தமிழ்நாட்டு மக்கள் ரூ.1,000க்கு ஆசைப்பட்டார்கள் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கு, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என் சோமு பதிலடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தது, பின்வருமாறு,
“தமிழ் மக்கள் ரூ.1,000க்கு ஆசைப்பட்டு ரூ.1,500ஐ விட்டுவிடவில்லை, வளர்ச்சிக்கும் விடியலுக்கும் ஆசைப்பட்டு திராவிட மாடல் ஆட்சிக்கு கை கொடுத்தார்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க களமாடும் திராவிட நாயகர் எங்கள் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
தன்னை ஒரு விவசாயி என்று மார்தட்டிக் கொண்டு, வேளாண் சட்ட மசோதாவிற்கு மக்களவையில் தலையாட்டிய நம்பிக்கை துரோகி பழனிசாமியை மக்கள் கைவிட்டுவிட்டார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை கெடுக்கும் NEET தேர்வை எதிர்க்கத் திராணியற்றவர்களை மக்கள் கைவிட்டுவிட்டார்கள்.
சிறுபான்மையின மக்களின் நண்பன் என சொல்லிக்கொண்டு, குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தவர்களை கைவிட்டுவிட்டார்கள். பேரறிஞர் அண்ணாவின் பெயரை கொடியிலும் கட்சியின் பெயரிலும் தாங்கிக்கொண்டு, மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்த துரோகிகளை மக்கள் கைவிட்டுவிட்டார்கள்.
பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். முதலாளிகளின் கைப்பாவையாக செயல்பட்டு, தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக அடமானம் வைத்த அடிமைகளை மக்கள் கைவிட்டுவிட்டார்கள். 2026 சட்டமன்ற தேர்தலிலும் உங்கள் கள்ளக் கூட்டணியை கைவிட்டுவிடுவார்கள் என்பதை, தேர்தல் முடிவுகளின்போது தெரிந்துகொள்வீர்கள்.”