நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தன்னை சீமான் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்து விட்டதாகவும் சென்னை மாநகர காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரினை உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
இதுகுறித்து பேட்டியளித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராதிகா, “நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் துன்புறுத்தல், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியது தொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளார் உடனடியாக புகாரை காவல்துறை நடவடிக்கை எடுத்து உரிய சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக புகாரை சென்னை மாநகர காவல் ஆணையர் கொடுக்க வந்திருக்கிறோம்.
தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சியை நடத்தி வரும் சீமான் பேசும் மேடைகளில், ஆண் - பெண் சமத்துவம் குறித்து முற்போக்கு சிந்தனைகள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், தன்னை பற்றி ஒரு ஏழு ஆண்டுகளாக விஜயலட்சுமி அளித்து வரும் புகாரினை எந்த ஒரு வெளிப்படை தன்மையும் இல்லாமல் அந்த பெண்ணை கேவலப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
அதேபோன்று நாம் தமிழர் கட்சியினர் தொடர்ச்சியாக மிக மோசமான வீடியோக்களில் ஒருமையில் பேசுவது, பாலியல் ரீதியாக அவதூறு பரப்புவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் ஒரு கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய சீமான் இதனை கண்டிக்க வேண்டும். அவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இன்றைக்கு நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை துரிதப்படுத்தி அதற்குரிய நடவடிக்கையினை காவல்துறையினர் விரைந்து எடுக்க வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கத்தினர் கேட்டுக்கொள்கிறோம். எனத் தெரிவித்துள்ளார்.