தமிழ்நாடு

“இஸ்லாமியர்கள் வேறு தான் வேறு என்று என்றைக்கு நினைத்ததில்லை” : இஃப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேச்சு!

இந்தியாவைக் காப்பாற்றும் ஆற்றல், சமூகநீதி - சகோதரத்துவம் - சமதர்மம் ஆகிய மூன்று கருத்தியல்களுக்குத்தான் உண்டு என இஃப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“இஸ்லாமியர்கள் வேறு தான் வேறு என்று என்றைக்கு நினைத்ததில்லை” : இஃப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.04.2023) திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் இஃப்தார் – புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- திராவிட முன்னேற்றக் கழக இஸ்லாமியர்களின் இப்தார் நிகழ்ச்சி என்று, கழகத் தலைமை நிலையச் செயலாளரும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவருமான சகோதரர் துறைமுகம் காஜா அவர்கள் அழைப்பிதழில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரைக்கும் நான் சொல்ல வேண்டுமென்றால், இது திராவிட முன்னேற்றக் கழக இஸ்லாமியர்களின் இப்தார் நிகழ்ச்சியாக மட்டுமல்ல; அனைத்து இஸ்லாமிய பெருமக்களுடைய விழாவாக இந்த விழா மிக மகிழ்ச்சியோடு, சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

“இஸ்லாமியர்கள் வேறு தான் வேறு என்று என்றைக்கு நினைத்ததில்லை” : இஃப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேச்சு!

இதில் கட்சி பேதம் இல்லை. அனைத்து மத நம்பிக்கையாளர்களும் அழைக்கப்படுகிற காரணத்தால் இதில் மத வேறுபாடுகளும் கிடையாது. ஒற்றுமையை வெளிப்படுத்தக்கூடிய, வலிமைப்படுத்தக்கூடிய விழாவாக இந்த விழா மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதை எழுச்சியோடு எல்லோரும் பெருமைப்படத்தக்க வகையில் நடத்திக்கொண்டிருக்கக்கூடிய நம்முடைய துறைமுகம் காஜா அவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

இந்த நேரத்தில் நான் மறைந்த நம்முடைய நண்பர் மஸ்தான் அவர்களின் முகம்தான் என்னுடைய நினைவுக்கு வருகிறது! என்னால் அவரை மறக்கவே முடியவில்லை!

கழகத்துக்காகவும், இசுலாமிய பெருமக்களுக்காகவும் இரவு பகல் பாராமல் உழைத்தவர். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கழகத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும் உழைத்தவர் மட்டுமல்ல, இதுபோன்ற விழாக்களை அவரே முன்னின்று நடத்தியிருக்கிறார், அந்த நிகழ்ச்சிகளில் நானும் பங்கேற்கக்கூடிய வாய்ப்பை பெற்று இருக்கிறேன். அவரை அநியாயமாக நாம் இழந்துவிட்டோம். அவர் இருந்திருந்தால் எப்படி நடத்துவாரோ அதேபோல் மிகப் பிரம்மாண்டமாக நம்முடைய துறைமுகம் காஜா அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.

“இஸ்லாமியர்கள் வேறு தான் வேறு என்று என்றைக்கு நினைத்ததில்லை” : இஃப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேச்சு!

அறிவாலயத்திற்குள் நான் நுழையும்போது வாசலில் நின்று, இரண்டு தூண்களைப் போல ஒரு தூண் நம்முடைய துறைமுகம் காஜா, இன்னொரு தூண் பூச்சி முருகன். அவர்கள் முகங்களைத்தான் நான் முதலில் பார்க்க வேண்டும், பார்த்துவிட்டு அதற்குப் பிறகுதான் நான் உள்ளே போகமுடியும். வந்திருக்கக்கூடிய கழகத் தோழர்களை, முன்னணித் தோழர்களை, கழகத்தினுடைய செயல் வீரர்களை பார்ப்பதற்கு முன்பு இந்த இரண்டு பேரை பார்த்துவிட்டு தான் நான் உள்ளே போக வேண்டும். காஜாவைப் பார்த்தால் மிகவும் அமைதியாக இருப்பார்.

