தமிழ்நாடு

”தமிழ்நாடு வெகு விரைவில் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைந்திடும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தமிழ்நாடு வெகு விரைவில் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைந்திடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

”தமிழ்நாடு வெகு விரைவில் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைந்திடும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (5.10.2023) சென்னை, போரூரில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை திறந்து வைத்து ஆற்றிய உரை;-

உலகில் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களைக் கொண்ட குழுமமாகவும், பல்வேறு தொழில் உற்பத்தி மையங்களைக் கொண்டதுமான இந்த ஹிட்டாச்சி நிறுவனம், உலகப் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது!

இந்த நிறுவனம், தனது எரிசக்தி உற்பத்தி திட்டத்தினை கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் துவக்கியதன் தொடர்ச்சியாகத்தான் இந்த விழா அமைந்துள்ளது.

இந்தக் குழுமம் தனது உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் துவக்க இருக்கும் செய்தியானது, தமிழ்நாட்டிற்கும், எங்கள் ஆட்சிக்கும், எனக்கும் பெருமை தருவதாக அமைந்திருக்கிறது. இதற்காக, உங்கள் குழுமத்திற்கும், ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனத்தின் தலைமை பொறுப்பு அதிகாரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஏழே மாத இடைவெளியில், தமிழ்நாட்டில் நீங்கள் துவங்கி இருப்பது, தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுவதற்கான அடையாளம். எங்கள் ஆட்சி மீதும், எங்கள் தமிழ்நாட்டின் மீதும் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு, என்னுடைய நன்றி! இந்த நம்பிக்கையை மேலும் வளர்க்க நாங்கள் விரும்புகிறோம். பெருமளவிலான முதலீடுகளை ஈர்க்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், மாநிலத்தின் பொருளாதாரத்தைத் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல பொருளாதார வல்லுநர்களுடன் கலந்தாலோசனைகள் மேற்கொண்டு, எங்களது அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்களை அமைத்து வருகிறோம். வளர்ந்து வரும் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் துறை சார்ந்த கொள்கை அறிக்கைகளை வெளியிட்டு வருகிறோம்.

அந்த வகையில் மாநிலத்தில்,

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள்,

புத்தாக்கத் திட்டங்கள்,

திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகிய திட்டங்களை பெருமளவில் ஈர்ப்பதற்காக திட்டங்கள் தீட்டினோம்.

”தமிழ்நாடு வெகு விரைவில் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைந்திடும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

இவ்வாறான செயல்பாடுகள் மூலம், இந்தத் துறையில் பெருமளவு முதலீடுகளை ஈர்ப்பதற்கான எங்கள் தரப்பு முயற்சியே இது. உலக அளவில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சிக்கு ஏற்ப, நமது தொழில் துறையும், மாற்றங்களை மேற்கொண்டு அதே வேகத்தில் பயணம் மேற்கொள்வது இன்றியமையாத ஒன்று. இதற்கான முயற்சிகளை ஊக்கப்படுத்தி, இந்தத் துறையில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில்தான், "தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை - 2022" கடந்த ஆண்டு ஜூலை மாதம் என்னால் வெளியிடப்பட்டது.

இந்தக் கொள்கை வெளியிட்ட பிறகு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தாக்கம், புத்தொழில்கள் மற்றும் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற துறைகளில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தொழில்துறை, கல்வியாளர்கள், புத்தாக்கம் மேற்கொள்வோர் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான உலகளாவிய திறன் மையங்கள் (குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்ஸ்) அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, முப்பதுக்கும் மேற்பட்ட GCC-க்கள், தமது புதிய நிறுவனங்களையோ அல்லது விரிவாக்கத் திட்டங்களையோ நிறுவியுள்ளன. உற்பத்தித் துறையில், உலக அளவில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு, இவ்வாறான GCC மற்றும் ஆராய்ச்சி & மேம்பாடு ஆகிய துறைகளில், நல்ல வளர்ச்சி பெற்று வருவது மாநிலத்திற்குப் பெருமை அளிக்கக்கூடிய ஒன்று. மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பயனை ஏற்படுத்தும். இந்த வேகத்தில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதை காணும் போது, "2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் பொருளாதார மாநிலம்" என்ற எங்கள் இலக்கினை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு வளர்ந்து கொண்டே போகிறது.

தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் வழிகாட்டுதலுடன், மாநிலப் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை சார்பில் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது கிடைத்த புள்ளிவிவரங்களை வைத்து, ஊடகங்கள் சிறப்புக் கட்டுரைகளை எழுதி இருந்தன.

தமிழ்நாடு வெகு விரைவில் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைந்திடும் என்று ஊடகங்கள் கூறியுள்ளது எங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. நான் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றபோது, எனக்குக் கிடைத்திட்ட வரவேற்பும் உற்சாகமும், நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேனோ என்று ஒரு நிமிடம் என்னை யோசிக்க வைத்தது. தமிழ்நாட்டிற்கும், ஜப்பானுக்குமான தொடர்புகள் மிக மிக அதிகம். தமிழ்நாட்டில், அதிக அளவில் ஜப்பானியர்கள் வசித்து வருகிறார்கள்.

இந்தியாவுக்குள், தமிழ்நாடு எப்போதுமே, ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த முன்னணி மாநிலமாக விளங்குகிறது. ஹிட்டாச்சி உட்பட, எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களை இங்கு நிறுவியுள்ளார்கள். ஜப்பான் - இந்தியா முதலீடு மேம்பாட்டுக் கூட்டாண்மை திட்டத்தின்கீழ், இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. அந்த வரிசையில், ஹிட்டாச்சி நிறுவனம் தனது தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவி வருவதோடு மட்டுமின்றி, அவற்றை பெருமளவில் விரிவாக்கம் மேற்கொண்டு வருவதும் மகிழ்ச்சி தருகிறது.

”தமிழ்நாடு வெகு விரைவில் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைந்திடும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

சென்னையில் வரவிருக்கும் இதுபோன்ற உலகத் தரம் வாய்ந்த புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப மையங்கள், நமது உள்ளூர் திறன்களுக்கு உலக அளவில் எவ்வளவு வாய்ப்புகள் உள்ளன என்பதற்கான எடுத்துக்காட்டு. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதற்காக ஹிட்டாச்சி எரிசக்தி நிறுவனத்திற்கு என் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப மையம் அவர்களின் உள்ளடக்கிய வளர்ச்சி பயணத்திற்கு உறுதுணையாக நின்று, அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுத்திட வேண்டும். அதன் மூலம், உங்களின் எதிர்கால திட்டங்களை, தமிழ்நாட்டில் மேலும், மேலும் நிறுவிட வேண்டும் என்றும் நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

3 லட்சம் சதுர அடியில் அமைய உள்ள இந்த புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப மையத்தில், 50,000 சதுர அடியில், சிறப்பு ஆய்வகமும் அமைத்துள்ளது. எரிசக்தித் துறையில், நிபுணத்துவம் பெற்ற மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட உயர்தர வேலைவாய்ப்புகளை இந்தத் திட்டம் வழங்க உள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலமாக 2500 பேர்களுக்கு உயர் வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோருக்கு, அதிநவீன மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்திட நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையங்கள், தொழில் புத்தாக்க மையங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தசோ சிஸ்டம், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சீமென்ஸ் மற்றும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான ஜி.இ.ஏவியேஷன் உடன் இணைந்து இந்த மையங்களை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. திருப்பெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில் உலகத்தரம் வாய்ந்த தொழில் புத்தாக்க மையமும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த வசதி வாய்ப்புகளை அனைத்துத் தொழில் நிறுவனங்களும் பயன்படுத்தி தங்களின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த இருக்கிறோம். உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கின்றன. அதற்கு முன்னதாகவே ஹிட்டாச்சி நிறுவனம் இந்த தொழில்நுட்ப மையத்தைத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

பொதுவாக முதலீடுகளை ஈர்ப்பதற்கு நிறுவனங்களுக்கு - அரசு அழைப்பு விடுப்பது ஒரு நடைமுறை! ஆனால் ஹிட்டாச்சி போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டுடனும், தமிழ்நாடு அரசுடனும் நெருக்கமான நிறுவனமாக இருக்கின்ற காரணத்தால், அழைப்பு விடுக்கத் தேவையில்லை. உங்களைப் போன்ற நிறுவனங்களுடன் இணைந்துதான் முதலீட்டாளர் மாநாட்டை நாங்கள் நடத்தயிருக்கிறோம். உங்களைப் போன்ற பிற ஜப்பானிய தொழில் நிறுவனங்களையும் அந்த மாநாட்டில் பங்கேற்கச் செய்வீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன். உங்களது தொழில் முயற்சிகள் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

banner

Related Stories

Related Stories