ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் சென்னையில் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஆகஸ்ட் 3 முதல் 12 வரை நடைபெறுகிறது.
இதனையடுத்து சென்னை, மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகில் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பை மற்றும் சின்னத்தை அறிமுகப்படுத்தி, அனைத்து மாவட்டங்களுக்கும் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பை கொண்டு செல்லும் "பாஸ் தி பால் (Pass The Ball)" நிகழ்ச்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் ஏசியன் ஹாக்கி சாம்பியன்ஷிப்க்கான பாடல் வெளியிடப்பட்டது. போட்டிக்கான பிரத்யேக யானை உருவம் கொண்ட பொம்மனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். மேலும் போட்டிக்கான டிக்கெட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உலகக் கோப்பை கால்பந்து போட்டி சமீபத்தில் நடைபெற்றது. அப்போது ஹாக்கி ஃபெடரேஷனிடம் தமிழகத்தில் ஹாக்கி போட்டி நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியானது சென்னையில் ஆகஸ்ட் மூன்றாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.
இதில் ஆறு நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இங்கு வெளியிடப்பட்ட கோப்பையானது தமிழ்நாடு முழுவதும் சென்று ஹாக்கி வீரர்களை ஊக்குவிக்க இருக்கிறது. கிரிக்கெட்டுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அதை மாற்றி எல்லா விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த ஹாக்கி போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டிகளை மாணவர்கள் பார்ப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார். போட்டிகளுக்கான விளம்பர பொம்மையான பொம்மன் சமீபத்தில் ஆஸ்கர் பெற்ற தமிழகத்தில் எடுக்கப்பட்ட ஆவணப்படம் சார்ந்ததாக இருப்பதால் பலருக்கும் போய்ச்சேரும் என்பதால் அப்பெயர் வைக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் ஜனவரி மாதத்தில் கேலோ இந்தியா போட்டிகள் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.