முரசொலி தலையங்கம் (12-07-2025)
மாட்டிக்கொண்ட பழனிசாமி!
“கோவில் சொத்தை எடுத்து கல்லூரிகள் தொடங்கலாமா?” என்று கேட்ட பழனிசாமி, இப்போது ‘பல்டி’ அடித்து வேறு மாதிரியாகச் சொல்லி இருக்கிறார். குட்டிக் கரணங்கள் போடுவதும், தரையில் புரள்வதும் அவரது வாடிக்கை தானே?
‘கோவில்களை விட்டு, அரசாங்கமே வெளியேறு’ என்பதுதான் மதுரையில் நடைபெற்ற ஒரு மாநாட்டின் முக்கியத் தீர்மானங்களில் ஒன்று. அந்த மாநாட்டுக்குத்தான் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகிய நால்வரையும் அனுப்பி தனது ஆதரவை வெளிப்படுத்தினார் பழனிசாமி. அந்த மாநாட்டில்தான் தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் கொச்சைப்படுத்திக் காட்சிகள் வெளியிட்டார்கள். ‘போலி திராவிடம்’ என்று அந்த மாநாட்டில் சொல்லப்பட்டது. அதை ஜடம் போல உட்கார்ந்து பார்த்துவிட்டு வந்தார்கள் இந்த கொள்கைப் போலிகள். இது அம்பலம் ஆனதும், ‘அண்ணாவை நான் விட்டுத் தர மாட்டேன்’ என்று கொதித்தார் பழனிசாமி. அது ‘வெறும் நடிப்பு’ என்பதைத்தான் இப்போது உணர்த்தி வருகிறார்.
மதுரை மாநாட்டில் சொல்லப்பட்ட கருத்தைத்தான் பழனிசாமி சொன்னார். இதோ பழனிசாமி சொல்கிறார்...
“நான் சொல்லக் கூடாது. சொன்னா வேற விதமா ஆயிடும். கண்ணை உறுத்துது. கோயிலைப் பார்த்தாலே கண்ணை உறுத்துது. கோயில்ல இருக்கிற பணத்தை எடுத்து கல்லூரி கட்டுறாங்க. தெய்வ பக்தி உள்ளவங்க உண்டியல்ல பணம் போடுறாங்க. அது அறநிலையத் துறைக்குப் போகுது. கோயிலை விரிவுபடுத்தத் தான் பணம் போடுறீங்க. அந்தப் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுறாங்க. மக்கள் இதை சதிச் செயலாகப் பார்க்கிறார்கள்” என்றுதான் பழனிசாமி பேசினார்.
‘இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குரல்’ என்று அம்பலம் ஆனதும், இப்போது, ‘அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை’ என்று மழுப்புகிறார் பழனிசாமி. “கல்லூரிகள் தொடங்குவதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்து சமய அறநிலையத் துறை நிதியில் இருந்து தொடங்குவதைத்தான் வேண்டாம் என்கிறோம். இந்த மாணவர்களுக்கு முழுமையாக எந்தவித நன்மையும் செய்ய முடியாது. நான் கூறிய கருத்தைத் திரித்துப் பிரச்சாரம் செய்கிறார்கள்” என்கிறார் பழனிசாமி.
கோவில் பணத்தை எடுத்து கல்லூரிகள் தொடங்குவது ஏன் என்று கேட்ட ‘சங்கி’ பழனிசாமி, ‘கல்லூரியை வளர்க்க நிதி இருக்காது’ என்று இப்போது திரித்துச் சொல்கிறார். இருப்பினும், ‘இந்து சமய அறநிலையத் துறை நிதியில் இருந்து கல்லூரி தொடங்கக் கூடாது’ என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் பழனிசாமி. அதாவது, அவர் முழுச் சங்கியாகவே மாறிவிட்டதையே இந்த மழுப்பலும் காட்டிக் கொடுத்துவிட்டது.
இது பேரறிஞர் அண்ணாவுக்குச் செய்யும் துரோகம் ஆகும். தனது கட்சியின் பெயரில் இருக்கும் அண்ணா என்ற பெயரையும், கொடியில் இருக்கும் அண்ணா படத்தையும் பழனிசாமி நீக்கிய பிறகு எதையும் பேசட்டும்.
« அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழநி, திண்டுக்கல் மாவட்டம் – இது 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
« ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம் – இது 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
« ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரி, குழித்துறை, கன்னியாகுமரி மாவட்டம் – இது 1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
« பூம்புகார் கல்லூரி, மேலையூர், நாகப்பட்டினம் மாவட்டம் – இது 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
« அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, பழநி, திண்டுக்கல் மாவட்டம் – இது 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த வரிசையில்தான் 2021இல் அருள்மிகு கபாலீஸ்வரர் கல்லூரி திறக்கப்பட்டது, முழுக்க முழுக்க கபாலீஸ்வரர் கோவில் நிதி மற்றும் அறநிலையத்துறை நிதியின் கீழ் இக்கல்லூரி செயல்படுகிறது. கழக ஆட்சிக்கு முன்பே இது போன்ற முயற்சிகள் தொடங்கப்பட்டு விட்டன. இதில் என்ன குறை காண்கிறார் பழனிசாமி?
எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் பாலிடெக்னிக் கல்லூரியை 1981ஆம் ஆண்டு உருவாக்கினார். அடுத்த ஆண்டே பெண்கள் பாலிடெக்னிக் தொடங்கினார். இவை இரண்டையும் ஒரே பாலிடெக்னிக்காக 2003ஆம் ஆண்டு ஆக்கினார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். செய்ததும், ஜெயலலிதா செய்ததும் பழனிசாமியின் கருத்துப்படி சதிச் செயலா? இல்லாவிட்டால் எந்த வசதியும் இல்லாத கல்லூரிகளா?
« அறநிலையத்துறைக்கு கீழ் இயங்கக்கூடிய கல்வி நிறுவனங்களின் பட்டியல்.
« கலை, பண்பாடு மற்றும் அறிவியல் கல்லூரிகள் – 5
« தொழில்நுட்ப கல்லூரி – 1
« மெட்ரிக் பள்ளி – 1
« மேல்நிலைப்பள்ளிகள் – 15
« உயர்நிலைப் பள்ளிகள் – 8
« நடுநிலைப் பள்ளிகள் – 2
« தொடக்கப் பள்ளிகள் – 9
« ஒன்றிய அரசு திட்ட மேனிலைப்பள்ளி – 1
« இசைப்பள்ளி – 5
« வேத ஆகம பாடசாலை – 2
« ஓதுவார் பயிற்சிப்பள்ளி – 2
« தேவாரப் பயிற்சிப் பள்ளி – 2
« காது கேளாதோர், பேச இயலாதோர் பள்ளி – 1
மொத்தம் 54 பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பழனிசாமிக்கு என்ன பிரச்சினை வந்தது? பழனிசாமி கண்ணை எது உறுத்துகிறது? ஏழை எளிய மக்களை படிக்க வைக்கக் கூடாது என்று சொல்கிறாரா பழனிசாமி?
கோவில்கள் சீராக பராமரிக்கப்படுவது ஒரு தரப்பினருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள், ‘கோவிலை மீட்போம்’ என்று கிளம்பி இருக்கிறார்கள். அந்தக் கும்பலின் குரலை பழனிசாமி எதிரொலிக்கத்தான் பயணம் கிளம்பி இருக்கிறார் என்பது மீண்டும் உறுதியாகி இருக்கிறது.