தமிழ்நாடு

"திமுக அரசின்மீது மட்டும் இந்த நிலைப்பாடு ஏன்?" - உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தி.க தலைவர் கி.வீரமணி கேள்வி !

தி.மு.க. மீதும், தி.மு.க. அரசின்மீதும் மட்டும் இந்த நிலைப்பாடு ஏன் என உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கி.வீரமணி கேள்வியெழுப்பியுள்ளார்.

"திமுக அரசின்மீது மட்டும் இந்த நிலைப்பாடு ஏன்?" - உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தி.க தலைவர் கி.வீரமணி கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு அமைச்சர்கள் மூவர் மீது ‘சுயோ மோட்டோ’ வழக்குகளை எடுத்துக் கொண்டு விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, விசாரணைக்கு முன்னதாகவே தீர்ப்பு எழுதுவதுபோல எழுதியிருப்பது பொது நலக் கண்ணோட்டத்தில் விரும்பத் தக்கதல்ல என்றும், இதற்குப் பரிகாரம் காணப்பட வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஜஸ்டீஸ் என்.ஆனந்த வெங்கடேஷ் அவர்கள் கடந்த 23.8.2023 (இரண்டு நாள்களுக்கு முன்பு) தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி (Suo moto) வழக்குகளாக, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது துணைவியார், மற்றொருவர்- முன்பு அவர்களது சொத்துக் குவிப்பு வழக்கினை விசாரித்த கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் முதலிய நான்கு பேர், அதுபோலவே, அதே தேதியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது துணைவியார், விசாரணை காவல் துறை அதிகாரி ஆகிய மூவர் - இவர்களை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து சிறீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து ‘கிரிமினல் ரிவிஷன் கேஸ்’ பற்றி தாமே முன்வந்து ,விடுவித்தது செல்லாது என்று அவ்வழக்கை மீண்டும் விசாரிக்கவேண்டும் என்பதை மய்யமாகக் கொண்டு ஓர் ஆணைதீர்ப்பு எழுதியுள்ளார்!

தாமே முன் வந்து விசாரிக்கும் நீதிபதி :

அதற்குமுன் அமைச்சர் க.பொன்முடி அவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வேலூர் நீதிமன்றம் விடுவித்தது குறித்தும், அது ஏற்கத்தக்கதல்ல என்று (Suo moto) தாமே முன்வந்து விசாரித்த வழக்கிலும் இதேபோல் ஓர் ஆணை - தீர்ப்பு வழங்கி, மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பு தொடங்கும்போதே, தனக்குள்ள அதிகாரம் இதற்காக இருக்கிறது என்று முதல் வாக்கியத்திலேயே முன்னுரையுடன் தொடங்கியிருக்கிறார்.

அது நீதிமன்றத்தின் அதிகாரம் - யாரும் அதைப்பற்றி கேள்வி கேட்கவோ, விமர்சிக்கவோ முடியாது. ஒப்புக் கொள்கிறோம்.அந்த நீதிபதி அவர்கள் மிகுந்த கற்றறிந்த நீதிபதி; அவரது ஆங்கிலப் புலமை வியக்கத்தக்கது; அதில் மாறுபட்ட கருத்துகள் இருக்க முடியாது.

மூன்று டைரக்ஷனில்செயல்பட வேண்டிய ஆணைகள் :

ஆனால், அந்த தாமே முன்வந்து விசாரிக்கும் வழக்கில்,

இறுதியாக, ‘மூன்று டைரக்ஷனில்’ செயல்பட வேண்டிய ஆணைகளைத் தந்துள்ளார்.

1. அடிஷனல் பப்ளிக் பிராசிகியூட்டர் இதுபற்றி அரசு சார்பில் நோட்டீஸ் எடுத்துக் கொள்ளவேண்டும்.

2. சிறீவில்லிபுத்தூர் தனி நீதிமன்றம் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் வழக்குகளை விசாரிக்கும் கிரிமினல் ரிவிஷன் குற்றம் சுமத்துவோர் நோட்டீஸ் வழக்காக 20.9.2023இல் எடுத்துக்கொண்டு விசாரிக்கவேண்டும். (கிரிமினல் ரிவிஷன் வழக்காக).

3. இந்த ஆணை தலமை நீதிபதிக்குத் தகவலுக்காக அனுப்பி வைக்கப்படவேண்டும்.

- இதன்மூலம் மீண்டும் விடுவிக்கப்பட்டவர்கள்மீது வழக்கு மறு விசாரணை தொடங்கவேண்டும் என்பது!

இதன்படி வழக்கு மீண்டும் மறு விசாரணைக்கு உத்தரவு என்பதற்கான ஆணையால், நீதிபதி தொடக்கத்திலிருந்து பயன்படுத்தியுள்ள ஆங்கிலச் சொற்கள் ஒரு நடுநிலப் பார்வைக்கு முற்றிலும் மாறாக,

கடுமையாக (Harsh) கேலி, கிண்டல், நையாண்டிச் சொற்களை குறிப்பிட்டவர்களைத் தாண்டி, ஆளும் அரசுமீது அதிகார துஷ்பிரயோகம், வழக்குகளை விசாரித்த மேனாள் தலைமை நீதிபதி மற்றும் சக நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், காவல்துறை அதி காரிகள் அத்துணை அமைப்புகள் பொறுப்பாளர்கள் மீதும் சேற்றை வாரி இறைப்பதாக இருப்பது, அதுவும் விசாரிக்க உத்தரவிடும் நோட்டீஸ் ஆணையில், விசாரணையையே முடித்து அத்துணை பேரும் தத்தம் கடமைகளிலிருந்து தவறியவர்கள், நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைந்துள்ள அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டே இவர்கள் விடுவிக்கப் பட்டு இருக்கிறார்கள் என்று இறுதித் தீர்ப்பை - இதற்குக் காரணமான அத்துணைப்பேரையும், சென்னை உயர்நீதிமன்றம், எல்லோரின்மீதும் குற்றப் பத்திரிகையை எழுதி வாசிப்பதுபோலவே, அதன் வாசகங்கள் அமைந் துள்ளது நியாயமான அணுகுமுறையா? சட்ட நியாயமா?

"திமுக அரசின்மீது மட்டும் இந்த நிலைப்பாடு ஏன்?" - உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தி.க தலைவர் கி.வீரமணி கேள்வி !

சந்தேகத்தின் பலன் யாருக்கு?

கிரிமினல் வழக்குகளில் சந்கேத்திற்குப் பலன் எப்போது - விசாரணைகளில் (Benefit of doubt) குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பக்கம் தானே செல்லும் என்பது கிரிமினல் சட்ட பாலபாடம். அதை நன்கு அறிந்த மாண்பமை நீதிபதி அவர்கள், எப்படி மற்றவர்கள் முடிவுக்கு உள்நோக்கம் - உள் ஆதாயம் - அரசுத் துறைகளின் துஷ்பிரயோகம் என்பதை ஆதாரங்களைக் காட்டாமல், வெறும் யூகத்தின்மீது, “புதிய அரசாங்கம் அமையும்வரை இழுத்தார்கள்” என்று கூறுவது முதிர்ச்சி பெற்ற நியாயத்தின் வெளிப்பாடாக அமையுமா?

அதிமுக லெட்டர் பேடில் எழுதப்பட்ட கடிதம்

எடுத்துக்காட்டாக, அமைச்சர் பொன்முடி வழக்கில் பல செய்திகளை எழுதிய இந்த நீதியரசர், விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து, வேலூர் நீதிமன்றத்திற்கும் மாற்றப்படுவதற்குரிய காரணங்கள் பற்றி - விழுப்புரம் நீதிமன்ற நீதிபதியிடம் பணம் கொடுத்து வழக்கை முடிக்க முயலுகிறார்; ஆகவே, வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுங்கள் என்று அ.தி.மு.க. லெட்டர் பேடில் கடிதம் எழுதப்பட்டதைப்பற்றியும், அதனால் அது மாற்றம் அடைந்தது என்றும் பேசப்படும் நிலையில், தனது விரிவான அலசும் தீர்ப்பில், ஏன் அதனைக் குறிப்பிடாமல், வெறும் மாற்றம் ஏதோ அரசின் செல்வாக்கினால் அமைந்தது! விருப்பத்தினால் மாற்றப்பட்டது என்பதுபோல புரிந்து கொள்ளும் வகையில் இருக்கவேண்டும்?

அதுமட்டுமல்ல, மேனாள் தலைமை நீதிபதி இருக்கையில், இவருக்கு இந்த அதிகாரம் - பொறுப்பு (கிரிமினல் துறை) வரவில்லையா? நீதியின் மேன்மை கருதி, அவருக்கே ஏதாவது கடிதமோ அல்லது நீதிபதிகள் கூட்டும் கூட்டத்திலோ ‘‘நீதி தேவன் மயக்கங்களை’’ தடுத்து, நீதித்துறையை தூய்மையாக்க முயன்றுள்ளாரா என்பது மக்கள் மன்றம் அறிய வேண்டியது கடமை.

பல பத்திகள் Cut - Paste - வழமைதான்.ஒரே நாளில் தரப்பட்ட (23.8.2023) இரண்டு தீர்ப்பு களிலும் ஒரே மாதிரி வாசகங்கள்; பத்தி வாரியாக காணப்படுகின்றன. விசாரணை நடக்கும் முன்பே தீர்ப்பா!

பொதுத் தேர்தல் விரைந்து வரவிருக்கும் சூழ் நிலையில், தமிழ்நாடு அரசின்மீது இப்படி ஒரு தார் வர்ணம் பூசிக் காட்டுவதற்கு, அதுவும் ‘நோட்டீஸ்’ அனுப்பும் முன்பே, போதிய விசாரணை நடக்கும் முன்பே தீர்ப்பு எழுதப்படுவது நியாயமா? அரசைக் கேவலப்படுத்துவது ஏற்புடையதா?

புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற சங்கரராமன் கொலை வழக்கில் ஏ1, ஏ2 குற்றம் சுமத்தப்பட்டவர்களான காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் மொத்தம் 189 சாட்சியங்களில் 83 பிறழ் சாட்சியங்கள் காரணமாகவே அக்கொலைக் குற்ற வழக்கிலிருந்து (மாவட்ட நீதிபதியிடம் தொலைபேசிப் பேச்சு புகார் உள்ளது) விடுதலையானாளர்களே, அந்த குற்ற வழக்குகளை - குற்ற வழக்குகளுக்கு லிமிட்டேஷன் ஒன்றும் கிடையாது என்ற நிலையில், கிரிமினல் வழக்கு அதிகார நீதிபதி அவர்கள் இதுவரை ஏன் சம்பந்தப்பட்ட வழக்கில் தாமே முன்வந்து விசாரிக்க ஆணையிட்டிருக்கவில்லை?

"திமுக அரசின்மீது மட்டும் இந்த நிலைப்பாடு ஏன்?" - உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தி.க தலைவர் கி.வீரமணி கேள்வி !

தி.மு.க.மீதும், தி.மு.க. அரசுமீதும் மட்டும் பாய்வது ஏன்?

குறிப்பாக தி.மு.க.மீதும், தமிழ்நாடு அரசின்மீதும் அதன் அமைச்சர்கள்மீதும் மட்டும் ஏன் பாய்கிறது என்ற கேள்வி மக்கள் மன்றத்தில் எழச் செய்யுமே! பல மேனாள் ஆளுங்கட்சி அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகள் குறித்து இதே வேகம் வந்திருக்கவில்லையே என்று நோக்கும்போது, இது ஒருதலைப்பட்ச நோக்கம் போன்றே எவருக்கும் எண்ண தோன்றும்!

இந்த மறுவிசாரணை ஆணை மற்ற பல அரசுத் துறைகள்மீது - சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் முதல், இந்நாள் நீதிபதிகள் வரை குற்றம் சுமத்தி, நீதித்துறை, நிர்வாகத் துறை, ஆட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழக்கச் செய்யாதா?

அதுவும் முழு மறுவிசாரணைக்கு முன்பே முடிவுக்கு வந்ததுபோல் இப்படி எழுதுவது - நீதிமன்றத்தில் மனு தர்மம் கோலோச்சத் தொடங்கிவிட்டதோ என்று தான் எண்ணம் எவருக்கும் ஏற்படுவது தவிர்க்க முடியாததே!

நீதிமன்றங்களுக்குரிய மாண்பைக் காப்பாற்றவும், அவற்றின்மீதுள்ள நம்பிக்கையைக் குறைக்கும் அல்லது குலைக்கும் வகையில் தீர்ப்புகளோ, ஆணைகளோ வந்தால், அது பொதுநலக் கண்ணோட்டப்படி விரும்பத் தக்கதா?

“வெறுப்பு அரசியல் பிரச்சாரம் கூடாது; அது தடுத்துநிறுத்தப்பட வேண்டும். சட்டத்தின் மாண்புநிலை நிறுத்தப்பட வேண்டும்“ என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறும் நிலையில், “வேலியே பயிரை மேய்வதைப் போல” இப்படி உயர்நீதிமன்ற நீதிபதி அவர்களே இப்படி ஒரு ஆட்சி மீது வெறுப்பு - நீதிபதிகள் மீதே வெறுப்பு ஏற்படுத்தும் பிரச்சாரம் ஏற்பட வழி வகுக்காதா? மறு விசாரணைக்கு முன்பே தண்டனைத் தீர்ப்பு எழுதி விடுவது நீதித்துறைக்கு ஏற்ற மரபா - நீதிமன்ற வரலாற்றிற்கும் பெருமை சேர்ப்ப தாகுமா? என்ற கேள்வியில் இத்தகைய தொடர் மூன்று ‘திரிசூல’ ஆணைகள்மீது எழும்புவது தவிர்க்க முடியாததே!

‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக’ இருக்கவேண்டும் என்ற வரிகளை நீதிபதிகள் அடிக்கடி எழுதுவார்கள். அதை இப்போது இங்கே பயன்படுத்தி, இந்த விசாரணைக்குமுன் தீர்ப்பு எழுதியுள்ள கொடுமையைக் கண்டு, வேதனையும், அதற்கு உடனடியாக பரிகாரமும் வந்தால் மட்டுமே நீதிமன்றக் கறைகள் துடைக்கப்பட முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories