ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் சென்னையில் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஆகஸ்ட் 3 முதல் 12 வரை நடைபெறுகிறது.
இதனையடுத்து சென்னை, மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகில் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பை மற்றும் சின்னத்தை அறிமுகப்படுத்தி, அனைத்து மாவட்டங்களுக்கும் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பை கொண்டு செல்லும் "பாஸ் தி பால் (Pass The Ball)" நிகழ்ச்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் ஏசியன் ஹாக்கி சாம்பியன்ஷிப்க்கான பாடல் வெளியிடப்பட்டது. போட்டிக்கான பிரத்யேக யானை உருவம் கொண்ட பொம்மனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். மேலும் போட்டிக்கான டிக்கெட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மணிப்பூர் விசயத்தில், மனதை பாதிக்கின்ற மாதிரி ஒரு மோசமான வீடியோ வெளியே வந்திருப்பதால் பிரதமர் வேறு வழி இல்லாமல் தனது வாயை திறந்திருக்கிறார். இந்தியா கூட்டணியை பார்த்து பாஜகவினர் பயந்து போய் உள்ளனர் எனத் தெரிவித்தார்
மேலும் மோடி கூட்டணியின் தென்னிந்திய பிரதிநிதியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்து உள்ளனர் என்ற கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், வேற யாரை கூப்பிட முடியும், வேற யாரு இங்கிருந்து போவார்கள், மோடி அடிமையாக எடப்பாடி பழனிச்சாமி தான் இங்கிருந்து போவார். அவங்களுக்குள்ளே போட்டி வேறு யார் மோடிக்கு பெட்டர் அடிமை என்று ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொஞ்சம் கோபம் என்று சொன்னார்கள், டி.டி.வி.தினகரனுக்கு மன வருத்தம் என்று சொன்னார்கள். எடப்பாடி பழனிச்சாமி அதில் ஜெயித்து விட்டார்.
இந்தியாவை யார் ஆளனும் என்று சொல்வதைவிட யார் ஆளக்கூடாது என முதலமைச்சரும் தமிழ்நாட்டு மக்களும் மிக தெளிவாக உள்ளனர். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் இந்தியாவையே காப்பாற்ற முடியாது. பாஜகவை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.