இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தளவாய் பாளையம், அருள்மொழி பேட்டை, மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க வேண்டும் என்றே விவாத பொருளாக மாற்றியுள்ளது. கச்சத்தீவு வரலாறு தெரியாமல் பேசி வருகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக வாழ்ந்தவர் கலைஞர். 10 வருடங்களாக ஆட்சி செய்கின்ற பா.ஜ.க கச்சத்தீவை மீட்டுக் கொண்டு வர வேண்டியதுதானே?
பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மீனவர்கள் பிரச்சனை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்தது, இப்போது மீனவர்கள் படகுகளை பறிமுதல் செய்வது மீனவர்களைத் தாக்குவது என பிரச்சனைகள் அதிகமாக உள்ளது, இலங்கை சென்ற போது பிரதமர் மோடி மீனவர்கள் தாக்குதல் குறித்துப் பேசி இருக்கலாமே?
தற்போது தேர்தல் என்பதால் இதெல்லாம் அவர்களது கண்ணுக்குத் தெரிகிறது, மக்களும்- மீனவர்களும் பா.ஜ.கவை பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள், இந்த அரசியல் வேஷம் தேர்தல் வேஷம் நமது பெரியார் மண்ணில் எடுபடாது" என தெரிவித்துள்ளார்.