திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 72 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது இந்தி திணைப்பை எதிர்ப்போம்,மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி.. அணணா வழியில் அயராது உழைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழங்கினார். பின்னர் நினைவிடத்தில் பணியாற்றக்கூடிய 105 ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு கோபாலபுரம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சிஐடி காலனிக்கு சென்று முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர் மறைந்த முரசொலி செல்வம் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
பிறகு அண்ணா அறிவாலயம் வருகை தந்து கழக தொண்டர்களின் வாழ்த்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்று வருகிறார். நீண்ட வரிசையில் நின்று கழக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், பொதுமக்கள் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக ”தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும்எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம்!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்" என கழக தொண்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.