தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சென்னையில் பல்கலைக்கழக மாணவி ஒருவர்மீது நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பதிலுரை:-
பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே கொண்டு வரப்பட்டிருக்கக்கூடிய கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பல்கலைக்கழகத்தினுடைய பெயரைச் சொல்லி நீங்களெல்லாம் பேசியிருக்கிறீர்கள். ஆனால், நான் அந்தப் பல்கலைக்கழகத்தின் பெயரைச் சொல்லி, அந்தப் பெயருக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால், எங்களையெல்லாம் ஆளாக்கியவர் அவர். அந்த உணர்வோடு, அந்தப் பெயரைத் தவிர்த்து, இங்கே பதிலளிக்க விரும்புகிறேன்.
சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்டிருக்கக்கூடிய பாலியல் வன்கொடுமை என்பது மாபெரும் கொடூரம். அதை யாராலும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து, இந்த அவையிலே நம்முடைய உறுப்பினர்கள்
ஜெகன்மூர்த்தி , வேல்முருகன் , ரா.ஈஸ்வரன் அவர்கள்,சதன் திருமலைக்குமார் , மாரிமுத்து , நாகைமாலி , சிந்தனைச்செல்வன், எம்.ஆர்.காந்தி அவர்கள், ஜி.கே.மணி,கு. செல்வப்பெருந்தகை , உதயகுமார் ஆகியோர் கருத்துக்களையெல்லாம் இங்கே எடுத்துப் பேசி இருக்கிறீர்கள். இதுகுறித்து உண்மையான அக்கறையோடு பல உறுப்பினர்கள் பேசியிருக்கிறீர்கள். இதைப் பயன்படுத்தி இந்த ஆட்சியின் மீது தவறான எண்ணத்தை உருவாக்குவதற்காகவும் சில உறுப்பினர்கள் பேசியிருக்கின்றார்கள். சிலர் அல்ல; ஒரு உறுப்பினர் பேசியிருக்கிறார். யாருக்கு எந்த நோக்கம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று, அவருக்கு சட்டப்படி நியாயம் பெற்றுத் தரக்கூடிய காரியத்தைத் தவிர, தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதைத் தெளிவாக, உறுதியாக, ஆணித்தரமாக முதலிலேயே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
குற்றம் நடந்த பிறகு, ஒருவேளை குற்றவாளியை உடனடியாகக் கைது செய்யாமல் விட்டிருந்தாலோ அல்லது குற்றவாளியை காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ அரசை நீங்கள் குறை சொல்லலாம். ஆனால், சில மணிநேரத்துக்குள் குற்றவாளியை கைது செய்தபிறகும், குற்றம் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை எல்லாம் திரட்டியபிறகும் அரசைக் குறை சொல்வது, அரசியல் ஆதாயத்திற்குத்தானே தவிர, உண்மையான அக்கறையோடு செய்யப்படுவது இல்லை என்று இந்த மாமன்றத்திலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, 24.12.2024 அன்று பிற்பகல் சென்னை மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உடனடியாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மறுநாள் காலையிலேயே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஞானசேகரன் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இது காவல் துறை எடுத்த துரிதமான, சரியான நடவடிக்கை.
இருந்தாலும், எதிர்க்கட்சி என்ன குற்றச்சாட்டு சொல்கிறார்கள்? முதல் தகவல் அறிக்கை கசிந்தது தொடர்பாகப் பேசுகிறார்கள். அதற்குக் காரணம் யார்? ஒன்றிய அரசின்கீழ் செயல்படுகிற N.I.C. (National Informatics Centre - தேசிய தகவல் மையம்). அது நம்முடைய காவல் துறையால் உடனடியாக சுட்டிக்காட்டப்பட்டு, அதற்குப்பின்னால் அந்தத் தொழில்நுட்பக் கோளாறும் சரிசெய்யப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக அந்த நிறுவனமும் விளக்கம் கொடுத்து, N.I.C.-யிலிருந்து கடிதமும் எழுதியிருக்கிறார்கள்.
அடுத்து, பாதுகாப்பு இல்லை; கேமரா இல்லை என்று பொத்தாம்பொதுவாச் சொல்கிற குற்றச்சாட்டில் உண்மையில்லை. சம்பவம் நடந்த வளாகத்தைச் சுற்றியிருக்கிற பகுதிகளிலிருந்த கண்காணிப்புக் கேமிராக்கள் உதவியோடதான் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மூன்றாவது குற்றச்சாட்டு, முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்துக்கொண்டு, “யார் அந்த சார்?” என்று கேட்கிறார்கள். மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுதான் இப்பொழுது இந்தப் புகாரை விசாரிக்கிறார்கள். கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தப் புலன் விசாரணையில் வேறு யாரேனும் குற்றவாளிகள் இருக்கிறார்களா என்பது தெரிய வந்தால், அது யாராக இருந்தாலும் சரி, மீண்டும் மீண்டும் சொல்கிறேன்; அது யாராக இருந்தாலும் சரி; அவர்கள் மீது தயவு தாட்சண்யமே இல்லாமல் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இதை இந்த அவைக்கு 100 சதவீதம் உறுதியோடு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது.
அதுமட்டுமல்ல; இன்னும் முக்கியமானது, இந்த வழக்கில் விரைந்து விசாரணை மேற்கொண்டு, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படும். அதோடு, சிறப்பு நீதிமன்றம் மூலம் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து, குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும் என்பதை இந்த அவைக்கு நான் மீண்டும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் எதிர்க்கட்சிகளைக் கேட்க விரும்புவது - “யார் அந்த சார்?” என்று சொல்லி குற்றம்சாட்டுகிறீர்கள். உண்மையாவே உங்களிடம் அதற்கான ஆதாரம் இருந்தால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டிருக்கின்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சென்று அதைக் கொடுங்கள்; அதைச் சொல்லுங்கள். அதை யார் தடுக்கப் போகிறார்கள்? அதைவிட்டுவிட்டு, ஒரு மாணவி சம்பந்தப்பட்ட சென்சிட்டிவான வழக்கில் வீண் விளம்பரத்துக்காக, குறுகிய அரசியல் இலாபத்துக்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம் என்று உங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அரசைப் பொறுத்தவரைக்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும். இந்த ஒரு சம்பவத்தை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாமல் இருப்பது போல ஒரு சதித் தோற்றத்தை உருவாக்க பலர் முயற்சி செய்கிறார்கள். நான் நிச்சயமாகச் சொல்கிறேன்; இது மக்கள் மத்தியில் நிச்சயமாக எடுபடாது. ஏனென்றால், நமது அரசு பொறுப்பேற்றதிலிருந்து பார்த்திருப்பீர்கள் - பெண்கள் பாதுகாப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வழக்குகளில் 86 விழுக்காட்டிற்கு மேலாக, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
* பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பைப் பற்றி
2 இலட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கோம்.
* சத்யா என்ற பெண்ணை இரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் மிகக்குறுகிய காலத்திலே உச்சபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்திருக்கிற அரசு இந்த அரசுதான்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு எதிராக இந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்ட மனமில்லையென்றாலும் பரவாயில்லை - வீண்பழியைச் சுமத்தாமல் இருந்தால், அதுவே போதும். மாண்பமை உயர்நீதிமன்றமே, எதிர்க்கட்சி வழக்கறிஞரைப் பார்த்து, “பெண்களின் பாதுகாப்பு தொடர்பான உண்மையான அக்கறையோடு செயல்படுவதை விட்டுவிட்டு, இந்த வழக்கில் ஏன் அரசியல் கண்ணோட்டத்தோடு செயல்படுகிறீர்கள்?” என்று கேட்டதை நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். நீதிமன்ற அறிவுரையைப் பின்பற்றி, வீண் அரசியலைத் தவிர்த்தாலே பெண்கள் பாதுகாப்பிற்குப் பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இன்றைக்குத் தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மாநிலமாகத் திகழ்கிறது. இந்த அரசு அமைந்ததிலிருந்து நாங்கள் எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கைகள்தான் அதற்குக் காரணம். இதுதொடர்பான ஒரு புள்ளிவிவரத்தையும் நான் சொல்ல விரும்புறேன்.
* இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான முதல் 10 மாநகரங்களில், நம்முடைய கோவையும், சென்னையும் இருக்கிறது.
* பெண்கள் அதிகம் பேர் வேலைக்குச் செல்லும் மாநிலமாக தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது.
* பத்து இலட்சத்துக்கும் உட்பட்டிருக்கக்கூடிய மக்கள்தொகை உள்ள சிறிய நகரங்களில் திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய ஐந்து நகரங்களும் முதல் தர வரிசையில் பாதுகாப்பான நகரங்களாக இருக்கிறது.
சென்னை மாணவி விவகாரத்தில் மட்டுமல்ல; எந்தப் பாலியல் வன்கொடுமை புகாரிலும் இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் இல்லை; விலகி நிற்பதும் இல்லை. மனசாட்சி இல்லாமல், பெண்களின் பாதுகாவலர்கள் மாதிரி பேசுபவர்கள் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். (மேசையைத் தட்டும் ஒலி) பொள்ளாச்சியில் நடந்தது ஒரு பெண் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றம் இல்லை; தொடர்ச்சியாக பல பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமைகளை இரண்டு வருடங்களாக ஒரு கும்பல் செய்து வந்திருக்கிறது. அன்றைய அ.தி.மு.க ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சி.பி.ஐ.-வசம் இந்த வழக்கு சென்ற பிறகுதான் உண்மைகள் வெளிச்சத்துக்கே வந்தது.
பாதிக்கப்பட்ட பல பெண்களில் ஒருவர், தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி, தன்னுடைய அண்ணனிடம் சொல்கிறார்.
