
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.3.2026) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 28.25 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட முரசொலி மாறன் பூங்கா, கலைஞர் நூற்றாண்டு நாணயம் நினைவுத் தூண்;
முதல்வர் படைப்பகம், நவீன நூலகம் மற்றும் கொளத்தூர் நவீன அங்காடி ஆகியவற்றையும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 4.15 கோடி ரூபாய் செலவிலான புதிய பள்ளிக் கட்டடம், பெண்கள் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் 2 நியாய விலைக்கடைகளுடன் கூடிய பல்நோக்கு மையக் கட்டடம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
மேலும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு கழிவுநீர் உந்து நிலையங்களில் 12.48 கோடி ரூபாய் செலவில் மின்னியல், இயந்திரவியல், கட்டட கட்டமைப்புகளை மேம்படுத்தி மற்றும் வலுப்படுத்தப்பட்ட பணிகளை திறந்து வைத்தார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்
“முரசொலி மாறன் பூங்கா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நாணயம் நினைவுத் தூண்” திறப்பு
பெரம்பூர் நெடுஞ்சாலையில் 4.20 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட முரசொலி மாறன் பூங்கா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நாணயம் நினைவுத் தூண் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
முரசொலி மாறன் பூங்காவானது, பொலிவூட்டப்பட்ட நுழைவாயில், இசை நீரூற்று, பார்வையாளர் இருக்கை வசதியுடன் கூடிய சறுக்கு வளையம், நீண்ட நடைபாதை, நிழலாடிய நடைபாதை வசதிகள், தோட்டங்கள் மற்றும் கூரையுடன் கூடிய திறந்தவெளி அமைப்புகள் (Gazebos), யோகா மையம், 2 எண்ணிக்கையிலான பேட்மிண்டன் கோர்ட், சிறுவர்களுக்கான உடற்பயிற்சி உபகரணங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி;
மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன விளையாட்டுப் பகுதி, 8 வடிவ நடைபாதை, 25 எண்ணிக்கையிலான கண்காணிப்பு கேமரா வசதிகள், பொது அறிவிப்பு கருவி (PA System), உயர் விளக்கு கம்பம், 20 நபர்கள் அமரும் வகையில் இருக்கைகள், முதியோர்களுக்கென பிரத்யோக உடற்பயிற்சி உபகரணங்கள், பசுமை புல்வெளிகள், 35 வகையான தோட்ட மரங்கள் மற்றும் தாவரங்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கென நவீன கழிப்பறை வசதிகள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம் திறப்பு
ஜவகர் நகரில் முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகமானது 4,127 சதுர அடி நிலப் பரப்பளவில் 4,831 சதுர அடி கட்டடப் பரப்பளவில் 4.75 கோடி செலவில் தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
இக்கட்டடத்தின் தரை தளத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தும் வசதிகள். வரவேற்பு அறை, குழந்தைகள் படிக்கும் இடம், அலமாரிகள், மின் தூக்கி வசதிகள், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிக்கென நவீன கழிப்பறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் போட்டித் தேர்வு ஆராய்ச்சி பகுதி, கணினிப் பிரிவு, நூலகர் அறை, படிக்கும் பகுதி, அலமாரிகள், மின் தூக்கி வசதிகள் மற்றும் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிக்கென நவீன கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
கொளத்தூர் நவீன அங்காடி திறப்பு
பேப்பர் மில்ஸ் சாலையில் கொளத்தூர் நவீன அங்காடியானது 31,785 சதுர அடி நிலப்பரப்பளவில் 61,230 சதுர அடி கட்டடப் பரப்பளவில் அடித்தளம் , தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் 19.30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த அங்காடியின் அடித்தளத்தில், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் வசதிகள், பம்ப் அறை மற்றும் சேவை அறை வசதி, தரைதளத்தில் 40,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 2 கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், படிக்கட்டு வசதிகள், 2 சரக்கு மின் தூக்கி வசதிகள், 2 பயணிகள் மின் தூக்கி வசதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் வசதிகள், 22 கடைகள், 2 நிர்வாக அறை;
மின்சார அறை, காரிடார் வசதிகள் மற்றும் 3 ஆண்கள்/ பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன கழிப்பறை வசதிகள், முதல் தளத்தில் 29 கடைகள், மின்சார அறை மற்றும் 3 ஆண்கள்/ பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன கழிப்பறை வசதிகள், இரண்டாம் தளத்தில் 23 கடைகள், மின்சார அறை, 3 ஆண்கள்/ பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, ஜவஹர் நகர், 2-வது வட்டச் சாலையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் 49 இலட்சம் ரூபாய் செலவில் 840 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பெண்கள் உடற்பயிற்சிக் கூடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த உடற்பயிற்சிக் கூடத்தில் நவீன உடற்பயிற்சி உபகரணங்கள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, மின்வசதி, உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதியில் வசிக்கும் ஏராளமான பெண்கள் பயன்பெறுவர்.
அதனைத் தொடர்ந்து, ரமணா நகர், கௌதமபுரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 41 இலட்சம் ரூபாய் செலவில் 990 சதுர அடி பரப்பளவில் இரண்டு நியாய விலைக் கடைகளுடன் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
டாக்டர் அம்பேத்கர் கூட்டுறவு பண்டக சாலை கீழ் செயல்படும் இந்த 2 நியாய விலைக் கடைகளில் கடை எண் 1ல் 1,590 குடும்ப அட்டைதாரர்கள், கடை எண் 2ல் 1,097 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.
திரு.வி.க.நகர் மண்டலம், சீனிவாச நகர், 3வது பிரதான சாலையில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் 3.25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டடத்தினை மாணவர்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
இந்தப் பள்ளிக் கட்டடம் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் 960 சதுர மீட்டர் பரப்பளவில் 14 வகுப்பறைகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பள்ளியில் பயிலும் 157 மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்
தீட்டி தோட்டம் 1வது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு கழிவுநீர் உந்து நிலையங்களில் 12.48 கோடி ரூபாய் செலவில் மின்னியல், இயந்திரவியல், கட்டட கட்டமைப்புகளை மேம்படுத்தி மற்றும் வலுப்படுத்தப்பட்ட பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
40 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் கழிவுநீர் உந்து நிலையங்களில் உள்ள பழைய பம்புகளை வலுவூட்ட, அதிக அளவு உறிஞ்சும் திறன் கொண்ட புதிய பம்புகளாக மாற்றி, கழிவுநீர் உந்து நிலையங்களில் வெளியேறும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த, துர்நாற்றக்கட்டுப்பாட்டு அமைப்பு (Odour Control Unit) பொருத்தப்பட்டு மற்றும் மின் தடங்கல் ஏற்படும் நேரத்தில் தானியங்கியாக டீசல் ஜெனரேட்டரை இயங்க வைத்து தொடர்ந்து 24x7 இயக்குவதற்கும் மற்றும் பழைய கட்டடங்களை மேம்படுத்தி அழகுப்படுத்தி, இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து விஷயங்களின் இணையம் (IoT) வழியாக கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
பல்லவன் சாலையிலுள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 3,200 முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் Tally பயின்ற, 53 மாணவிகள் மற்றும் 32 மாணவர்களுக்கு மடிக்கணினிகள், சான்றிதழ்களையும், தையல் பயிற்சி முடித்த 320 மகளிர்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வாழ்த்தினார்.
கலைஞர் கண் மருத்துவமனையில் கண் பரிசோதனை செய்து கொண்ட 200 நபர்களுக்கு கண் கண்ணாடிகள் மற்றும் புத்தாடைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.






