அரசியல்

ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!

மக்களவையில் திமுக எம்.பி.க்கள் ஒன்றிய அமைச்சர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ள நிலையில், அதன் விவரம் உள்ளே இருக்கிறது.

ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜன. 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நேற்று (பிப்ரவரி 1) மக்களவையில் தாக்கல் செய்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு தேவையான உருப்படியான ஒரு விசயமும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், வழக்கம்போல இந்த முறையும் தமிழ்நாட்டுக்கு தேவையான ஒரு அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதற்கும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இந்த சூழலில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடந்தது. தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்களிடம் உறுப்பினர்கள் கேள்விகளும் எழுப்பினர். இதில் திமுக எம்.பி-க்கள் எழுப்பிய கேள்விகள் வருமாறு :-

=> ரூபாய் மதிப்பை நிலைப்படுத்தல் நடவடிக்கைகள் என்ன? - அரக்கோணம் திமுக எம்.பி. எஸ். ஜெகத்ரட்சகன் கேள்வி

அமெரிக்க டாலருக்கு நிகரா இந்திய ரூபாயை நிலைப்படுத்த கடந்த 12 ஆண்டுகளில் இந்திய ரிசர்வ் வங்கி செலவிட்ட தொகை எவ்வளவு? உள்நாட்டு அல்லது உலகளாவிய கட்டணக் கொள்கைகளில் சமீபத்திய மாற்றங்கள், ரூபாயின் மதிப்பு மற்றும் அந்நியச் செலாவணி நிலைத்தன்மையில் ஏதேனும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன? இந்திய சந்தைகளில் இருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) நிகர வெளியேற்றத்தின் அளவு மற்றும் ரூபாயில் அவற்றின் தாக்கம் என்ன? நாணய ஏற்ற இறக்கத்தை நிர்வகிக்கவும் மூலதன வெளியேற்றத்தின் தாக்கத்தைக் குறைக்கவும் அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?

திமுக எம்.பி. அருண் நேரு
திமுக எம்.பி. அருண் நேரு

=> மாற்றுத்திறனாளிகளுக்கான கருவிகளுக்கு ஜிஎஸ்டி தள்ளுபடியை நீக்கியது ஏன்? - தஞ்சாவூர் திமுக எம்.பி முரசோலி கேள்வி

புதிய GST திருத்தத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொருட்களின் மீதான 10% தள்ளுபடி நீக்கப்பட்டிருப்பது ஏன்? மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள், செயற்கை உறுப்புகள், செவிப்புலன் கருவிகள், பிரெய்ல் அச்சுப்பொறிகள் போன்ற பொருட்களுக்கான GST வரி விகிதம் என்ன? அத்தியாவசியம் என்று தெரிந்தும் அத்தகைய சாதனங்களுக்கு GST வரியை நீக்காததன் காரணம் என்ன? GST கவுன்சிலை கலந்தாலோசித்து இவ்வரியை நீக்குவதற்கான காலக்கெடு என்ன? மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான அமைப்புகள் மற்றும் GST விலக்கு கோரும் பிற பங்குதாரர்களிடமிருந்து அரசாங்கம் பரிந்துரைகளைப் பெற்றுள்ளதா?

=> பெரம்பலூர் மாவட்டத்தில் திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் செயல்பாடுகள் யாவை? - பெரம்பலூர் திமுக எம்.பி. அருண் நேரு

பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) திட்டத்தின்கீழ் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் தனியார் பயிற்சி கூடங்களின் விவரங்கள் தொகுதி வாரியாக செயல்பாட்டிலுள்ள பயிற்சி மையங்கள் மற்றும் அவற்றின் பாடத்திட்டங்களின் விவரங்கள் என்ன? கடந்த 3 நிதியாண்டுகளிலும் நடப்பு ஆண்டிலும் பெரம்பலூர் மாவட்டத்தில் PMKVY-க்காக வெளியிடப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதியின் விவரங்கள் என்ன? சான்றிதழுக்குப் பிறகு வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு உதவியின் விவரங்கள் என்ன?

ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!

=> ஆன்லைன் முதலீடு பண மோசடிகளை தடுக்க நடவடிக்கை என்ன? - தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்

கிரிப்டோ நாணயங்கள் மற்றும் டிஜிட்டல் சொத்துக்கள் மூலம் நடக்கும் பணமோசடி மற்றும் சட்டவிரோத வர்த்தகங்கள் மூலம் செய்யப்படும் பெரிய முதலீடுகள் குறித்து ஒன்றிய அரசிடம் திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் டிஜிட்டல் சொத்துக்கள், கிரிப்டோ நாணயங்கள் மற்றும் NFT ஆகியவற்றின் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

=> வங்கி மோசடிகள் மீதான நடவடிக்கை என்ன? - சேலம் திமுக எம்.பி. செல்வகணபதி

தொடர்ந்து வங்கிகளும் வைப்புத்தொகையாளர்களும் ஏமாற்றப்படுவதை குறித்து திமுக சேலம் மக்களவை உறூப்பினர் செல்வகணபதி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். வங்கி மோசடிகளின் அளவு அதிகரித்து வருகிறது, ஆனால் வழக்குகள் குறைந்து வருகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 2023-24 ஆம் ஆண்டில் ரூ.11,261 கோடியிலிருந்து 2024-25 ஆம் ஆண்டில் மோசடி செய்யப்பட்ட பணத்தின் அளவு ரூ.34,771 கோடியாக உயர்ந்ததுள்ளது என்றும் வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட தொகை ஆகியவற்றின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகள் இம்மோசடிகளுக்கு உள்ளானவைகளில் முதலிடத்தில் உள்ளன என்பதையும் குறிப்பிட்டு கேள்விகள் எழுப்பியுள்ளார். 2024-25 ஆம் ஆண்டில் அனைத்து வங்கிக் குழுக்களிலும் கண்டறியப்பட்ட க்ரெடிட், டெபிட் கார்டுகள் மற்றும் இணைய மோசடிகளின் எண்ணிக்கை மற்றும் தொகை விவரங்கள் என்ன? என்றும் கேட்டுள்ளார்.

திமுக எம்.பி.க்கள்  தங்க தமிழ்செல்வன் மற்றும் கணபதி ராஜ்குமார் !
திமுக எம்.பி.க்கள் தங்க தமிழ்செல்வன் மற்றும் கணபதி ராஜ்குமார் !

=> பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண் விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்க தவறிய ஒன்றிய அரசு - தேனி திமுக எம்.பி. தங்க தமிழ்செல்வன் மற்றும் கோவை திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார் !

கடந்த மாதம் ஃபரிதாபாத்தில் போட்டி தொடர்பாக தங்கியிருந்தபோது தடகள வீரரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் சமீபத்தில் இந்திய தேசிய துப்பாக்கி சங்கத்தால் (NRAI) இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன் மற்றும் கணபதி ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட பயிற்சியாளருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரங்கள் என்ன? கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சியாளர்களால் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தேசிய அளவிலான பெண் வீராங்கனைகளின் மொத்த எண்ணிக்கை மற்றும் இந்த பயிற்சியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எதிர்காலத்தில் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தலில் இருந்து தேசிய அளவிலான பெண் விளையாட்டு வீராங்கனைகளைப் பாதுகாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

=> தமிழ்நாட்டில் நூலகங்கள்அமைக்குமா ஒன்றிய அரசு? - காஞ்சிபுரம் திமுக எம்.பி. செல்வம் மற்றும் திருவண்ணாமலை திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரை

கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசால் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகங்கள், சமூக நூலகங்கள் மற்றும் அறிவு வள மையங்களின் எண்ணிக்கைகள் குறித்தும் 2019 முதல் 2024 வரை தமிழ்நாட்டில் அதிவேக இணையம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புடன் மேம்படுத்தப்பட்ட நூலகங்களின் எண்ணிக்கை குறித்தும் திமுக மக்களவை உறுப்பினரகள செல்வம் மற்றும் சி.என். அண்ணாதுரை கேள்வி எழுப்பியுள்ளனர்.

