தமிழ்நாடு

“திமுக ஆட்சியில் உயர்கல்விக்கு பொற்காலமாக இருக்கும்.. இந்த பெருமை கலைஞரையே சேரும்” : முதல்வர் பெருமிதம் !

51.4 விழுக்காடு மாணவர்கள் தமிழ்நாட்டில் உயர்கல்வி பெற்றிருக்கிறார்கள் என்றால், அந்தப் பெருமை முழுமை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்குத்தான் சேரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“திமுக ஆட்சியில் உயர்கல்விக்கு பொற்காலமாக இருக்கும்.. இந்த பெருமை கலைஞரையே சேரும்” : முதல்வர் பெருமிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.5.2022) செங்கல்பட்டு மாவட்டம், பையனூர், சாய் பல்கலைக்கழகக் கட்டடத்தை திறந்து வைத்து, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “என்னுடைய சுருக்க உரையைத் தொடங்குவதற்கு முன்னால், பன்னாட்டு கல்லீரல் மாற்றுச் சிகிச்சை கழகத்தினுடைய முதல் ஆசியத் தலைவராக தேர்வாகியிருக்கக்கூடிய மருத்துவர் முகமது ரேலா அவர்களை நான் பெருமிதத்தோடு பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். அதற்காக என்னுடைய வாழ்த்துகளைத் அவருக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தலைசிறந்த மருத்துவராகத் திகழக்கூடிய டாக்டர் ரேலா அவர்கள் தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கக்கூடியவராகத் திகழ்வது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.

தமிழ்நாட்டில், அரசின் கட்டுப்பாட்டில், அதாவது உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இப்போது 13 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இப்போது தனியார் பல்கலைக்கழகமான சாய் பல்கலைக்கழகத்தின் கல்வி கட்டடங்களைத் துவக்கி வைத்து, மாணவர்களுக்கான உயர்கல்விக்கு இன்னொரு அடிக்கல்லை நாட்டியிருக்கிறேன் என்கிற மன நிறைவு ஏற்பட்டிருக்கிறது.

இந்த அரசு உயர்கல்வியில் முதலில் இருந்தே மிகுந்த கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. அதனால்தான் நம்முடைய நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள், நுழைவுத் தேர்வை அன்றைக்கு இரத்து செய்தார்கள். இன்றைக்கு தேசிய உயர்கல்வி மாணவர் சேர்க்கையானது 27.1 விழுக்காட்டை விட அதிகமாக, அதாவது 51.4 விழுக்காடு மாணவர்கள் தமிழ்நாட்டில் உயர்கல்வி பெற்றிருக்கிறார்கள் என்றால், அந்தப் பெருமை முழுமையும் யாருக்கு சேரும் என்று கேட்டீர்கள் என்றால், நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்குத்தான் சேரும்.

பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை இரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், அதற்காக உச்சநீதிமன்ற அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அதனால்தான் நேற்று சென்னை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் நான் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னேன். பள்ளிக் கல்விக்கு பெருந்தலைவர் காமராசர் என்று சொன்னால் - கல்லூரிக்கல்விக்கு முத்தமிழறிஞர் கலைஞர் என்று நான் குறிப்பிட்டுச் சொன்னேன். அந்த வகையில் உயர்கல்விக்கு இந்தக் காலம் பொற்காலமாக இருக்கும் என்று நேற்றைக்கு நான் அங்கே வலியுறுத்திச் பேசியிருக்கிறேன். இப்போது அதை இங்கே நான் வலியுறுத்துகிறேன்.

“திமுக ஆட்சியில் உயர்கல்விக்கு பொற்காலமாக இருக்கும்.. இந்த பெருமை கலைஞரையே சேரும்” : முதல்வர் பெருமிதம் !

இங்கு வேந்தர் அவர்கள் பேசுகிறபோது, முதலமைச்சர் வந்திருக்கிற காரணத்தால் எல்லோரும் கோரிக்கை வைப்பார்கள், நான் கோரிக்கை வைக்க மாட்டேன் அப்படியென்று சொன்னார். ஆனால், இப்போது நான் அவருக்கு, முதலமைச்சர் என்ற முறையில் ஒரு கோரிக்கை வைக்க இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

உயர்கல்வியில் அகில இந்திய மாணவர் சேர்க்கை விகிதத்தைத் தாண்டி தமிழகம் முன்னணியில் நிற்பதற்கு பல காரணிகள் உண்டு. இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும், தமிழ்நாட்டில் ஆராய்ச்சித் துறைகளில் சேரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் மிக முக்கியக் காரணங்களாக அமைந்திருக்கிறது.

உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்துதான் கிடைக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்கவே நான் ஒரு திட்டத்தை அறிவித்து, அதைச் செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறேன். என்னவென்று கேட்டால், “நான் முதல்வன்” என்கிற அந்தத் திட்டம். அதாவது மாணவர்களுடைய திறமைகளை அதிகரித்து, தமிழக மாணவர்கள் சாதனைகளை நிகழ்த்தக்கூடியவர்களாக மாற வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் அதனுடைய நோக்கம். அதற்கு சாய் பல்கலைக்கழகமும், அதனுடைய நிர்வாகமும், இங்கு பணியாற்றும் விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் துணைநிற்க வேண்டும் என்று அரசின் சார்பில் முதலமைச்சர் என்ற முறையில் நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டின் உயர்கல்விக்கு சாய் பல்கலைக்கழகம் மிக முக்கியப் பங்காற்றும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. உயர்கல்விக்குப் பொற்காலத்தை அளிக்கும் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் நீங்கள் இந்தப் பல்கலைக்கழகத்தை துவக்கியிருக்கிறீர்கள். நம் இருவரின் நம்பிக்கையையும் காப்போம்! நம் மாணவர்களை உயர்கல்வியில் சிறந்த மாணவர்களாக ஆக்குவோம்! உயர்கல்விக்குப் பொற்காலத்தை உருவாக்குவோம்!

என்று கூறி – புதிதாகக் கற்க வரும் மாணவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு எடுத்துச் சொல்லி, இப்படியொரு சீர்மிகு பல்கலைகழகத்தை நடத்திவரக்கூடிய நீங்கள், தமிழ்நாட்டின் உயர்கல்விக்கு, அந்த உயர்கல்வி சேர்க்கைக்கு துணைநிற்க வேண்டும்” எனட் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories