நாளை (13.09.2025) சென்னை. மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைக்கும் விதமாக, 02.08.2025 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல் மருத்துவ முகாமினை தேனாம்பேட்டை மண்டலம், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மண்டலத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் மொத்தம் 15 “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 02.08.2025 அன்று சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 2,934 பயனாளிகளும், இரண்டாம் கட்டமாக 23.08.2025 அன்று ஆலந்தூர் மண்டலம், ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 960 பயனாளிகள், நான்காம் கட்டமாக 30.08.2025 அன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் 1,471 பயனாளிகள் என 5,365 பயனாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாளை (13.09.2025) சனிக்கிழமை “நலம் காக்கும் ஸ்டாலின்“ திட்ட முகாம் நான்காம் கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாம்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம், இந்தியமுறை மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம் மற்றும் ஸ்கேன் பரிசோதனை ஆகிய 17 துறைசார் நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகள், அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனை, முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனை, காசநோய், தொழுநோய் பரிசோதனை, ஆரம்ப புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை ஆகிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.
மேலும், முதலமைச்சரின் விரிவாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற இணைச் சேவைகளும் வழங்கப்படுகிறது.
மணலி மண்டலத்திற்குட்பட்ட எவர்வின் வித்யாஸ்ரம் பள்ளியில் நாளை (30.08.2025) நடைபெறவுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.