தமிழ்நாடு

மதுரை வந்த பிரதமர் மோடி.. எய்ம்ஸ் முதல் நீட் தேர்வு வரை... பட்டியலிட்டு கேள்வி எழுப்பிய செல்வப்பெருந்தகை!

பிரதமர் மோடி மதுரை வந்துள்ள நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை, நீட்தேர்வு, 100 நாள் வேலைத் திட்டம் ரத்து என பட்டியலிட்டு கேள்விகளை எழுப்பியுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதலைவர் செல்வப்பெருந்தகை.

மதுரை வந்த பிரதமர் மோடி.. எய்ம்ஸ் முதல் நீட் தேர்வு வரை... பட்டியலிட்டு கேள்வி எழுப்பிய செல்வப்பெருந்தகை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

புதுச்சேரி , மதுரை ஆகிய இடங்களில் உரையாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்திருக்கிறார். சமீப காலமாக நரேந்திர மோடியும், அமித்ஷாவும் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து வருகிறார்கள். ஆனால், அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கிற வகையில் நிதி புறக்கணிப்பு செய்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்பட விடாமல் முடக்கி வருகிறார்கள்.

கடந்த மக்களவை தேர்தலில் நாற்பத்திற்கும் நாற்பது என்கிற வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிப்பதை பாஜக ஒரு கொள்கையாக வைத்திருக்கிறது.

கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிறகும் ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ ஒப்புதல் வழங்க கடந்த 4 ஆண்டுகளாக மறுத்து வருகிறார்கள்.

100 நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி புதிய திட்டத்தை அறிமுகம் செய்து கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை ஒன்றிய பாஜக அரசு சீரழித்து வருகிறது. இதைப்போல மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து செய்துவரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையை மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு எதிர்ப்புக்குரல் கொடுத்து வருகிறார்கள்.

ஏற்கனவே சரச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிற சூழலில் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதன் மூலமாக மத உணர்வுகளை தூண்டி அரசியல் ஆதாயம் தேட முற்பட்டிருக்கிறார். 2019 ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

மதுரை வந்த பிரதமர் மோடி.. எய்ம்ஸ் முதல் நீட் தேர்வு வரை... பட்டியலிட்டு கேள்வி எழுப்பிய செல்வப்பெருந்தகை!

மதுரை தோப்பூர் பகுதியில் 220 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகள் வரை வெறும் சுற்றுச்சுவர் தான் எழுப்பப்பட்டது. அதனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் எய்ம்ஸ் மருத்துவமனை புறக்கணிப்பை வெளிப்படுத்துவதற்காக எய்ம்ஸ் செங்கல் தேர்தல் பரப்புரையில் பேசும்பொருளாக மாறியது.

கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் இரு கட்டங்களாக மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.2021 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2026 பிப்ரவரிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் போதிய இடவசதி இல்லாத சூழலில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு படித்து வருகிறார்கள். அந்த மாணவர்களுக்கு குறைந்தபட்சம் தங்கும் வசதி உள்ளிட்டவைகளை செய்து தருவதற்கு கூட ஒன்றிய அரசு இன்னும் தயாராக இல்லை.

நரேந்திர மோடியால் 2019 இல் அடிக்கல் நாட்டப்பட்டு 7 ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்?. இதே ஆண்டில் மற்ற மாநிலங்களில் அடிக்கல் நாட்டப்பட்ட பல எய்ம்ஸ் மருத்துவ மனைகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் பயன்பாட்டிற்கு வராதது ஏன்?

மதுரை வந்த பிரதமர் மோடி.. எய்ம்ஸ் முதல் நீட் தேர்வு வரை... பட்டியலிட்டு கேள்வி எழுப்பிய செல்வப்பெருந்தகை!

அதேபோல ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ. 3000 கோடி நிதியை ஒன்றரை ஆண்டுகளாக தராமல் மறுக்கப்பட்டு வருகிறது. வெள்ள நிவாரண நிதி ரூ, 35 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ. 276 கோடி தான் வழங்கப்பட்டது. ஒன்றிய அரசின் வரி வசூலில் உத்திர பிரதேச மாநிலம் ஒரு ரூபாய் செலுத்தினால் ரூ. 2.02, மத்திய பிரதேசத்திற்கு ரூ.1.70 திரும்ப தரப்படுகிறது.

ஆனால் தமிழ்நாடு வழங்குகிற ஒரு ரூபாய்க்கு 26 காசு தான் திரும்ப தரப்படுகிறது. ஒன்றிய பாஜக ஆட்சியில் இந்தியாவிலேயே உள்ள மாநிலங்களில் ஒன்றிய பாஜக அரசால் கடுமையாக வஞ்சிக்கப்படுவது தமிழ்நாடு தான்.

அதனால் தான் தமிழ்நாட்டு மக்கள் கட்டுக்கோப்பான இந்தியா கூட்டணிக்கு அமோக ஆதரவு அளித்து பாஜகவை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் தடுத்து வருகிறார்கள். ஆயிரம் முறை நரேந்திர மோடி , அமித்ஷா தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக பங்கேற்கும் கூட்டணிக்கு உரிய பாடத்தை மக்கள் நிச்சயம் புகட்டுவார்கள்.

banner

Related Stories

Related Stories