முரசொலி தலையங்கம்

திராவிட மாடல் ஓசி மாடலா? பூர்வீகமே தட்சணையில்.. ஓசியைப் பற்றி பேசலாமா? - முரசொலி ஏடு தலையங்கம்!

எல்லாரும் வளர்கிறார்களே, எல்லாத் துறையும் வளர்கிறதே என்ற வயிற்றெரிச்சலில் உளறிக் கொண்டு இருக்கிறார்கள் என முரசொலி நாளேடு தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

திராவிட மாடல் ஓசி மாடலா? பூர்வீகமே தட்சணையில்.. ஓசியைப் பற்றி பேசலாமா? - முரசொலி ஏடு தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இது யாருக்கான ஆட்சி? - என்ற தலைப்பில் முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

‘ஓயாத உழைப்பின் ஓராண்டு' - என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் - தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

ஓராண்டு காலத்தில் என்ன சாதனை செய்துவிட முடியும் என்று பலருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் மே 7 ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த பட்டியலைக் கேட்ட போது பலரும் வியப்பில் ஆழ்ந்தார்கள். இவ்வளவு சாதனைகளா செய்யப்பட்டன என்று ஆச்சர்யப்பட்டார்கள்.

* 75 ஆவது சுதந்திர தின நினைவுத் தூண்

* சென்னையில் 230 கோடியில் மாபெரும் மருத்துவமனை

* மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம்

* சென்னையில் கலைஞர் நினைவு மண்டபம்

* அரசு பணியிடங்களில் தமிழ் தகுதித்தேர்வு கட்டாயம்

* வேளாண்மைத் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை

* இல்லம் தேடிக் கல்வி

* மக்களைத் தேடி மருத்துவம்

* நான் முதல்வன்

* இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48

* தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல்

* அறிவுசார் நகரம்

* சமத்துவபுரங்கள்

* உழவர் சந்தைகள்

* அரசு முன் மாதிரிப்பள்ளிகள்

* பத்திரிக்கையாளர் நலவாரியம்

* எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம்

* இலக்கிய மாமணி விருது

* கலைஞர் எழுதுகோல் விருது

* பேராசிரியர் அன்பழகனார் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம்

* பெருந்தலைவர் காமராசர் கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம்

* முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு

* உங்கள் தொகுதியில் முதலமைச்சர்

* சமூகநீதி நாள் உறுதிமொழி

* சமத்துவநாள் உறுதிமொழி

* வள்ளலார் பிறந்தநாள் தனிப் பெரும் கருணை நாள்

* கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்

* அன்னைத் தமிழில் அர்ச்சனை

* அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்

* மாவட்டம் தோறும் புத்தகச் சந்தைகள்

* புத்தகப் பூங்கா அமைக்க நிரந்தர இடம்

* கோவில் நிலங்கள் மீட்பு

* 10 கலை, அறிவியல் கல்லூரிகள்

* 11 புதிய ஐ.டி.ஐ. நிறுவனங்கள்

* காவல் ஆணையம்

* பொருநை அருங்காட்சியகம்

* மீண்டும் மஞ்சப்பை

- என்று தலைப்புச் செய்திகளாகச் சொன்னார் முதலமைச்சர் அவர்கள்.

"இப்படி இந்த அனைத்துத் துறைகளிலும் புகுந்து புறப்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசு. இவை அனைத்தையும் - அதன் உள்ளார்ந்த நோக்கம் சிதையாமல் அமல்படுத்திக் காட்டினோம் என்றால் தமிழ்நாடு தலை சிறந்த மாநிலமாக உயரும்" என்று உள்ளார்ந்த அக்கறையுடன் முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.

இந்த திட்டங்களை வரிசையாக நீங்கள் பார்த்தால் அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை மேன்மைப்படுத்தும் திட்டங்களாக அவை அமைந்திருப்பதைப் பார்க்கலாம். இதுதான் சில வர்ணாசிரம சக்திகளுக்குப் பிடிக்கவில்லை. எல்லாரும் வளர்கிறார்களே, எல்லாத் துறையும் வளர்கிறதே என்ற வயிற்றெரிச்சலில் உளறிக் கொண்டு இருக்கிறார்கள்.

