தமிழ்நாடு அரசு 2030-க்குள் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த முக்கியமான இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதேவேளையில் மாநிலத்தின் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்ற முக்கியமான இலக்கை அடையச் சென்னை மட்டும் அல்லாமல் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் புதிய முதலீடுகளையும், புதிய தொழிற்பூங்காக்களையும் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சிப்காட் அமைப்பு மாநிலத்தில் அதிகம் வளர்ச்சியடையாத சிவகங்கை மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சியைத் மேம்படுத்த புதிய தொழிற்பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளது.
இப்புதிய சிப்காட் தொழிற்பூங்கா மதுரை -சிவகங்கை மாவட்டத்திற்கு இடையே இலுப்பைக்குடி, கிளத்தாரி மற்றும் அரசனூர் கிராமங்களை உள்ளடக்கிய 775 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவிலான தொழில் பூங்காவை நிறுவ சிப்காட் திட்டமிட்டுள்ளது.
ரூ.342 கோடி முதலீட்டில் இந்த சிப்காட்தொழிற் பூங்காவை அமைக்கப்பட உள்ளது. இது உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு மற்றும் வசதிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.
இந்த சிப்காட் மதுரை - சிவகங்கை மாவட்டங்களுக்கு மத்தியில் அமைய உள்ள காரணத்தல் இரு மாவட்டத்திற்கும் பலன் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே மதுரையில் ELCOT ஐடி பார்க் செயல்படுத்தப்பட்டு வரும் வேளையில், தொழிற்துறைக்கான இந்த புதிய திட்டம் மதுரை - சிவகங்கை மாவட்டத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கும். இந்த தொழில் பூங்காவில் சுமார் 36,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாகும்.
இந்த தொழிற்பூங்கா, ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் டெக்ஸ்டைல் போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும். மேலும், இப்புதிய சிப்காட் தொழிற்பூங்காவின் வளர்ச்சி லாஜிஸ்டிக்ஸ், பேக்கேஜிங் மற்றும் கிடங்கு உள்ளிட்ட துணைத் தொழில்களின் வளர்ச்சியையும் தூண்டும்.இந்த புதிய சிப்காட் தொழில் பூங்கா அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளது.