
2025-ம் ஆண்டு புத்தாண்டு உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது. அதிலும் குறிப்பாக சென்னையில் வழக்கம் போல பல்வேறு இடங்களிலும் கொண்டாட்டங்கள் களைகட்டியது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுப்பதற்காக 425 இடங்களில் தற்காலிக வாகனத் தணிக்கை சோதனை சாவடிகள் சென்னை பெருநகர காவல் துறையால் அமைக்கப்பட்டிருந்தது.

இந்தச் சோதனை சாவடிகளில் போலீசார் மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில் மது போதையில் வாகனம் இயக்கியது, அதிவேகமாக வாகனம் இயக்கியது, உரிய உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது உட்பட பல்வேறு இடங்களில் 245 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை சென்னை பெருநகரப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் பதிவின் அடிப்படையில் வாகன ஓட்டுனர்களுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.