‘திராவிட மாடல் என்றால் ஓசி மாடல். அனைத்தையும் ஓசியாகக் கொடுப்பது’ என்று ‘தலையில் பிறந்த’ பிறவி ஒன்று உளறி இருக்கிறது. பூர்வீகமே தட்சணையில் வாழக் கூடிய கூட்டத்தின் பிரதிநிதி, ஓசியைப் பற்றி பேசலாமா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற மே 7 ஆம் நாளுக்கு மாபெரும் வரலாற்றுப் புகழ் உண்டு.

சமயம் பரப்புவதற்காக தமிழ்நாட்டுக்கு வந்து -உலகம் முழுக்க தமிழ் பரவக் காரணமாக அமைந்த ராபர்ட் கால்டுவெல் அவர்களது பிறந்தநாள் மே 7 ஆம் நாளாகும். அவர் எழுதிய ‘திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூல்தான் திராவிடம் என்ற சொல்லை மொழிக்களத்தில் விதைத்தது.

எல்லா மொழிகளுக்கும் சமஸ்கிருதம்தான் தாய் மொழி என்று சொல்லப்பட்டு வந்த காலத்தில் - தமிழ் தனித்தன்மையானது - தமிழில் இருந்து தான் பல மொழிகள் உருவானது என்று சொன்ன மேதைதான் கால்டுவெல் அவர்கள்.

‘குமரி முனைக்குத் தென்பால் உள்ள பெருநாட்டில் முதன்முதல் தோன்றி வாழ்ந்த நன்மக்களே ஒரு காலத்தில் இந்திய நாடெங்கும் பரவிய தமிழர் ஆவர். தமிழரை வடமொழியாளர்கள் திராவிடர் என்று அழைத்தனர்' என்று தனது ஆய்வுத் திறத்தால் நிறுவியவர் கால்டுவெல் அவர்கள். மொழிச் சொல்லாக - இடச் சொல்லாக - இனச் சொல்லாக - இருந்ததை அரசியல் சொல்லாக அயோத்தி தாசப் பண்டிதர் அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் மாற்றினார்கள். பேரறிஞர் அண்ணாவும் - முத்தமிழறிஞர் கலைஞரும் அதனை ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள்.

இவர்களது மூலத் தத்துவத்தை முன் வைத்து நடக்கும் இந்த ஆட்சியானது ‘திராவிட மாடல்’ ஆட்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

திராவிடம் என்பது இன்று அரசியல் சொல் என்ற எல்லையைத் தாண்டி ஆட்சியியல் சொல்லாக உயர்ந்து நிற்கிறது. ‘இந்தியா எங்கும் பரவி இருந்தனர் தமிழர்’ என்றார் கால்டுவெல். இன்று இந்தியாவே வியக்கும் ஆட்சியாக இந்த திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பது திராவிட மாடல் ஆட்சி. ‘அனைத்தும் எங்களுக்கு மட்டுமே’ என்பது வர்ணாசிரம ஆட்சி. படிப்பைத் தடுக்கும். கட்டைவிரலை காவு கேட்கும். அனைவரையும் கோவிலுக்கு வெளியில் நிறுத்தும். நந்தனை எரிக்கும். மறைந்திருந்து கொல்லும். சாலைகளை மறிக்கும். நேருக்கு நேர் பார்ப்பதையே பாவம் எனும்.

இவை அனைத்துக்கும் எதிரானது திராவிடவியல். அத்தகைய ஆட்சியைத்தான் முதலமைச்சர் முன்னெடுத்து வருகிறார். அதனால்தான் அவர்களுக்கு எரிகிறது. அதனால்தான் தமிழினம் மகிழ்கிறது!

banner

Related Stories

Related Stories