தமிழ்நாடு

“மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணம்.. ஆளுமை மிக்க தலைவர் மு.க.ஸ்டாலின்” : யெச்சூரி புகழாரம்!

“மதச்சார்பற்ற எல்லோருக்கும் ஏற்புடைத்தன்மையும், ஆளுமையும் மிக்க தலைவர் மு.க.ஸ்டாலின்” என சீத்தாராம் யெச்சூரி மதுரை பொதுக்கூட்டத்தில் பேசும் போது புகழாரம் சூட்டினார்.

“மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணம்.. ஆளுமை மிக்க  தலைவர் மு.க.ஸ்டாலின்” : யெச்சூரி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“மதச்சார்பற்ற எல்லோருக்கும் ஏற்புடைத்தன்மையும், ஆளுமையும் மிக்க தலைவர் மு.க.ஸ்டாலின்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மதுரை பொதுக்கூட்டத்தில் பேசும் போது புகழாரம் சூட்டினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது மாநில மாநாட்டையொட்டி புதன்கிழமை (30.3.2022) மதுரையில் பழங்காநத்தத்தில் என்.நன்மாறன் நினைவுத்திடலில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: இன்று நம் நாடு மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கிய மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்று குணாம்சத்தை மாற்றி ஆர்.எஸ்.எஸ்.சின் வெறிபிடித்த இந்துத்துவா ராஷ்டிரமாக சீர்குலைக்கும் நடவடிக்கையை பா.ஜ.க. ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர்.

9 நாளில் 8 முறை பெட்ரோல் விலை உயர்வு!

அத்துடன் மக்களின் வாழ்வாதாரத்தின் மீது கொடூரமான தாக்கு தலைத் தொடுத்து வருகின்றனர். வேலையில்லா திண்டாட்டம், பசி, வறுமை, பணவீக்கம், விலைவாசி உயர்வு என நெருக்கடி அதிகரித்து வருகிறது. கடந்த 9 நாட்களில் 8 முறை பெட்ரோலியப் பொருட்கள் விலையை உயர்த்தி உள்ளனர். அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் கடுமையாக உயர்த்தியுள்ளனர்.

மக்களின் வாழ்க்கை துயரங்களுக்கு தீர்வு காண்பதற்கு மாறாக வகுப்புவாத நிகழ்ச்சி நிரலைபா.ஜ.க. அரசு திணித்து வருகிறது. எனவே இந்த அரசு ஒழிய வேண்டும். நாட்டு நலன், மக்கள் நலனைப் பாதுகாக்க பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.

தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

எனவேதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளும் மதச்சார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சிக் குடியரசைப் பாதுகாக்கப் போராடுகிறோம். கூட்டாட்சி இல்லாமல் இந்திய ஒன்றியம் இல்லை. மத்திய, மாநில உறவின் அடிப்படையில் கூட்டாட்சி இல்லாமல் ஜனநாயகம் இல்லை. இதற்காக கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் காங்கிரஸ் அல்லாத முதல்வர்கள் மாநாட்டை நடத்தினார். அதை நாங்கள் வரவேற்றோம்.

அதேபோல் தற்போதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி கூட்டாட்சியைப் பாதுகாக்க பாரதிய ஜனதா அல்லாத முதல்வர்கள் மாநாட்டை நடத்த வேண்டும். அதற்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம். இந்தியாவின் மதச் சார்பின்மை, ஜனநாயகம், மாநில உரிமை அடிப்படையிலான கூட்டாட்சி, சமூக நீதி ஆகியவற்றைப் பாதுகாக்க அனைத்து மதச்சார்பற்ற மாநில கட்சிகளும் ஒன்று சேர வேண்டியது அவசியம்.

சமூக நீதி, இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் பா.ஜ.க. அரசு தொலைய வேண்டும். இடது ஜனநாயக சக்திகள் பலமடைய வேண்டும். பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைத் தோற்கடிக்கும் போரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்கியப் பங்காற்ற முடியும். சில மாதங்களுக்கு முன்பு நான் தமிழகம் வந்தபோது, மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து பாரதிய ஜனதா அல்லாத அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் எனறு கேட்டுக் கொண்டேன். கூட்டாட்சி, சமூகநீதியை பாதுகாக்க முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். இது தமிழ்நாட்டு நலனைப் பாதுகாக்கக் கூடியது மட்டுமல்ல, நாட்டு நலனைப் பாதுகாக்கக் கூடியதாகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்ட அடிப்படையில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டாட்சி, சமூக நீதியை பாதுகாக்க இது அவசியமாகும்.

மோடியை, பா.ஜ.க. அரசை, தோற்கடிக்க வேண்டும் என்கிறீர்களே, யார் தலைமை தாங்குவார்கள் என்று ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன. 2004-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பிரச்சாரம் செய்த பிரதமர் வாஜ்பாயின் அரசை வீழ்த்த வேண்டும் என கூறினோம். அப்போதும் வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை, எனவே வாஜ்பாயை தோற்கடிக்க முடியாது என்று கூறினார்கள்.

ஆனால் 2004-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவாகி, பிரதமராக மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். 2004 தேர்தலுக்கு முன்பாக, மன்மோகன் சிங் பிரதமர் ஆவார் என்று யாராவாது நினைத்துப் பார்த்தோமா? அதேபோல் 2024 தேர்தலுக்குப் பிறகு புதிய ஆட்சி அமையும். மோடி தோற்கடிக்கப்படுவார். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் வலிமை.

மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணம்!

எனவே பா.ஜ.க.வை தோற்கடிக்க அதிகபட்ச சாத்தியமான அளவுக்கு, விரிவான முறையில் அணி சேர்க்கையை உருவாக்குவோம். தமிழகத்தில் தி.மு.க. விரிவான அணி சேர்க்கையை உருவாக்கி, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை வலுவான முறையில் தோற்கடித்தது. மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது.

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள்வது மதுரைக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் மிக முக்கியமாகும். மதச்சார்பற்ற ஜனநாயக அரசு அமைய அனைத்து மாநிலங்களிலும் இதுபோல் உருவாக வேண்டும். இது நம் அனைவரின் வரலாற்றுக் கடமையாகும். இந்த பொறுப்பை நிறைவேற்ற, இந்தியாவைப் பாதுகாக்க தி.மு.க. அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories