ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங் வீட்டில் நேற்று 10 மணி நேரத்திற்கு மேல் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய பிறகு அவரை கைது செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு, மேற்குவங்கம், கர்நாடகாவில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வீடுகளில் ரெய்டு நடந்து வருகிறது.
ஒன்றிய அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் அரசியல் எல்லைகளற்று நீளுகிறது என அமலாக்கத்துறை சோதனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங் அவர்களின் கைதும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் அவர்களின் இல்லத்தில் நடந்த சோதனைகளும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய விசாரணை அமைப்புகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்படி அரசியல் நோக்கத்துடன் இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதற்கான தெள்ளத்தெளிவான எடுத்துக்காட்டுகளாகும்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான இத்தகைய திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். அமலாக்கத்துறை வெளிப்படைத்தன்மையோடும் நியாயமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளதை பா.ஜ.க வசதியாக மறந்துவிடுகிறது. ஆனால், சட்டத்தையும் மக்களாட்சியையும் துச்சமாக மதித்துச் செயல்படுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளிடையே தொடர்ந்து வளர்ந்து வரும் ஒற்றுமையைக் கண்டு பா.ஜ.க அஞ்சி நடுங்குவது இதன் மூலம் நன்கு தெரிகிறது. பழிவாங்கும் நடவடிக்கைகளை விடுத்து உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்க அவர்கள் கவனம் செலுத்துவது நல்லது" என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையை கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.