ஒவ்வொரு ஆண்டும் திமுக சார்பில் செப். 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், செப். 17 பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக உருவான நாள் ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழா திமுக சார்பில் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு முப்பெரும் விழா வரும் செப்.17-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்த நிகழ்வு கரூரில் நடைபெறவுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், கழக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சிகள், உடன்பிறப்புகள் என அனைவரும் பங்கேற்கவுள்ளனர். மேலும் இந்த நிகழ்வில் கழக மூத்த முன்னோடிகளுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளது.
கரூர் - திருச்சி சாலையில் உள்ள கோடங்கிபட்டி என்ற இடத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் முப்பெரும் விழா நடைபெறவுள்ள நிலையில், இந்த விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2026-சட்டமன்றத் தேர்தலில் கழகத்திற்கு வரலாற்று வெற்றியை பெற்றுத்தர கரூரில் கூடி உறுதியேற்போம் என உடன்பிறப்புகளுக்கு கழக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், "பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்- கழகம் தோன்றிய நாள்- தந்தை பெரியார் பிறந்தநாள் ஆகியவற்றை போற்றும் உடன்பிறப்புகளின் திருவிழாவான கழக முப்பெரும் விழா கரூரில் வரும் 17-ஆம் தேதியன்று கொள்கைகளைக் கொண்டாட்டமாக நிகழ உள்ளது! கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் 2026-சட்டமன்றத் தேர்தலில் கழகத்திற்கு வரலாற்று வெற்றியை பெற்றுத்தர கரூரில் கூடி உறுதியேற்போம்! முத்தமிழறிஞர் கலைஞரை முதல்முறையாக சட்டப்பேரவைக்கு அனுப்பிய கரூர் அழைக்கிறது வாரீர்!"என்று கூறப்பட்டுள்ளது.