திமுக எம்.பி. மலையரசன்
திமுக எம்.பி. மலையரசன்

=> ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் தனியார் நியமனங்கள் ஏன்? - கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. மலையரசன் கேள்வி

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் நிர்வாக இயக்குநர் (MD) உட்பட மூத்த நிர்வாக பதவிகளுக்கு தனியார் துறையைச் சேர்ந்த வேட்பாளர்களை நியமிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது குறித்து கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. மலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

SBI வங்கியின் நிர்வாக இயக்குநர் (MD) உட்பட மூத்த நிர்வாக பதவிகளுக்கு தனியார் துறையைச் சேர்ந்த வேட்பாளர்களை நியமிக்க அரசாங்கம் அனுமதித்தது ஏன்? SBI மற்றும் பிற பொதுத்துறை வங்கிகளில் (PSBs) ஏற்கனவே அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் குழு இருக்கும்போது தனியார் நியமனங்களை அனுமதிப்பதற்கான காரணங்கள் என்ன? வெளிப்படைத்தன்மை மற்றும் தகுதி அடிப்படையிலான தேர்வை உறுதி செய்வதற்கு அரசாங்கம் உருவாக்கியிருக்கும் வழிகாட்டுதல்கள் என்ன?

=> வடமாநில தொழிலாளர்களினால் அதிகரிக்கும் குடிசைப்பகுதிகள் : நடவடிக்கை என்ன? - திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ கேள்வி

பிற மாநிலங்களிலிருந்து, குறிப்பாக பீகார் மாநிலத்திலிருந்து, பெரிய அளவிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகையினால் பெருநகரங்கள் அதிக நெரிசலுக்கும் குடிசைப்பகுதிகளின் பெருக்கத்திற்கும் வழிவகுத்திருக்கிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் திமுக எம்.பி. என். ஆர். இளங்கோ கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!

=> ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏன்? - திமுக எம்.பி. ராஜாத்தி சல்மா கேள்வி

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி பகிர்வதில் தாமதம் ஏன் என திமுக எம்.பி. ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பியுள்ளார். 2020 முதல் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் விவரங்கள் என்ன? கிராமப்புற பெண்களின் வாழ்க்கையில் ஜேஜேஎம்மின் தாக்கத்தை மதிப்பீடு செய்ய ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதா? இத்திட்டத்தை கிராமப்புற மற்றும் மலைப் பகுதிகளில் செயல்படுத்த அரசு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

சிறுபான்மையின பெண்கள், கலைஞர்கள் மற்றும் இளைஞர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கும் PM விகாஸ் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மற்றும் செலவுகள் குறித்து தனது மற்றொரு கேள்வியில் ராஜாத்தி சல்மா கேட்டுள்ளார். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கை மற்றும் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

=> PMEGP திட்டத்தின்கீழ் கடன் பெறுவதை எளிமையாக்குக! - திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி. சிவா எம்.பி.

PMEGP திட்டத்தின்கீழ் சிறு கடன்கள் பெறுவதை எளிதாக்க அரசு ஏற்படுத்தியிருக்கும் தீர்வுகள் குறித்து திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி. சிவா எம்.பி. மாநிலங்கலவையில் கேள்வி எழுப்பியுள்ளார். பயனாளிகளுக்கு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, அனைத்து நிறுவனங்களும் இணைய வேண்டிய ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் அமைப்பு உருவாக்கப்படுமா? என்றும் அதை செயல்படுத்துவதற்கான காலக்கெடு என்ன? இத்திட்டத்தின்கீழ் வட்டி விகிதங்கள் வங்கிகளின் தனிப்பட்ட முடிவுகளுக்கு விடப்படுவது குறித்தும் நிலைக்குழுவின் பரிந்துரையின்படி, அனைத்து பயனாளிகளுக்கும் சமமான கடன் விதிமுறைகளை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories