தமிழ்நாடு

“தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமருக்கு மக்கள் மேல பாசம் பொங்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்த ரெண்டு திட்டங்களும் மகளிர் வாழ்வுல ஒளிவிளக்காக திகழ்ந்து கொண்டிருக்கிறது! பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற சட்டம் அதை இயற்றியவர் தலைவர் கலைஞர்.

“தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமருக்கு மக்கள் மேல பாசம் பொங்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.03.2024) தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில்,  தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கும் விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “சேலம் - தருமபுரி – கிருஷ்ணகிரி என்று மூன்று மாவட்டங்களுக்குமான முத்தான விழா இது!

’முத்துக்கள் மூன்று’ என்று சொல்லக்கூடிய வகையில் நேரு – பன்னீர்செல்வம் - சக்கரபாணி ஆகியோரது செயல்பாடுகள் இதில் அடங்கியிருக்கிறது! இவர்களுடைய செயல்பாடுகளால் இந்த மாவட்டங்களின் மக்களின் அன்புக்கு அவர்கள் சொந்தமாகிவிட்டார்கள். 

கட்சிப் பணியாக இருந்தாலும் - ஆட்சிப் பணியாக இருந்தாலும் – அதே வேகத்துடனும், விவேகத்துடனும் செய்து முடித்து காட்டுகிற ஆற்றல் உரியவர்களாக இருக்கக்கூடியவர்கள் அவர்கள்.  இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிற அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுக்கு துணை நிற்கக்கூடிய அனைவருக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும், உங்களுக்கும் என்னுடைய அன்பார்ந்த  வாழ்த்துகளையும், வணக்கத்தையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

புலவர் அவ்வையாரின் ஆயுள் வளர்ந்தால், தமிழ் வளரும் என்று எண்ணி, நெல்லிக்கனியை தந்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் ஆட்சி செலுத்திய, தமிழ் ஊரான தகடூர் தான், இந்த தருமபுரி மண்!

தருமபுரி என்று சொன்னதுமே என்னுடைய நினைவுக்கு வருவது, ஒகேனக்கல்!

1928 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு, 2008-ஆம் ஆண்டு, உள்ளாட்சித் துறை அமைச்சரான நான், ஜப்பான் நாட்டிற்குச் சென்று, நிதி வசதிகளையும், திட்டமிடுதல்களையும் செய்தேன்.

முதலமைச்சர் கலைஞர் அந்த திட்டத்தை அன்றைக்கு தொடங்கி வைத்தார். ஆனால், ஆட்சி மாறியதும், காட்சி மாறியது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டார்கள். உடனே நானே இங்கே நேரில் வந்து போராட்டம் நடத்தினேன். அதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த வகையில், தருமபுரி மாவட்டத்து மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க காரணமானவன் நான் என்ற மகிழ்ச்சியோடு உங்களிடையே நான் நின்று கொண்டிருக்கிறேன்.

“தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமருக்கு மக்கள் மேல பாசம் பொங்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அவ்வையின் வரலாற்றில் தருமபுரிக்கு எப்படி பங்கு இருக்கிறதோ, அதேபோல, தமிழ்நாட்டு மகளிர் முன்னேற்றத்திலேயும் தருமபுரிக்கு முக்கிய பங்குண்டு!

1989-ஆம் ஆண்டு இதே தருமபுரியில் தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்ற அமைப்பை தமிழினத் தலைவர் கலைஞர் தொடங்கி வைத்தார். அவர் பேரால் ஏராளமான மகளிர் வாழ்வில் மகிழ்ச்சியை உருவாக்கியிருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கின்ற முகாமும் இங்கேதான் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த ரெண்டு திட்டங்களும் மகளிர் வாழ்வுல ஒளிவிளக்காக திகழ்ந்து கொண்டிருக்கிறது! பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற சட்டம் அதை இயற்றியவர் தலைவர் கலைஞர்.

இது பெண்ணினத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வழங்கிய மாபெரும் அதிகாரக் கொடை!  அதன் அடுத்தகட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்! 

உரிமைத் தொகை வழங்குவோம் என்று தேர்தலில் சொன்னோம்; அதை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். ஏனென்றால், உங்கள் எல்லாருக்குமே தெரியும், இது, “சொன்னதைச் செய்யும் ஆட்சி!”