ஆனால் அவர் தலைவர் கலைஞரையே எதிர்த்து நின்றவர் துறைமுகம் தொகுதியில். 1989-ஆம் ஆண்டு போட்டியிட்டு தேர்தல் களத்தில் சந்தித்தவர், தலைவர் கலைஞரை எதிர்த்து அன்றைக்கு நின்றவர். அதன்பிறகு தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கழகத்தில் வந்து சேர்ந்துவிட்டார். நம்முடைய இயக்கத்திலேயே தன்னை இணைத்துக் கொண்டார்.

2000 ஆண்டிலிருந்து 2003 வரையில் கழகத்தின் வெளியீட்டுச் செயலாளராக இருந்தார். 2003-ஆம் ஆண்டிலிருந்து தலைமை நிலையச் செயலாளராக பணியாற்ற வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் அவரை நியமித்தார்கள். இப்போது 2023! இந்த இருபது ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைமை நிலையச் செயலாளராக இருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல.

“இஸ்லாமியர்கள் வேறு தான் வேறு என்று என்றைக்கு நினைத்ததில்லை” : இஃப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேச்சு!

அதைத் தொடர்ந்து, நம்முடைய ஆட்சி மலர்ந்த பிறகு இப்போது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. காஜா போன்ற உடன்பிறப்புக்களால் தான் இன்றைக்கும் இந்த கழகம் அவராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாத அளவிற்கு ஒரு பெரும் சக்தியாக உயிரோட்டம் உள்ள ஒரு இயக்கமாக இன்றைக்கு பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இப்தார் நிகழ்ச்சியாக மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரைக்கும் ஒற்றுமையை வலியுறுத்தக்கூடிய நிகழ்ச்சியாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடக்கம், இரக்கம், உதவுதல், அன்பு, ஈகை ஆகிய அருங்குணங்களைப் பற்றிய பாடங்கள்தான் திருக்குரானில் அதிகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் இப்போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நம்முடைய பேராசிரியர் சட்டமன்ற உறுப்பினர் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் அவர்கள் பேசுகிறபோது பெருமையோடு எடுத்துச் சொன்னார். மற்றவர்களும் எடுத்துச் சொன்னார்கள்.

“இஸ்லாமியர்கள் வேறு தான் வேறு என்று என்றைக்கு நினைத்ததில்லை” : இஃப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேச்சு!

திராவிட முன்னேற்றக் கழகம் எப்போது ஆட்சிக்கு வந்ததோ, சிறுபான்மை இசுலாமிய சமுதாயத்திற்காக பல்வேறு திட்டங்கள், பல சாதனைகள் உருவாக்கித் தரப்பட்டிருக்கிறது.

1. முதல்முறை ஆட்சிக்கு வந்ததுமே மிலாதுநபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அதைக்கூட அதற்குப் பிறகு வந்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி அதை ரத்து செய்தது. மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன், ரத்து செய்ததை ரத்து செய்து மீண்டும் அரசாணை வெளியிட்டு மிலாதுநபிக்கு அரசு விடுமுறை அறிவித்தார்.

2. உருது பேசும் முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

3. சிறுபான்மையினர் நல ஆணையத்தை தொடங்கியவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான்

4. வக்பு வாரிய சொத்துக்களைப் பராமரிக்க முதன்முதலாக மானியம் வழங்கியவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

5. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தொடங்கியவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

6. உருது அகாடமியைத் தொடங்கியவர் கலைஞர்.

7. காயிதேமில்லத் மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி இடம் ஒதுக்கியதும் கலைஞர்.

8. பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு கொடுத்தவரும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்

9. காயிதேமில்லத் மகளிர் கல்லூரியை உருவாக்கியவர் கலைஞர்.

10. காயிதேமில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் கொடுத்தவர் கலைஞர்.

- இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

“இஸ்லாமியர்கள் வேறு தான் வேறு என்று என்றைக்கு நினைத்ததில்லை” : இஃப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேச்சு!

இஸ்லாமியர்கள் வேறு, தான் வேறு என்று கலைஞர் என்றைக்கு நினைத்ததில்லை. இஸ்லாமிய சமூகத்தவர் நன்றி தெரிவிக்கும் விழா நடத்திய போது, அப்போது கலைஞர் பேசுகிறபோது சொன்னார், ‘எனக்கு நன்றி சொல்லி பேசினார்கள். எனக்கு நன்றி சொல்லி உங்களிடம் இருந்து என்னைப் பிரித்துவிடாதீர்கள்’ என்று சொன்னவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.

அதே வழித்தடத்தில்தான் இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி, மன்னிக்க வேண்டும், நம் ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது.

* இந்த ஆட்சி அமைந்தவுடனே சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.

* சிறுபான்மையினர் விடுதியில் பண்டிகைகளுக்குச் சிறப்பு உணவு தரப்படுகிறது.

* உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியங்களில் பதிவுசெய்துள்ள உறுப்பினர்களுக்கு உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

* சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் கட்டப்பட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தேனி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் முஸ்லீம் உதவி சங்கம் துவங்க ஆணையிடப்பட்டுள்ளது.

* உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

* உலமாக்கள் மற்றும் பணியாளர் வாரிய உறுப்பினர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது.

* தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கான நிர்வாக மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* 4 வக்பு சரக அலுவலகங்களுக்குச் சொந்தக் கட்டடம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* பள்ளிவாசல்கள், தர்க்காக்கள், வக்பு நிறுவனங்கள் பழுது பார்ப்பதற்காக ஆண்டு தோறும் வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* வக்பு சொத்துகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

- இவை அனைத்தும் 2021-இல் நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு செய்து கொடுக்கப்பட்டிருப்பவை. இதெல்லாம் நீங்கள் கோரிக்கை வைக்காமலேயே செய்து கொடுக்கப்பட்டவை, அதுதான் முக்கியம்.

“இஸ்லாமியர்கள் வேறு தான் வேறு என்று என்றைக்கு நினைத்ததில்லை” : இஃப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேச்சு!

நம்முடைய பேராசிரியர் ஜவாஹிருல்லா சொன்னார், நேற்றையதினம் சட்டமன்றத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, அந்தத் துறையின் அமைச்சர் மஸ்தான் அவர்கள் அரசின் சார்பிலே பல அறிவிப்புகளையெல்லாம் வெளியிட்டிருக்கிறார்கள்.

1. ஏழ்மை நிலையிலுள்ள சிறுபான்மையினருக்கு, 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் 2500 விலையில்லா மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.

2. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவ – மாணவியருக்கு 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

3. சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் 2 புதிய சிறுபான்மையினர் கல்லூரி மாணவர் விடுதிகள் துவங்கப்படும்.

இதுபோன்ற பல முக்கியமான அறிவிப்புகள் எல்லாம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இவை அனைத்தும் நீங்கள் கோரிக்கை வைக்காமலேயே செய்து தரப்பட்ட திட்டங்கள்!

கோரிக்கை வைக்காமலேயே செய்கிற இந்த அரசு, கோரிக்கை வைத்து செய்யாமல் விட்டுவிடுவோமா? உறுதியாக சொல்கிறேன்.

இது திராவிட மாடல் அரசு!

கலைஞர் வழியில் நடைபெறக்கூடிய அரசு!

உங்களுக்காக நடைபெறக்கூடிய அரசு!

எல்லார்க்கும் எல்லாம் என்ற நெறிமுறைப்படி இயங்கக்கூடிய அரசு!

அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய அரசாக திராவிட மாடல் அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றைய தினம் இந்த திராவிடக் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருவதை நாம் பார்க்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றும் ஆற்றல், சமூகநீதி - சகோதரத்துவம் - சமதர்மம் ஆகிய மூன்று கருத்தியல்களுக்குத்தான் உண்டு! இந்த மூன்று கருத்தியல்களையும் ஏற்றுக்கொள்ளும் ஜனநாயக சக்திகள் இந்தியா முழுவதும் ஒன்று சேர வேண்டும்.

இந்த ஒற்றுமையானது தேர்தலுக்காக மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்துக்காக ஏற்பட வேண்டும். மீண்டும் ஒருமுறை உங்களுக்கெல்லாம் என்னுடைய ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்து இந்த சிறப்பான நிகழ்ச்சியை எழுச்சியோடு ஏற்பாடு செய்து கழகத்திற்கும் இந்த சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்து தந்திருக்கக்கூடிய நம்முடைய துறைமுகம் காஜா அவர்களுக்கு நான் மீண்டும் ஒருமுறை என்னுடைய இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்.

banner

Related Stories

Related Stories