
உன்னாவ் பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான குல்தீப் சிங் செங்காரின் தண்டனை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் குற்றவாளிக்கு ஜாமீன் அளித்தும் உத்தரவு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் வகையில் உத்தர பிரதேச பா.ஜ.க அமைச்சர் ஓ.பி.ராஜ்பார் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பா.ஜ.க அமைச்சரின் பேச்சுக்கும், நீதிமன்ற தீர்ப்புக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் கெளரவ் கோகோய், ”உன்னாவ் வல்லுறவு குற்றவாளியான குல்தீப் செங்காரை காப்பாற்ற மொத்த பாஜகவும் செயல்பட்டிருக்கிறது. இவர்களின் கைகள் சாமானியர்களின் குரல்வளைகளை மெல்ல நெறித்துக் கொண்டிருக்கிறது. சமூகத்தின் நெஞ்சின் மீது பாஜகவின் கால்கள் ஏறி மிதித்து கொண்டிருக்கிறது. நீதிக்கான கூக்குரலுடன் எல்லா வலிமையையும் திரட்டி எதிர்த்து சண்டையிடுவது மட்டும்தான் இவர்களை வீழ்த்துவதற்கான ஒரே வழி” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி பிரநிதி சுசில்குமார் ஷிண்டே,"பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினரிடம் பா.ஜ.க-வினர் நடந்துகொண்ட விதம் மிகவும் வெட்கக்கேடானது. ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கையே பெண்களுக்கு எதிரானது. அதைத்தான் பா.ஜ.க பின்பற்றுகிறது.” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிஸ் சுப்ரியா சுலே MP,”இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்க முடியும்?. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு துணையாக நாங்கள் நிற்போம்” என தெரிவித்துள்ளார்.






