தமிழ்நாடு

பேபி AB 'பதோனி' - புருவங்களை உயர்த்த செய்யும் புதிய FINISHER - யார் இந்த ஆயுஷ் படோனி?!

ஆயுஷ் பதோனி, வெற்றிகரமாக ஆட்டங்களை முடித்து வைக்கும் திறனால் இந்த இளம் வீரர் இந்த ஐ.பி.எல் சீசனில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார்.

பேபி AB 'பதோனி' -  புருவங்களை உயர்த்த செய்யும் புதிய FINISHER - யார் இந்த ஆயுஷ் படோனி?!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆயுஷ் பதோனி, வெற்றிகரமாக ஆட்டங்களை முடித்து வைக்கும் திறனால் இந்த இளம் வீரர் இந்த ஐ.பி.எல் சீசனில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார். ஆடியிருக்கும் 4 போட்டிகளிலுமே டெத் ஓவர்களில் அதிரடி சூறாவளியாக கலக்கியிருக்கிறார். லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் இவரை பேபி ஏபி (டீவில்லியர்ஸ்) வர்ணித்து ஆச்சர்யப்படுகிறார். யார் இந்த ஆயுஷ் பதோனி?

ஆயுஷ் பதோனி டெல்லியை சேர்ந்தவர். பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் பலரையும் உற்பத்தி செய்த Sonnet கிரிக்கெட் பயிற்சி மையத்திலேயே இவரும் கிரிக்கெட் பயின்றார். U16, U19 என அத்தனை வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளிலும் ஒரு கலக்கு கலக்கினார். 2016 இல் பிசிசிஐ புதிதாக ஒரு திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது. அதன்படி, இந்தியா முழுவதிலிருந்தும் இந்திய அணியின் எதிர்காலமாக வர வாய்ப்புள்ள 25 இளம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பெங்களூருவின் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

அந்த 25 வீரர்களில் ஒருவராக ஆயுஷ் பதோனியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அப்போதே எதிர்காலத்தில் இந்தியாவின் சிறந்த வீரர்கள் ஒருவராக வருவார் என தீர்மானிக்கப்பட்டுவிட்டார். அதன்படியே 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார். 2018 இல் ஆசியக்கோப்பையை அந்த இந்திய அணி வென்றிருந்தது. அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் ஆயுஷ் பதோனியே. அதிரடியாக ஆடி அரைசதம் அடித்திருப்பார். அந்த இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திலும் மிக முக்கிய வீரராக சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

பேபி AB 'பதோனி' -  புருவங்களை உயர்த்த செய்யும் புதிய FINISHER - யார் இந்த ஆயுஷ் படோனி?!

ஆனாலும், ஆயுஷ் பதோனிக்கு ஐ.பி.எல் என்பது நிறைவேறாத கனவாகவே இருந்தது. 2021 ஐ.பி.எல் ஏலத்தில் விற்கப்படாத வீரராகவே இருந்தார். இந்நிலையில்தான் 2022 இல் ஐ.பி.எல் க்கு புதிதாக இரண்டு அணிகள் வருகின்றது. அதில், லக்னோ அணிக்கு ஆலோசகராக கம்பீர் நியமிக்கப்பட்டார். லக்னோ அணி ஏலத்தில் பங்கேற்றபோது கம்பீரும் அந்த லக்னோ அணியின் குழுவில் இருந்தார். தன்னுடைய மாநிலத்தை சேர்ந்த திறமைமிக்க இளம் வீரர் என்பதால் கம்பீரின் பரிந்துரைக்கேற்ப லக்னோ அணி ஆயுஷ் பதோனியை அடிப்படை விலையான 20 லட்சத்திற்கே வாங்கியது.

லக்னோ அணி ஆடிய முதல் போட்டியிலேயே ப்ளேயிங் லெவனில் பதோனிக்கு இடம் கிடைத்தது. குஜராத்திற்கு எதிரான அந்த போட்டியில் பேட்டிங்கின் போது லக்னோ அணி கடுமையாக திணறியிருக்கும். கேப்டன் கே.எல்.ராகுல் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்திருப்பார். 29 ரன்களை சேர்ப்பதற்குள் லக்னோ 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்திருக்கும். ஒரு அறிமுக வீரர் இப்படியான சூழலில் இறங்கி சாதிப்பது அசாத்தியமான விஷயம். ஆனால், பதோனி அதை நிகழ்த்திக் காட்டினார். அவர் க்ரீஸுக்குள் வரும்போது அணியின் ஸ்கோர் 29-4 அவர் அவுட் ஆன போது அணியின் ஸ்கோர் 156-6 அணியை ஒரு மாபெரும் சரிவிலிருந்து மீட்டு அரைசதத்தை கடந்திருந்தார்.

ஆடியிருக்கும் ஒரு சில போட்டிகளுக்குள்ளாகவே 'Smart Cricketer' எனும் பெயரை எடுத்துவிட்டார். குஜராத்துக்கு எதிரான அந்த போட்டியில் நிலைமையை உணர்ந்து முதலில் நிதானமாக ஆடியவர், பின்னர் விஸ்வரூபம் எடுத்தார். ரஷீத் கானின் பந்தில் ரிஸ்க் எடுக்காமல் ஆடவே பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் விரும்புவர். ஆனால், இந்த இளம் பதோனி ரஷீத் கானுக்கு எதிராக ஸ்லாக் ஸ்வீப் ஆடி சிக்சரை பறக்கவிட்டார்.

பேபி AB 'பதோனி' -  புருவங்களை உயர்த்த செய்யும் புதிய FINISHER - யார் இந்த ஆயுஷ் படோனி?!

முதல் போட்டியில் பதோனிக்கு ஆடுவதற்கு நிறைய பந்துகள் கிடைத்திருந்தது. செட்டில் ஆகி நின்று ஆடினார். ஆனால், அடுத்த மூன்று போட்டிகளிலுமே டெத் ஓவர்களில்தான் இறங்கினார். இந்த வாய்ப்பையும் அவர் மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். சென்னைக்கு எதிராக கடைசி ஓவரில் சிக்சர் அடித்து சென்னக்கு எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச வெற்றி வாய்ப்பையும் துடைத்தெறிந்தார்.

சன்ரைசர்ஸுக்கு எதிராகவும் டெத் ஓவரில் இறங்கி 158 ஸ்ட்ரைக் ரேட்டில் ஒரு 19 ரன்களை அடித்திருப்பார். நேற்று டெல்லிக்கு எதிராக நடந்த போட்டியில் கடைசி ஓவரில் லக்னோவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. ஷர்துல் தாகூர் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்துவிட்டு வெறியோடு காத்திருந்தார். இந்த சமயத்தில் கூலாக உள்ளே நுழைந்த பதோனி ஃபீல்டர்களின் தலைக்கு மேல் ஒரு பவுண்டரியையும் ஒரு சிக்சரையும் அடித்து மூன்றே பந்துகளில் ஆட்டத்தை முடித்து வைத்தார்.

முதல் சீசனில் ஆடும் இளம் வீரர் தொடக்கத்திலேயே இத்தனை சிறப்பாக ஆட்டங்களை முடித்துக் கொடுப்பது புருவங்களை உயர்த்தியுள்ளது. இந்த சீசன் முடிகிற போது மிகச்சிறந்த ஃபினிஷர் என இவர் பெயர் எடுத்திருந்தாலும் அதில் ஆச்சர்யமில்லை.

banner

Related Stories

Related Stories