தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் அரங்கேற்றப்படும் மட்டமான அரசியலைச் சகித்துக்கொள்ள முடியாத நிலை இன்னும் அதிகரித்திருக்கிறது. ஊரே நாறும் அளவிற்கு பா.ஜ.கவின் உட்கட்சி பூசல் வெளியே வந்துகொண்டிருக்கிறது. பா.ஜ.கவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பல மூத்த நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்கள் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.
அண்மையில் கூட பா.ஜ.கவின் தற்போதைய தலைவர் அண்ணாமலை தலைமையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என கூறி காயத்ரி ரகுராம் பா.ஜ.கவில் விலகினார். இப்படி மூத்த நிர்வாகிகள் பலரும் அண்ணாமலைக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
குறிப்பாக பா.ஜ.க ஆதரவாளரும் நடிகருமான, எஸ்.வி. சேகர், அண்ணாமலை பா.ஜ.க தலைவராகப் பதவிக்கு வந்ததிலிருந்தே அவருக்கு எதிராகப் பேசி வருகிறார். தற்போது, அண்ணாமலையால் பா.ஜ.கவிற்கு ஒரு ஓட்டு கூட விழாது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள எஸ்.வி. சேகர், "தனக்கென்று ஒரு தனி அஜெண்டா வைத்து அண்ணாமலை செயல்படுகிறார். தேவையில்லாமல் வாய் சவடால் விடுவது கட்சிக்கு நன்மையைத் தராது. மேலிடத்தில் கூறுவதைக் கேட்டு நடந்தால் தான் இங்குக் கட்சி வளர்ச்சி அடையும். அவரது பெயரையும் புகழையும் வளர்த்துக் கொள்வதற்காக மட்டுமே செயல்படுகிறார். என்னைப் போன்று கட்சிக்காக உழைக்கின்றவர்களை ஓரம் கட்டிவிட்டார்கள்.
அண்ணாமலை 10 வருடங்களாகத் துப்பாக்கி பிடிச்சனு சொல்றாரு ஒருமுறையாவது ட்ரிகர் அழுத்திருப்பாரா? ஏ.டி.எம் வாசலில் இருக்கக்கூடிய செக்யூரிட்டி கூடத் தான் துப்பாக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். அதற்காக அவர் பெரிய ஆளாகிவிடமுடியுமா?. அண்ணாமலை இன்னும் பா.ஜ.க தலைவராக இருந்தால் ஒரு ஓட்டு கூட விழாது" என தெரிவித்துள்ளார்.