விளையாட்டு

14 பந்துகளில் அரைசதம்.. ஒரே ஓவரில் 35 ரன்கள்: மேட்ச்சை மாற்றிய பேட் கம்மின்ஸ்!

மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

14 பந்துகளில் அரைசதம்.. ஒரே ஓவரில் 35 ரன்கள்: மேட்ச்சை மாற்றிய பேட் கம்மின்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. எதிர்பார்த்ததை விட கொல்கத்தா இந்த போட்டியை சுலபமாக வெல்ல காரணமாக அமைந்தவர் பேட் கம்மின்ஸே. 14 பந்துகளில் அரைசதத்தை கடந்தவர், டேனியல் சாம்ஸ் வீசிய ஒரே ஓவரில் மட்டும் 35 ரன்களை அடித்து வெளுத்திருந்தார்.

மும்பை என்பது எப்போதுமே கொல்கத்தாவிற்கு வீழ்த்த முடியாத அணியாகத்தான் இருந்திருக்கிறது. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் ஆடியிருந்த போட்டிகளில் மும்பை 22 முறையும் கொல்கத்தா 8 முறையும் மட்டுமே வென்றிருக்கிறது. மலைக்கும் மடுவுக்குமான ஒப்பீடு போல இருக்கிறது இந்த ரெக்கார்ட். மேலும், கொல்கத்தா என்றாலே மும்பையின் கேப்டன் ரோஹித் சர்மா வெறிகொண்டு ஆடுவார். ஐ.பி.எல் கரியரியல் ரோஹித் சர்மா கொல்கத்தாவிற்கு எதிராகத்தான் அதிக ரன்களை அடித்திருக்கிறார்.

நேற்று நடந்த போட்டியில் இந்த ரெக்கார்டு முதலில் உடைபட்டது. அதாவது, ரோஹித் சர்மா தொடக்க ஓவர்களிலேயே வெறும் 3 ரன்களில் அவுட் ஆக்கினார். கொல்கத்தாவிற்கு எதிரான ரோஹித்தின் வெறியான ரெக்கார்டுகளுக்கு இந்த முறை அணைபோட்டவர் உமேஷ் யாதவ். ரோஹித்தை அடக்கியது உமேஷ் யாதவ். ஆனால், ஒட்டுமொத்த மும்பையையும் அடக்கி தங்களுக்கு எதிரான ஆதிக்கத்தை ஒட்டுமொத்தமாக ஒடுக்கியவர் பேட் கம்மின்ஸ்.

14 பந்துகளில் அரைசதம்.. ஒரே ஓவரில் 35 ரன்கள்: மேட்ச்சை மாற்றிய பேட் கம்மின்ஸ்!

மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 161 ரன்களை எடுத்திருந்தது. கொல்கத்தாவிற்கு இலக்கு 162. மும்பை அணி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை ஓரளவுக்கு கட்டுக்குள் வைத்திருந்தது. ரஸல் அவுட் ஆகும்போது அந்த அணியின் ஸ்கோர் 101-5 ரஸலும் அவுட் ஆகிவிட்டார். 5 விக்கெட்டுகளும் வீழ்ந்துவிட்டது. இனி க்ரீஸில் நிற்கும் அந்த வெங்கடேஷ் ஐயர் மட்டும் வீழ்த்திவிட்டாம் ஆட்டம் முடிந்துவிடும் என்றே மும்பை இந்தியன்ஸ் நம்பியது.

இந்த சமயத்தில்தான் பேட் கம்மின்ஸ் உள்ளே நுழைந்தார். தொடக்கத்திலிருந்தே அதிரடிதான். பும்ராவின் ஓவரில் மட்டும் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்சரையும் பறக்கவிட்டிருந்தார். டேனில் சாம்ஸின் ஓவருக்குள் பேட் கம்மின்ஸ் நுழைவதற்குள்ளேயே அவர் 8 பந்துகளில் 22 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 300 ஐ நெருங்கியிருந்தது. டேனியல் சாம்ஸின் அந்த 16 வது ஓவரில் மட்டும் 35 ரன்கள் வந்திருந்தது. 4 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிக்களை பேட் கம்மின்ஸ் அடித்திருந்தார். எல்லா சிக்சர்களும் பவுண்டரிகளும் லாங் ஆனிலும் லெக் சைடிலும் மட்டுமே வந்திருந்தது.

டேனியல் சாம்ஸ் ரவுண்ட் தி விக்கெட், ஓவர் தி விக்கெட் என மாறி மாறி வீசிய போதும் பேட் கம்மின்ஸை அவரால் அடக்கவே முடியவில்லை. சைடை மாற்றி மாற்றி வீசி என்ன ப்ரயோஜனம்? பெரும்பாலான பந்துகள் சரியாக ஸ்லாட்டிலேயே விழுந்திருந்தது. அதில், ஒரு நோ-பால் வேறு. அந்த நோ-பால் தவிர்க்கப்பட்டிருந்தால் கூட பேட் கம்மின்ஸ் அரைசதம் அடிக்காமல் வெளியேறியிருப்பார். அந்த கண்டத்திலிருந்து தப்பித்தவர் 14 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட அரைசதங்களில் இதுவும் ஒன்று. அடுத்த பந்திலேயே மேலும் ஒரு சிக்சரை அடித்து ஆட்டத்தையும் வெற்றிகரமாக முடித்து வைத்தார். கடைசி ஓவர் வரை செல்லும் என நினைக்கப்பட்ட ஆட்டம் 16 வது ஓவரிலேயே முடிவுக்கு வந்தது. பேட் கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

14 பந்துகளில் அரைசதம்.. ஒரே ஓவரில் 35 ரன்கள்: மேட்ச்சை மாற்றிய பேட் கம்மின்ஸ்!

'15 வது ஓவர் வரை ஆட்டம் எங்கள் கையில்தான் இருந்தது. அந்த 16 வது ஓவரில் பேட் கம்மின்ஸ் அப்படி அடிப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை' என மும்பையின் கேப்டன் ரோஹித்சர்மா பேசியிருந்தார். 'நேற்று பயிற்சியின் போது பேட் கம்மின்ஸ் தொடர்ந்து போல்ட் ஆகிக்கொண்டே இருந்தார். இங்கே இப்படி அவர் அடிப்பார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை' என கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருந்தார்.

'நான் இப்படி ஆடுவேன் என நானே எதிர்பார்க்கவில்லை. எனக்கே ஆச்சர்யம்தான்.' என பேட் கம்மின்ஸும் பெருந்தனமையுடன் பேசியிருந்தார். இதேபோன்ற முரட்டுத்தனமான ஆட்டங்கள் எப்போதும் அரங்கேறுவதில்லை. அரிதினும் அரிதாக எப்போதாவதுதான் நிகழும். அதை பேட் கம்மின்ஸ் நிகழ்த்திக் காட்டியதுதான் ஆச்சர்யம்!

banner

Related Stories

Related Stories