முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தொழில்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மேலும் ஒரே மாவட்டத்தில் தொழில்துறை குவிந்துவிடாத வகையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், தொழிநிறுவனங்கள் நிறுவப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இரட்டை பாய்ச்சல் வேகத்தில் முன்னேறி, நாட்டின் முதல் மாநிலமாக உள்ளதாக பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி பாராட்டியுள்ளார். தமிழ்நாடு அரசை பாராட்டும் இவரது வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூச வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், ”இது என்னுடைய சொந்த ஊர், இங்கு திரும்பி வருவது என் குழந்தைப் பருவ வீட்டிற்கு திரும்பி வருவது போல் உள்ளது. சென்னை மிகப்பெரிய அளவில் மாறிவிட்டது. நான் வளர்ந்த சென்னை, அமைதியான, மிகவும் இனிமையான நகரமாக இருந்தது.
இன்றைய சென்னை ஒரு பரபரப்பான பெருநகரம் எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள், பரபரப்பாக இயங்கும் மக்கள், ஏராளமான புதிய நிறுவனங்கள், உலகில் நீங்கள் விரும்பும் எதுவும் சென்னையில் கிடைக்காமல் இருக்காது. சென்னை உண்மையிலேயே பரபரப்பான பெருநகரமாக மாறிவிட்டது.
தமிழ்நாடு இரட்டை பாயச்சல் வேகத்தில் முன்னேறி, நாட்டின் முதல் இடத்தில் உள்ளது. தொழிலாளர்களில் பெண்களின் பங்கு மிகவும் அதிகமாக இருப்பது மனதைக் கவருகிறது. கல்வியும் குழந்தை பராமரிப்பும் உயர்வாக உள்ளன. தமிழ்நாட்டில் ஏதோ மாயாஜாலம் நடக்கிறது. நான் திரும்பி வந்து பார்க்கும்போது, சென்னை மற்றும் தமிழ்நாட்டை பற்றி பெருமையாக உணர்கிறேன்" என தெரிவித்துள்ளார்.