பிரச்சினைக்குரிய நான்கு பேரையும் அவரே பிடித்துக் கொண்டு வந்து பொள்ளாச்சி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கின்றார். பாலியல் தொல்லை, ஆபாசமாக படம் எடுத்தல், செயின் பறிப்பு என்று புகார் கடிதம் தரப்படுகிறது. வீடியோக்கள், செல்போன்கள் ஆகியவற்றுடன் 4 குற்றவாளிகளையும் இவர்கள் ஒப்படைக்கிறார்கள். இதனைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதியவில்லை; எல்லாரையும் விடுவித்துவிட்டார்கள். இதுதான் அன்றைய முதல்வர் "சார்" ஆட்சியில் சட்டம்-ஒழுங்கின் இலட்சணம்!
அதுமட்டுமா? பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை அப்படியே குற்றம் செய்தவர்களிடமே கொடுத்து விட்டார்கள். குற்றம் செய்தவர்களிடம் அதைக் கொடுத்து விட்டார்கள். இதையடுத்து அ.தி.மு.க பிரமுகர் பார் நாகராஜன் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனைத் தாக்குகிறார். அந்தப் புகார் மீதும் நடவடிக்கை எடுக்காத அரசுதான் அ.தி.மு.க. அரசு.
பிரச்சினை பெரிதாகிறது என்று தெரிந்ததும், இதிலே சம்பந்தப்பட்ட முக்கிய நபரான திருநாவுக்கரசை கைது செய்யாமல், ஏதோ மூன்று பேரை கைது செய்து கணக்கை முடிக்கப் பார்த்தார்கள். ஆனால், சி.பி.ஐ. விசாரணையில், பொள்ளாச்சி சம்பவம் முழுவதுமே அ.தி.மு.க. பிரமுகர்களால்தான் நடத்தப்பட்டது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இவர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான், இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போன்று அன்றைய அ.தி.மு.க. அரசு ஒரு பெரிய நாடகம் ஆடியது. நீங்கள் உட்காருங்கள். நீங்கள் பேசியதை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம் அல்லவா? அதைப்போல் நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள். இதனால்தான் “பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி” என்று நான் அப்பொழுதே சொன்னேன்.
இப்படி, பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய 'சார்'ங்க எல்லாம் இப்பொழுது பேட்ஜ் அணிந்துகொண்டு உட்கார்ந்திருந்து, இப்பொழுது பாதியிலேயே எழுந்து போய்விட்டார்கள். இதுபோன்று 100 சார் கேள்விகளை அ.தி.மு.க.-வைப் பார்த்து என்னால் கேட்க முடியும். ஒரு முன்னாள் முதலமைச்சர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர், தன் பொறுப்பையும் தகுதியையும் மறந்து, பேட்ஜ் அணிந்து வந்தது, அரசியலில் எந்தளவுக்கு தாழ்ந்து போகவும் தயாராக இருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திட அ.தி.மு.க. ஆட்சியில் 12 நாட்கள் ஆனது. ஆனால், சென்னை மாணவி வழக்கிலே புகார் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை போடப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சில மணி நேரத்திலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஏனோ, இவற்றையெல்லாம் அரசியல் இலாபத்திற்காக, அந்த நோக்கத்திற்காக மறைக்கிறார்கள்.
அதேபோன்று, இந்த வழக்கு பற்றி பா.ஜ.க.-வினர் பொதுவெளியில் பேசியிருக்கிறார்கள்; தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க. கதைகளை எல்லாம் சொல்லி, இந்த அவையின் மாண்பைக் குறைக்க நான் விரும்பவில்லை. அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும்போது, பொறுப்பினை உணர்ந்து பேச வேண்டும்.
உயர்நீதிமன்றம் அமைத்திருக்கிற சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை முழு வீச்சில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்தால், அது யாராக இருந்தாலும், எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், கடும் நடவடிக்கையை நிச்சயமாக, உறுதியாக நாங்கள் எடுப்போம் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட மாடல் ஆட்சி, மகளிருக்கான ஆட்சி! கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத்தைத் தொடங்கி, கோடிக்கணக்கான மகளிருக்கு உரிமைத் தொகையை உறுதி செய்து, கல்லூரிக்கு வரும் அரசுப் பள்ளி மாணவியரை புதுமைப் பெண்களாக வளர்த்தெடுத்து வருகின்ற ஆட்சி. மகளிருக்காகவே நாள்தோறும் திட்டங்களைத் தீட்டி, அவர்களுடைய பேராதரவோடு செயல்பட்டு வருகிற இந்த அரசு மீது, அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அதன்மூலமாக களங்கம் ஏற்படுத்தலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது ஒருபோதும் எடுபடாது, எடுபடாது, எடுபடாது!
இறுதியாக, நான் உங்களிடம் பணிவோடு கேட்டுக்கொள்வது, தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, உயர்கல்வி கற்க வருகிற மாணவிகளை அச்சுறுத்தி, அவர்களுடைய கல்வியைக் கெடுத்துவிடாதீர்கள் என்பதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள் என்று தெரிவித்து, அமர்கிறேன்
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.