் - யார் யார் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்களோ, அந்த 40 கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் வருவதாக நமக்குச் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட ஒரு சிலர், நாங்கள் வர வாய்ப்பில்லை; வர முடியாது என்றும் செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள். நான் அவர்களை எல்லாம் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புவது, வர இயலாது; வர முடியாது என்று சொல்பவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஏதோ தனிப்பட்ட தி.மு.க.விற்கோ, தனிப்பட்ட உங்களுக்கோ உள்ள பிரச்சினை இல்லை இது. தனிப்பட்ட கட்சிக்கு அல்ல இது. இதை அரசியலாக நீங்கள் பார்க்காதீர்கள். நம்முடைய உரிமை - நம்முடைய தமிழ்நாட்டின் உரிமை.
இன்றைக்கு 39 எம்.பி.க்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்களை வைத்துக் கொண்டே போராடிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால், அதையும் மீறி இன்றைக்கு இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால்தான், நாம் எண்ணும் எண்ணங்களை எல்லாம் நிச்சயமாக நிறைவேற்ற முடியும். எனவே, அதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் மீண்டும் இந்தத் திருமண விழாவின் மூலமாக அனைத்துக் கட்சிகளையும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு வர முடியாது என்று கூறியவர்களும் தயவு கூர்ந்து வர வேண்டும்... வர வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாக நான் அழைப்பு விடுக்கிறேன்.
இதில் கௌரவம் பார்க்காதீர்கள். இவன் என்ன அழைப்பது, நாம் என்ன செல்வது என்று நினைக்க வேண்டாம். இது தமிழ்நாட்டின் பிரச்சினை. அதைச் சிந்தித்துப் பார்த்து, நீங்கள் வர வேண்டும் என்று இந்த நேரத்தில் அழைப்பு விடுக்கிறேன்.
நம்முடைய கௌதமன் அவர்கள் இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அடுத்து அரசு நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டும். பிறகு, கௌதமன் ஏற்பாடு செய்திருக்கும் இன்னொரு நிகழ்ச்சி இருக்கிறது. மாவட்டக் கழக அலுவலகக் கட்டடத்தைத் திறந்து வைத்து, அண்ணா சிலை - கலைஞர் சிலையைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கும் செல்ல வேண்டும். நம்முடைய கௌதமன் எவ்வளவு சாமர்த்தியசாலி என்பதற்கு ஒரு உதாரணம், திருமண விழாவை மட்டுமல்ல, கட்சி நிகழ்ச்சியையும் சேர்த்து ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்வார்கள், ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் வல்லவர் நம்முடைய கௌதமன் அவர்கள்.
அந்த உணர்வோடு இந்தத் திருமணத்தை இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட திருமணத்தில் நானும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். மணமக்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்பது, நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் - நம்முடைய தமிழ்மொழிக்குச் செம்மொழி என்கிற தகுதியைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். எனவே, பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அப்படிப்பட்ட செம்மொழியில் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள் என்ற அன்பான வேண்டுகோளை வைத்து, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியது போல “வீட்டிற்கு விளக்குகளாய், நாட்டிற்குத் தொண்டர்களாய்” மணமக்கள் வாழுங்கள்... வாழுங்கள்... வாழுங்கள் என்று வாழ்த்தி, மணவிழா கண்டிருக்கும் உங்களை மீண்டும் ஒருமுறை வாழ்த்தி விடைபெறுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.








