முரசொலி தலையங்கம்

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!

பா.ஜ.க.வுடன் பழனிசாமி கூட்டணி வைக்கவில்லை. அவரே பா.ஜ.க.வாக ஆகிவிட்டார்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (11/07/2025)

"முழு சங்கி பழனிசாமி"

பழனிசாமி முழு சங்கி யாகவே மாறிவிட்டார். பா.ஜ.க.வை அவர் தள்ளிவைத்ததாகச் சொன்னது எல்லாம் நாடகம் என்று சொல்லத்தக்க வகையில் பழனிசாமி பேசத் தொடங்கி இருக்கிறார். “பா.ஜ.க.வுடன் 2026 ஆம் ஆண்டு மட்டுமல்ல; 2032 ஆம் ஆண்டும் கூட்டணி இல்லை என்று பழனிசாமி சொல்லி வந்தார். ‘அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் என பெரும்பாலானவர்கள் பா.ஜ.க.வினராக மாறிவிட்டார்கள். ஆனால் பழனிசாமிதான் அதற்கு இடையூறாக இருக்கிறார்’ என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது பழனிசாமி பேசுவதைப் பார்த்தால், ‘முழுமுதல் சங்கி இவர் தான் என்று சொல்ல வேண்டியதாக இருக்கிறது.

மக்களைச் சந்திக்கும் நடைபயணம் போகப் போவதாக முதலில் சொன்னார் பழனிசாமி. ‘புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போல அந்த அறிவிப்பு இருந்தது. ஐந்து முதல் பத்து கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் தலைகளுக்கு நடுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து செல்கிறார். இதே போல மக்கள் தனக்கும் நிற்பார்கள் என்று நினைத்தார் பழனிசாமி. அவர் தனக்கு செல்வாக்கான பகுதியாக நினைக்கும் கோவை மண்டலத்தில் கூட அதனைப் பார்க்க முடியவில்லை. பத்து நிமிடம் நடந்து விட்டு, பஸ் ஏறிவிட்டார் பழனிசாமி. ‘நடைபயணம்’ இப்போது ‘பஸ் பயணம்’ ஆகிவிட்டது.சில இடங்களில் வண்டியை நிறுத்தி பேசிவிட்டு, அவரது வாகனம் சென்று விடுகிறது. வழக்கமாக சாலையில் ஆம்னி பஸ் போவதைப் போலத் தான் பழனிசாமி பஸ்ஸும் போய்க் கொண்டிருக்கிறது.

பழனிசாமி தனது வாகனத்தை நிறுத்தி பேசும் இடங்களிலும் மக்கள் நின்று கேட்பது இல்லை. பேசத் தொடங்கியதும் கலைந்து விடுகிறார்கள். சாலைகளில் போய்க் கொண்டிருப்பவர்களும் நின்று கேட்பதும் இல்லை. இவை அனைத்தும் பழனிசாமியை ஆத்திரம் கொள்ள வைக்கிறது. எனவே வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனை விமர்சிக்கிறார். பொதுவுடமை இயக்கங்களை விமர்சிக்கிறார். ‘நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க.வுக்கு என்ன? என்று கேட்கும் பழனிசாமி, தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளை எதற்கு விமர்சிக்க வேண்டும்? .அந்தளவுக்கு பழனிசாமிக்கு முனை மழுங்கி விட்டது.

இதுவரை பா.ஜ.க.வை தனக்கு வேண்டாத கட்சி போல நடித்துக் கொண்டிருந்த பழனிசாமி முகத்தை இந்தப் பயணம் கிழித்திருக்கிறது. அவரது பயணத்தைத் தொடங்கி வைக்க பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், ஒன்றிய அமைச்சர் எல்.முருகனும் வந்தார்கள். ‘பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி என்று பழனிசாமி புகழத் தொடங்கினார். அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி இயல்பானதுதான் என்றும் பழனிசாமி சொல்லி விட்டார். நேற்று வரை கசப்பான கட்சியாக இருந்த பா.ஜ.க., இன்று இயல்பானதாக மாறியதற்கு என்ன காரணம் என்பதை மக்கள் மன்றத்தில் பழனிசாமி சொல்ல வேண்டாமா?.

“தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யக் கூடிய பல்வேறு திட்டங்களை வழங்கி வரும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு?” என்று கேட்கிறார் பழனிசாமி. பா.ஜ.க. ஆட்சி தமிழ்நாட்டுக்கு என்னென்ன நன்மைகளைச் செய்கிறது என்று பட்டியல் போட்டிருக்க வேண்டாமா பழனிசாமி? அவர் தான் பக்கம் பக்கமாக எடுத்து வருபவர் தானே? எடுத்து வந்து சொல்லலாமே? மத்தியில் வலுவான ஆட்சி நடப்பதாக பழனிசாமி சொல்கிறார். மைனாரிட்டி பா.ஜ.க. ஆட்சியை, நிதீஷ்குமார் – சந்திரபாபு ஆதரவுடன் மோடி நடத்தி வருகிறார் என்பது பழனிசாமிக்குத் தெரியுமா?.

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!

பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி என்பது மக்களுக்கு நன்மை செய்யும் கூட்டணியாம். அ.தி.மு.க. ஆட்சி, பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டை பாழ்படுத்திய ஆட்சி. பா.ஜ.க. ஆட்சி, பத்தாண்டுகளாக தமிழ்நாட்டை பழிவாங்கிக் கொண்டிருக்கும் ஆட்சி. இவர்கள் இருவரும் சேர்ந்திருப்பது, ‘தமிழ்நாட்டின் இரண்டு துரோகிகள் சேர்ந்து அமைத்துள்ள கூட்டணி என்றே மக்கள் சொல்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யாத, திட்டங்கள் தராத பா.ஜ.க.வை தான் முதலமைச்சராக இருந்தபோது பழனிசாமி தட்டிக் கேட்கவில்லை. மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து வேளாண் பெருமக்களை நிலத்தில் இருந்து அப்புறப்படுத்த பா.ஜ.க. துடித்த போது மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் பழனிசாமி. ‘இது நல்ல சட்டம் தான்’ என்று சொன்னவர் பழனிசாமி. குடியுரிமை சட்டத்தின் மூலமாக இசுலாமியர்களும், இலங்கைத் தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்த பிறகும், அந்த சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் பழனிசாமியின் அ.தி.மு.க.வாக்கு செலுத்தியது.

‘நீட்’ தேர்வால் பல மாணவர்கள் தூக்கில் தொங்கிய போது, ‘நீட் தேர்வை இனி எல்லாரும் எழுதித்தான் ஆக வேண்டும்’ என்று நாக்கைத் துருத்திக் கொண்டு சொன்னவர் பழனிசாமி. பா.ஜ.க.வின் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டார். இந்தியைத் திணிக்கும் போது தலையாட்டிக் கொண்டிருந்தார். இந்திக்கு ஆதரவாக அமித்ஷா கருத்துச் சொல்லும் போதெல்லாம், ‘அது அவரது சொந்தக் கருத்து’ என்று சொன்னார். பெரியாரை, அண்ணாவைக் கொச்சைப்படுத்தி நடத்தப்பட்ட மாநாட்டுக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை அனுப்பி ஆதரவு தெரிவித்தார். இப்போது இந்து சமய அறநிலையத் துறையையே பழனிசாமி விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்.

பா.ஜ.க.வுடன் பழனிசாமி கூட்டணி வைக்கவில்லை. அவரே பா.ஜ.க.வாக ஆகிவிட்டார். சங்கியாக மாறிவிட்டார். பா.ஜ.க.வுடன் சம பந்தியில் உட்கார, சம்மந்திக்கு தரப்பட்ட நெருக்கடிதான் காரணம் என்பதை பழனிசாமியால் வெளிப்படையாகச் சொல்ல முடியாவிட்டாலும் அ.தி.மு.க.வினர் அறிவார்கள் .பழனிசாமியின் பேச்சால் தலை குனிந்து நிற்பவர்கள் அவர்கள்தான்.

banner

Related Stories

Related Stories