
தமிழ்நாடு வன அனுபவங்கள் கழகத்தின் கீழ் நிறுவப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த முகாமானது, ஆனைமலைப் பகுதியில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தின் கீழ் வழிகாட்டியுடன் கூடிய நடைபயணம் மற்றும் வனவிலங்கு அனுபவங்களை பயணர்களுக்கு வழங்கும். மேலும் டாப் சிலிப் மற்றும் பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் போன்ற இடங்களுக்கு அணுகு பாதை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பயிற்சி பெற்ற வழிகாட்டிகளின் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடைபயண பாதைகளுடன், பறவைகளை பார்வையிடும் அனுபவங்கள் மற்றும் இயற்கை விளக்க நிகழ்ச்சிகளும் வழங்கப்படும்.
முக்கியமாக இந்த முகாம் முழுமையாக உள்ளூர் பழங்குடியினர் சமூக உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது. இதன் மூலம் இயற்கை சுற்றுலா நிலையான வாழ்வாதாரத்தை இவர்களுக்கு உருவாக்குவதுடன், பாதுகாப்பு பொறுப்புணர்வையும் வலுப்படுத்துகிறது. 15 மார்ச் 2026 முதல் பயணிகளை வரவேற்க இருக்கும் இந்த முகாமிற்கு, ட்ரெக் தமிழ்நாடு என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம்.
மாநிலம் முழுவதும் நடைபயண நடவடிக்கைகளின் நிருவாகத்தையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தும் வகையில், அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மலையேற்ற வரைபட கையேடு (Trek Atlas) என்ற விரிவான மின்னனு மற்றும் அச்சுத் தொகுப்பினையும் வெளியிட்டார்.

இதில் 14 மாவட்டங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நடைபயண பாதைகள் பற்றிய தகவல்கள். நிலப் பகுதி உயர்தர வரைபடங்கள், உயிரியல் சிறப்பம்சங்கள், உயர அளவுகள் மற்றும் கடினத்தன்மை வகைப்பாடுகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், நடைபயண வழிகாட்டிகளுக்கான நடத்தை விதிமுறை கையேடும் (Code of Conduct) வெளியிடப்பட்டது. இதில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள். வனவிலங்குகள் பார்வையிடுதலுக்கான நடத்தை நெறிகள் மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட'சுவடே விடாதீர்" (Leave No Trace) கொள்கையைப் பின்பற்றுதல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள், தனது உரையில் கூறியதாவது 'தமிழ்நாடு பொறுப்புடன் கூடிய இயற்கை சுற்றுலா துறையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. மக்களுக்கு அர்த்தமுள்ள இயற்கை அனுபவங்களை உருவாக்குவதோடு, பாதுகாப்பும். சமூக வாழ்வாதாரமும், எங்கள் முயற்சிகளின் மையமாக இருக்கும்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 2024 ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ்நாடு மலையேற்ற திட்ட முயற்சி நன்கு நிருவகிக்கப்பட்ட நடைபயண அனுபவங்களை உருவாக்குதலில் முக்கியமாண படியாகும். அந்த முன்னேற்றத்தின் தொடர்ச்சியாக, சேத்துமடை முகாம் மாநிலத்தின் முதல் தனிப்பட்ட இயற்கை சுற்றுலா முகமாக உருவாகியுள்ளது." உள்ளூர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நிர்வாகிக்கப்படும் இந்த முகாம். நிலையான சமூகத்தால் வழிநடத்தப்படும் மற்றும் பாதுகாப்பில் வேரூன்றிய சுற்றுச்சூழல் சுற்றுலா குறித்த எங்கள் பார்வையை பிரதிபலிக்கிறது".
இந்த நிகழ்வில் பேசிய சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு 'சுற்றுச்சூழல் சுற்றுலாவை பொறுப்பானதாகவும் சமூகத்தை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்கான மாநிலத்தின் உறுதிப்பாட்டை டிரெக் தமிழ்நாடு பிரதிபலிக்கிறது. அக்டோபர் 2024 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த முயற்சி சமூக அடிப்படையிலான இயற்கை சுற்றுலாவின் வலுவான மாதிரியாக சீராக உருவாகியுள்ளது.
இன்று 37 பழங்குடியினர் மற்றும் வனப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த 130 பயிற்சி பெற்ற மலையேற்ற வழிகாட்டிகள் இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளனர். இது அவர்களுக்கு அர்த்தமுள்ள வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதுடன் காடுகளுக்கான உள்ளூர் மேற்பார்வையை மேம்படுத்துகிறது.
அக்டோபர் 2024 மற்றும் பிப்ரவரி 2026 -க்கு இடையில், இந்த 'டிரெக் தமிழ்நாடு' 25,000 -க்கும் மேற்பட்ட மலையேற்ற பயணர்கள் வரவேற்று ரூ.3.16 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இதில் ரூ.73.65 இலட்சம் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழு கட்டணங்களுக்கென பங்களிக்கப்பட்டது. இது நமது காடுகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சமூகங்களை நேரடியாக ஆதரிக்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டின் நிலப்பரப்புகளின் மகத்துவத்தை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறது"






