தமிழ்நாடு

பேரறிஞர் அண்ணா வைத்த கோரிக்கை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மாநிலப் பாடல்!

அப்படி தமிழர்களின் சுவாசமாக திகழும் ஒப்புயர்வற்ற உயர்தனி செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் மொழியை தாயாக போற்றும் தமிழர்கள், உள்ளம் மகிழ தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடுவது வழக்கம்.

பேரறிஞர் அண்ணா வைத்த கோரிக்கை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மாநிலப் பாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ் மக்கள் நெஞ்சில் தாய்மொழி உணர்வை தட்டி எழுப்ப இந்த உத்தரவு வழிதிறந்துவிட்டது. இந்த பாடலை ஏதோ ஓரிருவர் மட்டுமல்லாமல் அனைத்து விழாக்களிலும் கலந்துகொள்பவர்கள் ஒருசேர பாடினால்தான் போற்றுதலுக்குரியதாக இருக்கும் என ‘தினத்தந்தி’ நாளேடு தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு :-

“நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும், சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில், தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும், தக்கசிறு பிறைநுதலும் தரித்தனறும் திலகமுமே, அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற, எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே, தமிழணங்கே, உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து, வாழ்த்துதுமே, வாழ்த்துதுமே, வாழ்த்துதுமே, “ என்ற பாடலை பாடும்போது தமிழர்களின் நாடி நரம்புகளில் எல்லாம் தமிழ் உணர்வுகள் தழைக்கும்.

இந்த தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 100 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு உண்டு. 1913-ம் ஆண்டு கரந்தை தமிழ்ச்சங்கத்தின் 3-ம் ஆண்டு அறிக்கையில் நீராரும் கடலுடுத்த என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. 1914-ம் ஆண்டு முதல், கரந்தை தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு விழாக்களில் எந்த நிகழ்ச்சிகள் என்றாலும் சரி தொடக்கத்தில் இந்த பாடலை பாடியே மகிழ்ந்தார்கள். 1967-ல் மறைந்த பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்ற நேரத்தில், கரந்தை தமிழ்ச்சங்க நிர்வாகிகள் அண்ணாவிடம் இதை மாநில பாடலாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அண்ணா இதுகுறித்து பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்கும் முன்பே மறைந்தார்.

பேரறிஞர் அண்ணா வைத்த கோரிக்கை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மாநிலப் பாடல்!

தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி பதவி ஏற்றவுடன், 1970-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி இந்த பாடலை அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் பாடும் வாழ்த்து பாடலாக அமையும் என்று கூறி, தொடர்ந்து மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசை அமைக்க, பின்னணி பாடகர்கள் டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா ஆகியோர் பாடும் ‘நீராரும் கடலுடுத்த’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசை தட்டுகளாக வெளியிடப்பட்டு, அரசு விழாக்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய இந்த பாடல் அன்று முதல் எல்லா அரசு நிகழ்ச்சிகளிலும் இசை தட்டுகள் மூலம் ஒலிபரப்பப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் சமீபத்தில் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் நீதிபதி, “தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு இறைவணக்க பாடல் தான். தேசிய கீதம் அல்ல. இந்த பாடலை பாடும்போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் என்று எந்தவித சட்டமோ, நிர்வாக உத்தரவோ இல்லை” என்று கூறினார். இந்த உத்தரவு வந்த உடனேயே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் என்ற வகையில், ஒரு அரசாணை வெளியிட முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவில், “நீராரும் கடலுடுத்த” தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்படுகிறது. 55 வினாடிகளில் முல்லைப்பாணியில் (மோகன ராகத்தில்) இந்த பாடல் பாடப்படவேண்டும். தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவேண்டும். இதில் முக்கியமாக, இந்த வாழ்த்து பாடலை இசை தட்டுக்கள் கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து, பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடவேண்டும்.

இந்த பாடல் பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்கவேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணாவிடம் வைத்த கோரிக்கை மு.க.ஸ்டாலினால் நிறைவேற்றப்பட்டுள்ளது மிகவும் வாழ்த்துக்குரியது. வரவேற்புக்குரியது. தமிழ் மக்கள் நெஞ்சில் தாய்மொழி உணர்வை தட்டி எழுப்ப இந்த உத்தரவு வழிதிறந்துவிட்டது. இந்த பாடலை ஏதோ ஓரிருவர் மட்டுமல்லாமல் அனைத்து விழாக்களிலும் கலந்துகொள்பவர்கள் ஒருசேர பாடினால்தான் போற்றுதலுக்குரியதாக இருக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories