தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகள், ஒன்றிய அரசின் செயல்திட்டங்களால் நாளுக்கு நாள் பறிக்கப்பட்டு வரும் நிலையில், மற்றொரு பறிப்பு செய்தியை தீர்ப்பாக வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
மருத்துவ மேல் படிப்பில், குடியிருப்பு அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை ரத்து செய்ததே உச்சநீதிமன்றம் வழங்கிய, அந்த உரிமை பறிப்பு தீர்ப்பாக அமைந்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மருத்துவ கட்டமைப்பு அதிகமாக இருக்கிறது. மேலும், எம்.டி, எம்.எஸ், எம்.டி.எஸ் போன்ற படிப்புகளுக்கான சேர்க்கை இடங்களும் தமிழ்நாட்டின் தான் அதிகமாக உள்ளன.
அந்த வகையில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இதுவரை 50% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1,207 மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். அனைத்து இந்திய இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1,087 பேர் ஆண்டுதோறும் பயன்பெற்று வருகிறார்கள்.
ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தற்போது வழங்கப்பட்டு வரும் இடங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோகும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால், மாநில உரிமைகளும் பறிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மருத்துவ மாணவர் சேர்க்கையை முற்றிலுமாக ஒன்றிய அரசிடம் தாரைவார்க்கும் வகையில் உள்ள நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது.
சமூகநீதியை கடைப்பிடிப்பதில் இடஒதுக்கீடு என்பது இன்றியமையாதது என்பதனை உறுதிசெய்யும் பொருட்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி தமிழ்நாடு அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்தார்.