
முரசொலி தலையங்கம்
09.03.2026
முதலமைச்சரின் பெருங்கனவு!
தமிழ்நாட்டின் பெருங்கனவுத் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி வரும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது பெருங்கனவு என்ன என்பதை அறிவித்துள்ளார். பதினான்கு துறை சார்ந்த பெருங்கனவுகளை அவர் அறிவித்துள்ளார்.
இதில் என்ன சிறப்பு என்றால் தமிழ்நாட்டு மக்கள் அனைவரிடமும் கனவுகளைக் கேட்டு அதனை மையமாக வைத்து தனது கனவுகளை அறிவித்திருப்பது தான்.
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு எவ்வாறு முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டுமென்ற ஒரு வளர்ச்சிக்கான வரைபடத்தைத் தயாரிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.
இதற்காக தமிழ்நாட்டின் 1.8 கோடி குடும்பங்களிடம் நேரடியாகச் சென்று, அவர்களின் கனவுகளை, அவர்களின் தேவைகளை, அவர்களின் எதிர்பார்ப்புகளைக் கேட்டறிய உத்தரவிட்டார். இதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று, தமிழ்நாடு அரசு அடுத்த 5 ஆண்டுகளில் அவர்களது குடும்பத்திற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்டார்கள்.
இளைஞர்களின் கனவுகள் என்ன என்பதைச் சேகரிக்கYouth Portal என்ற ஒரு சிறப்பு இளைஞர் இணையதளம் உருவாக்கப்பட்டது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் “என் ஊரு - என் கனவு” என்ற தலைப்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியாக, மாநில திட்டக்குழு சிறப்பு ஒரு நாள் கருத்தரங்கை நடத்தியது.
இவ்வாறு பல்வேறு தரப்பினரிடமிருந்தும்பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், நம் மாநிலத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான தேவைகள் என்ன என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பட்டியலிட்டார்கள். அவற்றில் முக்கியமானவற்றை முன்னுரிமைப்படுத்தி, தமிழ்நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான எனது தொலைநோக்குப் பார்வை "தமிழ்நாடு - 2030" -14 முக்கிய அம்சங்களை (To include 14 Vision Statements) நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்கள்.

1. ஐந்து ஆண்டுக்குள் கிராமப்புறங்களில், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் ஐந்து இலட்சம் வீடுகளும், நகர்ப்புறங்களில் இரண்டு இலட்சம் வீடுகளும் கட்டி மக்களுக்கு ஒப்படைப்போம்.
2. அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு கிடைக்கும். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றை கண்டறிய ஆரம்ப நிலையிலேயே சிறப்பு முகாம்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும்.
3. நிகர சாகுபடி பரப்பு 50 இலட்சம் ஹெக்டேராகவும், இயற்கை விவசாயம் 17 ஆயிரம் ஹெக்டேராகவும், உயிர் வேளாண்மை ஒரு இலட்சம் ஹெக்டேராகவும் விரிவுபடுத்தப்படும். கால்வாய்கள் - மதகுகள் புனரமைக்கப்பட்டு, நீர் மேலாண்மையை சீர்செய்து, தண்ணீர் தட்டுப்பாடான பகுதிகள் வளமான பகுதிகளாக மாற்றப்படும்.
4. ஒவ்வொரு குழந்தையும் முழுமையான கல்வியைப் பெற ‘இடைநிற்றல் இல்லா கல்விக் கனவு' திட்டம் இருக்கும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 2030-க்குள் நூறு விழுக்காடு 'Smart Class Room' அமைக்கப்படும்! 300-க்கும் மேற்பட்ட நூலகங்கள் 'Library 5.0' உருவாக்கப்படும்.
5. உயர் கல்வி மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தில் கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும். உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் 90 விழுக்காட்டை எட்டும் வகையில், நிறுவன கட்டமைப்பு விரிவாக்கப்படும்; ஆராய்ச்சியும், புதுமையும் செழிக்க மைய ஆய்வகங்களும், Center of Excellence எனும் தொழிற்கல்வி சிறப்பு மையங்களும் நிறுவப்படும். செயற்கை நுண்ணறிவு (AI), கல்வியுடன் இணைக்கப்படும்.
6. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு, கல்வியின் அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்க சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்படும். அதிகமான 'சமூகநீதிக் கல்லூரி விடுதிகள்' திறக்கப்படும்.
7. வீட்டு மனையற்ற ஒவ்வொரு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின குடும்பத்திற்கும் வீட்டு மனைப் பட்டா வழங்கிட படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். உண்டு உறைவிடப் பள்ளிகள் விரிவாக்கப்படும். அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம் விரிவுபடுத்தப்படும்.
8. கிராமங்களை வளர்க்க உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம் உருவாக்கப்படும்.
9. தொழில் துறையில் 18 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு, 50 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள், தமிழ்நாட்டின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்ந்து, உலக வணிக வரைபடத்தில் தமிழ்நாடு இடம் பிடிக்கும். "Make In Tamil Nadu” ஒவ்வொரு மாவட்டத்திலும் உயிர் பெறும். தமிழ் மொழிக்கென்றே ஒரு 'Large Language Model' உருவாக்கப்படும்.
10. அலைகளோடு போராடி வாழும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.
11. "Complete Streets" அதாவது நடைபாதை, பச்சை மரங்கள் என எழிலான சாலைகள் நகரங்களில் உருவாக்கப்படும். தமிழ்நாட்டின் நகர்ப்பகுதியில், 20 விழுக்காடு பசுமைப் பகுதிகள், பூங்காக்கள் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கலாச்சார மையங்கள் அமைக்கப்படும்.
12. சிறுகுறு நடுத்தர தொழில் துறையில் 3-ஆம் இடம் வகிக்கும் தமிழ்நாடு வரும் முதலிடத்தை பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
13. சாலை தொழில்நுட்பம், A.I. கண்காணிப்பு, Intelligent Transport Systems ஆகியவற்றால் நம் பாலங்கள், சாலைகளின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். விபத்துகள் குறைக்கப்படும்.
14. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, உற்பத்தியை பன்மடங்காக்கி, அவற்றை ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும்.
– இவை தான் முதலமைச்சர் வெளியிட்ட கனவுத் திட்டங்கள் ஆகும். "இப்போது நான் சொன்னதெல்லாம் தனிப்பட்ட ஸ்டாலினின், Statement மட்டும் கிடையாது! இது, உங்கள் கனவு! தமிழ்நாட்டு மக்களின் கனவு!" என்றும் சொல்லி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்குமான அன்பான நட்புறவு என்பது இக்கனவுகளை மட்டுமல்ல, எல்லாக் கனவுகளையும் நிறைவேற்றித் தரும்.






