இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 06 ஆம் தேதி திங்களன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் வேடச்சந்தூர் உறுப்பினர் காந்திராஜன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகளிர் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அப்போது, ”மாநிலம் முழுவதும், 1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறாத மகளிர், புதிதாக விண்ணப்பிக்க மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.