இந்த திட்டத்தால் இன்றைக்கு ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு, மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்றால், அவர்களை பொருளாதார அதிகாரம் உள்ளவர்களாக மாற்றியிருக்கிறோம் என்று பொருள்!

கொஞ்ச நாளைக்கு முன்னால், டிவி-யில் ஒரு பேட்டி பார்த்தேன். இந்த உரிமைத்தொகைய பெற்ற சகோதரி ஒருவர், “இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர்” என்று சொன்னார்கள். அப்போது எனக்கு என்ன தோன்றியது என்றால், நம்ம திராவிட மாடல் அரசுக்கும் தமிழ்நாட்டு மகளிருக்கும் இந்த திட்டத்தால் ஏற்பட்டுள்ள குடும்ப பாசத்தை எண்ணி மனம் நெகிழ்ந்து போனேன்.

இது மட்டுமல்லாமல், இந்த திராவிட மாடல் அரசு இதுவரை நிறைவேற்றியிருக்கிற திட்டங்கள பட்டியலிட வேண்டும் என்றால், நாள் முழுக்க நான் பேசிக் கொண்டே இருக்கவேண்டும், சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும். அதனால், முத்தான சில திட்டங்களை பற்றி மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

"விடியல் பயணத் திட்டம்" மூலமாக நமது சகோதரிகள் மாதந்தோறும் 888 ரூபாய் வரை சேமிக்கிறார்கள்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில்  நாள்தோறும் 16 லட்சம் குழந்தைகள் வயிறார சாப்பிடுகிறார்கள்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் "புதுமைப்பெண்" திட்டம் மூலமாக மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் போய்ச் சேருகிறது.

“தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமருக்கு மக்கள் மேல பாசம் பொங்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இரண்டே ஆண்டில், ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமாக
28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். 

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் மூலமாக 24 லட்சத்து 86 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் பயனடைந்திருக்கிறார்கள்.

2 லட்சம் உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்பு கொடுத்திருக்கிறோம். உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தில் 30 லட்சம் முதியோரும் 5 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் மாதந்தோறும் பயனடைந்து கொண்டு வருகிறார்கள்.

‘நம்மைக் காக்கும் 48’ திட்டம் மூலமாக 2 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

"மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தால் ஒரு கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

‘முதல்வரின் முகவரி திட்டம்’, ’மக்களுடன் முதல்வர் திட்டம்’ ஆகியவற்றின் மூலமாக 23 லட்சத்து 9 ஆயிரம் பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

இந்த திட்டங்களின் பயன்கள் எல்லாம் முறையாக சென்று சேருகிறதா என்று உறுதிசெய்ய இப்போது “நீங்கள் நலமா?” திட்டத்தைத் தொடங்கி வைத்து, நானே மக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.

மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதற்காக இப்படி அடுத்தடுத்து திட்டங்களை அறிவித்து, உடனுக்குடன் தீர்வு காணுகின்ற அரசுதான், இந்த திராவிட மாடல் அரசு! என்பதை பெருமையோடு நான் கம்பீரமாக சொல்ல விரும்புகிறேன். அதனால்தான், இந்த அரசை மக்களின் மனச்சாட்சி என்று சொன்னேன்.

இப்படி மகளிர் – மாணவர்கள் – இளைஞர்கள் – முதியோர் –உழவர்கள் – உழைப்பாளர்கள் என்று தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு குடும்பமும் பயனடைகின்ற வகையில் திட்டங்களை பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறோம்.

இப்படி எந்த அரசாவது செயல்பட்டதா? பத்தாண்டுகளாக தமிழ்நாட்டையே சுரண்டினார்களே, அவர்களால், இப்படியெல்லாம் ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்ற முடிந்ததா?

உங்களுக்காக பாடுபட முடிந்ததா? அவர்களால் இப்படி பட்டியலிட முடியுமா?  முடியாது! ஏனென்றால், இந்த தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மக்களுக்கான ஒகேனக்கல் திட்டத்தையே முடக்கியதுதான் அதிமுக ஆட்சியின் சாதனை! சாதனைதான் இல்லையென்றால், அவர்களால் ஏற்பட்ட வேதனை உங்களுக்கே நன்றாக தெரியும்!

வேளாண் கல்லூரி மாணவிகளின் குடும்பத்துக்கு ஏற்பட்ட வேதனையை மீண்டும் விரிவாக நான் இங்கே சொல்ல விரும்பவில்லை! உங்களுடைய திராவிட மாடல் அரசு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறது!

“தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமருக்கு மக்கள் மேல பாசம் பொங்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தருமபுரி மாவட்டத்துக்கான திட்டங்கள் சொல்ல வேண்டும் என்றால், முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்த ‘வள்ளல் அதியமான் கோட்டம்’ 1 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டிருக்கிறது.

விடுதலைப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு தலைவர் கலைஞர் மணிமண்டபம் எழுப்பினார். அந்த தியாகியின் விருப்பமான பாரத மாதா நினைவாலயம் இந்த தனயனின் ஆட்சியில்தான் திறக்கப்பட்டது!

அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்–ஒருங்கிணைந்த பேறுகால அவசர கிசிச்சை மற்றும் சிசு தீவிர கிச்சை பராமரிப்பு மையத்தை திறந்து வைத்திருக்கிறேன்.

பேருந்து வசதியே இதுவரை இல்லாத 8 மலைக் கிராமங்கள் பயன்பெற வத்தல்மலைக்கு முதன்முதலாf புதிய பேருந்து கடந்த ஆண்டு தொடங்கி வைத்தேன்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகள் 7 ஆயிரத்து 890 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும். 

  17 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தருமபுரியில், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடப் பணிகள் முடிவடைய போகிறது.

மொரப்பூர் – தருமபுரி புதிய அகல ரயில் பாதைக்கு நில எடுப்புப் பணிகள் நடைபெறுகிறது.

இதேமாதிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு சொல்ல வேண்டும் என்றால், மூன்றாண்டுகளில், ஊரக வளர்ச்சித் துறை மூலம் குடியிருப்புகள், ஊரக உட்கட்டமைப்பு பணிகள், ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பல்வேறு பேரூராட்சிகளுக்கு உட்கட்டமைப்பு பணிகள், பொதுப்பணித்துறை கட்டடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் என்று 927 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளும் – திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று மகிழ்ச்சியோடு நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அடுத்த, சேலம் மாவட்டத்துக்கான பணிகள் சொல்லவேண்டும் என்றால், ஏற்கனவே சீலநாயக்கன்பட்டியில் நடந்த அரசு விழாவில் 1,242 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை அறிவித்தேன். அதுமட்டுமில்லாமல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மினி டைடல் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.

அரியாகவுண்டம்பட்டியில் கொலுசு உற்பத்தியாளர்களுக்கான பன்மாடி உற்பத்தி மையத்துக்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

ஜாகீர் அம்மாபாளையத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க போகிறோம்.

சேலம் அரசு சட்டக் கல்லூரிக்கான விடுதிகளுடன் கூடிய நிரந்தரக் கட்டடத்தையும் – ஈரடுக்கு பேருந்து நிலையத்தையும் திறந்து வைத்திருக்கிறேன்.

போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி, மூக்கனேரி ஆகியவை புனரமைக்கப்பட்டிருக்கிறது.

பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைய ஏற்று, அம்மாப்பேட்டை பகுதியில் இரயில்வே மேம்பால பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

“தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமருக்கு மக்கள் மேல பாசம் பொங்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இதன் தொடர்ச்சியாகதான், இந்த நிகழ்ச்சி மூலமாக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களுக்கு 560 கோடியே 23 இலட்ச ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்திருக்கிறேன்.

8 ஆயிரத்து 736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறேன்.

இன்னும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியிட விரும்புகிறேன்.

வெண்ணாம்பட்டி சாலையையும், தருமபுரி மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கின்ற வகையில் பாரதிபுரத்தில் 36 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

வாச்சாத்தி முதல் கலசப்பாடி வரையிலான மலைப்பகுதிகளில்
12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் ஐந்து சமுதாய நலக்கூடங்கள் நான்கு கோடியே நான்கு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

வாச்சாத்தி கொடுமையை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்! எந்த ஆட்சியில் நடந்தது என்றும் மறந்திருக்க மாட்டீர்கள்! ஆனால், பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு திராவிட மாடல் ஆட்சியில்தான் விடியல் பிறந்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட 18 நபர்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் என்று மொத்தமாக 1 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டிருக்கிறது. மற்ற வேலைவாய்ப்புகளும்  விரைவில் வழங்கப்படும்.

இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கான அறிவிப்புகளை வெளியிடுகிறேன்…

தொழிலாளர்கள் நிறைந்த ஓசூர் மற்றும் அதை சுற்றி இருக்கின்ற பகுதிகளில், அவர்களுடைய நலனுக்காக, நடமாடும் மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்துக்கு 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் அமைக்கப்படும்.

தளி ஊராட்சி ஒன்றியத்தில் 10 கிலோ மீட்டருக்கு சாலை உட்பட, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 75 சாலைகள் சுமார் 78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 92 சாலைகள், 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28 சிறுபாலங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

தேன்கனிக்கோட்டை வட்டத்தில் யானை தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் எஃகு கம்பி கயிறு வேலி அமைக்கப்படும்.

கெலமங்கலம் அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் 100 மாணவர்கள் தங்கும் வகையில், ‘புதிய பிற்படுத்தப்பட்டோர் நல பல்தொழில்நுட்ப கல்லூரி மாணவர் விடுதி’ தொடங்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்துல 3 சமுதாய நலக்கூடங்கள்
2 கோடியே 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

கிராமப்புற பகுதிகளில், 5 துணை சுகாதார மையக் கட்டடங்களும், நகர்ப்புறத்தில், 2 துணை சுகாதார மையக் கட்டடங்களும் 3 கோடியே 15 லட்ச ரூபாய் செலவில் கட்டப்படும்.

உனிச்செட்டி  ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், பழங்குடியினருக்கான புதிய பிறப்பு காத்திருப்பு கூடம் அமைக்கப்படும்.

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் சத்துணவு மற்றும் மறுவாழ்வு மையம் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

ஊராட்சி ஒன்றியங்களில், 30 பொது விநியோக அங்காடிகள் 28 அங்கன்வாடி மையங்கள் 9 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

வன விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்நிலைகள் தூர்வாரும் திட்டம் தொடங்கப்படும்.

அடுத்து, சேலம் மாவட்டத்துக்கான அறிவிப்புக்களை வெளியிடுகிறேன்.

210 கிலோ மீட்டர் நீளத்தில் 79 கிராமச் சாலைகள், 21 உயர்மட்டப் பாலங்கள், 127 கிலோ மீட்டருக்கு 211 ஓரடுக்கு கப்பி சாலைகள்,

76 கிலோ மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கான்கிரீட் சாலை, 47 கிலோ மீட்டர் நீளத்துக்கு பேவர் பிளாக் அமைக்கும் பணிகள் ஆகியவை, 164 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

செட்டிசாவடி வளாகத்தில் இருக்கின்ற குப்பைமேடு ‘பயோ-மைனிங்’ அப்புறப்படுத்தும் பணிகள், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

நங்கவள்ளி குடிநீர் நீரேற்ற நிலையம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

சேலம் மாவட்டத்தில் 14 சமுதாய நலக்கூடங்கள் 11 கோடியே
46 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

சேலம் மாநகராட்சியில், தனி குடிநீர் திட்டத்தின்கீழ் உள்ள மோட்டார் பம்புகள் மற்றும் V.F.D–களை மறு சீரமைக்கும் பணி, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

தெரு நாய்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க, ’விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையம்’ கட்டும் பணி 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

இப்படி எப்போதும் உங்களுக்காகவே செயல்படுற அரசுதான், நம்முடைய திராவிட மாடல் அரசு!

அனைத்து மாவட்டங்களையும் சமமாக மதித்து நாம் செயல்படுகிறோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அப்படி மாநிலங்களை சமமாக நினைக்கின்றதா?

ஒன்றிய அரசு என்றால், எல்லா மாநிலங்களையும் மதிக்கணும்! வளர்க்கணும்! ஆனால், இன்றைக்கு ஒன்றியத்தை ஆளுகின்ற அரசு அப்படி செயல்படவில்லை!

மாநிலங்களையே அழிக்க நினைக்குது. மாநிலங்களை அழிக்கிறது மூலமாக நம்முடைய மொழியை – இனத்தை – பண்பாட்டை அழிக்கப் பார்க்கிறது.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானது நிதி. அந்த நிதி ஆதாரத்தை பறிப்பது மாநில வளர்ச்சிக்கான ஆக்சிஜனை நிறுத்துகின்ற மாதிரி! அதைத்தான் இப்போது செய்து கொண்டு இருக்கிறார்கள்.

“தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமருக்கு மக்கள் மேல பாசம் பொங்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

மாநிலங்கள் ஒன்றிணைந்ததுதான் ஒன்றிய அரசு! இதை உணராமல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

தேர்தல் நெருங்கி வருகிறது! மாண்புமிகு பிரதமரும் அடிக்கடி சுற்றுப்பயணம் வருகிறார்! இந்த சுற்றுப்பயணங்களைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள். இதை வெற்றுப் பயணங்களாகதான் பார்க்கிறார்கள். இதை சுற்றுப்பயணமாக பார்க்கவில்லை. இந்த பயணங்களால் ஏதாவது வளர்ச்சித் திட்டங்கள் இருக்கிறதா? 

  2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கே இப்போதுதான் கட்டுமானப் பணியை தொடங்கப் போவதாக நாடகம் நடத்துகிறார்கள். தேர்தல் முடிந்ததும் நிறுத்திடுவார்கள். 

தேர்தல் வருகிறது என்று சிலிண்டர் விலையை குறைத்ததுபோல அறிவிக்கிறார் பிரதமர். 10 ஆண்டுகளாக 500 ரூபாய்க்கும் மேல உயர்த்திட்டு, இப்போது 100 ரூபாய் மட்டும் குறைக்கிறது, அப்பட்டமான மோசடி வேலையில்லையா இது? இதைவிட மக்களை ஏமாற்றுகிற செயல் இருக்க முடியுமா?

சென்னையில் வெள்ளம் வந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத  பிரதமர் மோடி - தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி - இப்போது மட்டும் அடிக்கடி வருகிறாரே? என்ன காரணம்? தேர்தல் வரப் போகிறது. ஓட்டு கேட்டுதான் வருகிறார் என்று மக்களுக்குத் தெரியும்.

'தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி நிதியை கொள்ளையடிக்க நான் விடமாட்டேன்' என்று சொல்லி இருக்குறார் பிரதமர் அவர்கள். தமிழ்நாட்டுக்கு அவர் என்ன வளர்ச்சி நிதியை கொடுத்திருக்கார்?

ஜி.எஸ்.டி வரி இழப்பீட்டு நிறுத்தியதால், தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கவில்லை. வெள்ள நிவாரணமாக நாம் கேட்ட 37 ஆயிரம் கோடிய தரவில்லை. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு பணம் தரவில்லை,  ஒப்புதலும் வழங்கவில்லை.பிரதமர் வீடுகட்டும் திட்டத்துக்கு முக்கால் பங்கு பணம் தருவது மாநில அரசுதான்.

வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குகிறற ஜல்ஜீவன் திட்டத்துக்கு மாநில அரசின் பங்களிப்பு 50 விழுக்காடு.

இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது மாநில அரசிடம் பணம் வாங்கித்தான் தன்னுடைய ஸ்டிக்கரை பிரதமர் ஒட்டிக்கிறார் என்று அவருக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

இன்னும் கேட்கவேண்டும் என்றால், ஒன்றிய அரசுக்கு வரி வருவாய் எங்கே இருந்து வருகிறது? மாநிலங்களின் வரியாக இருந்தாலும், ஒன்றிய வரியாக இருந்தாலும் மாநிலங்களில் இருக்கின்ற மக்கள் கொடுக்கின்ற வரிதான்!

வெறும் கையால் முழம் போடுவது என்று சொல்லுவார்கள். அதுபோல, தமிழ்நாட்டுக்கு வந்து வெறும் கையால் முழம் போட்டுக் கொண்டு இருக்கிறார் நம்முடைய பாரதப் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பிரதமருக்கு மக்கள் மேல பாசம் பொங்கும்... இதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். மக்களான நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள்.

மக்களும், அரசும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகிறோம். இதைத்தான் குடும்ப ஆட்சி என்று விமர்சிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நடப்பது கோடிக்கணக்கான குடும்பங்களின் நலனுக்காக நடக்கின்ற ஆட்சி தான் இது! அதனால்தான் உங்கள் குடும்ப விழாவுக்கு வருகின்ற மாதிரி நீங்கள் எல்லாம் இங்கு உரிமையுடன் வந்திருக்கிறீர்கள்.

இதே உணர்வோடும், வளமோடும், நலமோடும் வாழ்வோம்! தமிழ்நாட்டையும் வாழ வைப்போம்! இந்தியாவுக்கும் வழிகாட்டியாக நாம் மாறுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories