தமிழ்நாடு

புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்கள் திறப்பு : சிறப்பம்சங்கள் என்னென்ன ?

தமிழ்ச் சமுதாயத்தின் தன்னிகரில்லா இரு மாபெரும் தலைவர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்கள் திறப்பு : சிறப்பம்சங்கள் என்னென்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை, மெரினா கடற்கரையில், தமிழ்ச் சமுதாயத்தின் தன்னிகரில்லா தலைவர்களாக திகழும் பேரறிஞர் அண்ணா அவர்களின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தையும்திறந்து வைத்து, பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் , பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைகளை திறந்து வைத்து, பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் :

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய இருபெரும் தலைவர்களின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னைக் கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம் – முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் அழகுறப் பொறிக்கப்பட்டுள்ளன.

நுழைவு வாயிலை கடந்து உள்ளே செல்லும் வழியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் படிப்பது போன்ற சிலையும், வலதுபுறம் இளங்கோவடிகள் மற்றும் இடதுபுறம் கம்பர் சிலைகளும், நினைவிடங்களின்முன்பகுதி இருபுறங்களிலும் பழமையான புல் வெளிகளும், இடப்புறத்தில் அண்ணா அருங்காட்சியமும் அமைந்துள்ளன.

“எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது.” எனப் பொறிக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா அவர்கள் துயில்கொள்ளும் சதுக்கத்தைக் கடந்து சென்றவுடன், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அமர்ந்து எழுதும் வடிவிலான சிலையும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சதுக்கமும் அமைந்துள்ளன. இச்சதுக்கத்தில், “ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்” எனும் வாசகம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்கள் திறப்பு : சிறப்பம்சங்கள் என்னென்ன ?

கலைஞர் சதுக்கத்தின் முன்னே இருபுறமும், காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள், தமிழ்ச் செம்மொழி என ஒன்றிய அரசு ஏற்ற முடிவைத் தெரிவித்துப் பாராட்டி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு எழுதிய கடிதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. சதுக்கத்தின் பின்புறம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புன்னகை பூத்தமுகம் பொன்னிறத்தில் மிளிரும் வண்ணமும் சுற்றிலும் மின்விளக்குகள் விண்மீன்களாக ஒளிரும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில், “கலைஞர் உலகம்” எனும் பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப் பட்டு, கலைஞர் நிர்மாணித்த திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்றுவாரியம் முதலியவை

படங்களாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தும், தமிழ்த்தாய் வாழ்த்து அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 23-11-1970 அன்று பிறப்பித்த அரசாணையும், தமிழ்த் தாய் வாழ்த்து மாநிலப் பாடல் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17-12-2021 அன்று பிறப்பித்த அரசாணையும் அவர்களின் படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

மேலும், கலைஞரின் எழிலோவியங்கள் எனும் அறையில் கலைஞரின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், கலைஞரின் படைப்புகள் அவர் சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப் படங்கள் அமைந்துள்ளன.

“உரிமைப் போராளி கலைஞர்” எனும் அறையில் – தேசியக் கொடியை மாநில முதலமைச்சர்கள் ஏற்றிட உரிமை பெற்றுத் தந்த கலைஞரின் வெற்றியைக் குறிக்கும் வகையில் சென்னைக் கோட்டையில் முதன் முதலாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து கலைஞர் உரையாற்றும் காட்சி, தலைமைச் செயலகத்தின் முகப்புத் தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அமர்ந்திருக்கும் தோற்றம் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும், உடனடியாக புகைப்படம் கிடைக்கும் வசதியுடனும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வலப்புறத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மெழுகுச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

கலைஞரின் படைப்புகளான நெஞ்சுக்கு நீதி, குறளோவியம் தென்பாண்டிச் சிங்கம் உள்ளிட்ட 8 நூல்களின் பெயர்கள் மீது நாம் கை வைத்தால் அந்த நூல்கள் பற்றிய விளக்கம் வீடியோவாகத் தோன்றி நமக்கு எடுத்துரைக்கும்.

“அரசியல் கலை அறிஞர் கலைஞர்” எனும் அறையில் சுமார் 20 நிமிடங்கள் கலைஞர் அவர்களின் பிறப்பு முதல் இறுதி நாள் வரையான முக்கிய வரலாற்று நிகழ்வுகள் அருமையான படக் காட்சிகளாக, கலையும் அரசியலும் எனும் தலைப்பில் நம்முன் தோன்றி வியக்க வைக்கும் .

“சரித்திர நாயகனின் சாதனைப் பயணம்” எனும் அறையில், திருவாரூர் முதல் சென்னை வரை ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தி, தஞ்சை,திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய ரயில் நிலையங்களைக் கடக்கும் போது, அந்தந்த ஊர்களில் கலைஞர் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகள் காட்சிகளாகத் தோன்றும்.

புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்கள் திறப்பு : சிறப்பம்சங்கள் என்னென்ன ?

அறைகளுக்கு வெளியே அமைந்துள்ள நடையில் இருபுறங்களிலும், பெண்ணிய காவலர், ஏழைப் பங்காளர், நவீன தமிழ் நாட்டின் சிற்பி, உலகளாவிய ஆளுமைகளுடன் கலைஞர் முதலான தலைப்புகளில் அமைந்த அரிய புகைப்படங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன.

அதற்கு நேர் எதிரே- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் தோன்றும் அருமையான புகைப்படம் பெரிய அளவில் அமைந்து “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி” எனும் குறள் தொடரைத் தலைப்பாகக் கொண்டுள்ளது. மேலும், இப்பகுதியின் இறுதியில் காந்தவிசையை பயன்படுத்தி அமர்ந்த நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் அந்தரத்தில் மிதக்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இச்சதுக்கத்தில் கலைஞர் எழுதிய நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், வரும் வழியில் தமிழர்களின் கலாச்சார மையம், வள்ளுவர் கோட்டம், பாம்பன் பாலம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முகப்புக் கட்டடம், மெட்ரோ ரயில், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய முத்தமிழறிஞர் கலைஞர் படைத்த நவீனங்களின் தோற்றம் வண்ண விளக்கொளியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பொன்மொழிகள் கற்பாறைகளில் தமிழிலும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு நம் இதயத்திலும் பதியும் வண்ணம் அருமையாக அமைக்கப்பட்டுள்ளன.

இச்சிறப்புமிக்க பேரறிஞர் அண்ணா அவர்களின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

banner

Related Stories

Related Stories