
சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ”உங்க கனவை சொல்லுங்கள்” என்ற புதிய திட்டத்தின் அறிவிப்புகள் குறித்து வெளியிட்டார்.
அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,"“தமிழ்நாடு இன்று அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை எட்டியுள்ளது. தமிழ்நாட்டின் திட்டங்களை மற்ற மாநிலங்களும், உலக நாடுகளும் பின்பற்றி வருகின்றன.
இந்நிலையில், 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ”உங்க கனவை சொல்லுங்கள்” என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்குள்ள கனவுகளையும், மாநில வளர்ச்சி தொடர்பான கனவுகளையும் வெளிப்படுத்தும் வகையில், அவற்றை அறிந்து நிறைவேற்றும் முயற்சியாக இது அமையும்.
இந்த திட்டத்தில் 50,000 தன்னார்வலர்கள் இடம் பெறுவார்கள். இவர்கள் ஒவ்வொரு குடும்பத்தினரையும் நேரடியாக சந்தித்து, அரசின் திட்டங்களால் உங்கள் குடும்பம் பெறும் பயன்கள் மற்றும் உங்கள் கனவுகள் என்ன என்பதை பதிவு செய்வார்கள்.
விண்ணப்பத்தை செயலி மூலம் பதிவு செய்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட unique ID உருவாக்கப்படும். அதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனி கனவு அட்டை வழங்கப்படும்.
மேலும், திட்டத்தின் கீழ், இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்ற தனி இணையதளம் உருவாக்கப்படும். அதேபோல், வெளிநாட்டு வாழ் தமிழர்களின் கனவுகளையும் அறிந்து கொள்ள கருத்துகள் பெறப்படும். தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் அனைத்து துறைகளையும் சேர்ந்த அறிஞர்கள் பங்கேற்கும் ஏழு விதமான சிறப்பு கருத்தரங்குகள் அமைக்கப்படுகின்றன.
இந்த புதிய திட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. “உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத்தை ஜனவரி 9 அன்று, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.








