முரசொலி தலையங்கம்

“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!

“திருக்குறள் தேசிய நூல் ஆகட்டும்!” என உலகப் பொதுமறையின் சிறப்பை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!

“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘வள்ளுவர் மறை - வைரமுத்து உரை’ என்ற நூலை வெளியிட்டு உரையாற்றிய முதலமைச்சர் அவர்கள், திருக்குறளை தேசிய நூலாக ஆக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதனை முன்னெடுக்கும் அமைப்பு ஒன்றை தலைநகர் டெல்லியில் அமைக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

தலைநகர் சென்னையில் வள்ளுவருக்கு கோட்டமும், அலைநகராம் குமரியில் அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடியில் சிலை மற்றும் அமைப்பு முற்றமிழ்ஞர் கலைஞர். அவர் வழியில் திருக்குறள் கருத்துகளை முன்னெடுத்துப் பரப்பும் பணியில் இன்றைய முதலமைச்சர் அவர்களும் இறங்கி இருக்கிறார்கள். குமரியில் வள்ளுவர் சிலை வைக்கப்பட்டு கால் நூற்றாண்டு ஆகிறது. அந்த வெள்ளிவிழாவை மிகச் சிறப்பாக நடத்தினார் முதலமைச்சர் அவர்கள். அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் கவனிப்பாரற்றுப் போன சென்னை வள்ளுவர் கோட்டத்தை ரூ.80 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்தார் முதலமைச்சர் அவர்கள்.

டிசம்பர் மாதம் கடைசி வாரம் ‘குறள் வாரம்’ என்று இன்றைய அரசு அறிவித்துள்ளது. இளைய சமுதாயம், மாணவர் மத்தியில் குறளைக் கொண்டு சேர்க்கும் வகையில் முற்றோதல் போட்டிகளை நடத்தி வருகிறது அரசு. திருக்குறள் மாணவர் மாநாட்டை அரசு நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாகத் தான், ‘திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்’ என்ற முன்னெடுப்பை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிவிக்கப்படும் முக்கியமான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று.

‘‘திருக்குறள் என்பது தமிழனுடைய தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையில் பிறந்து உலகமெல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக விளங்குகிறது’’ என்று இனமானப் பேராசிரியர். அவர்கள் சொன்னார்கள். எழுதப்பட்ட மொழி தமிழாக இருந்தாலும் எழுதப்பட்ட கருத்துகள் உலகிற்கு பொதுவானவை ஆகும். இத்தகைய பொதுமைத் தன்மை வேறு எந்த மொழி நூலுக்கும் இல்லை.

தமிழில் எழுதப்பட்டதாக இருந்தாலும் தமிழ் என்ற சொல் குறளில் இல்லை. திருவள்ளுவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்த நிலப்பரப்பைக் குறிப்பிடவில்லை. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றை மட்டுமே நீதியாகச் சொன்னார். இம்மூன்றும் நமக்கு மட்டும் அல்ல, உலகம் முழுமைக்கும் பொதுவான நீதியாகும்.

இறைவன் என்று சொல்லப்படுவதும், குறிப்பிடத்தக்க ஏதோ ஒரு மதத்தைச்சேர்ந்த இறைவன் அல்ல. சில குணங்களைத் தான் வள்ளுவர் அவ்வாறு குறிப்பிடுகிறார். திருவள்ளுவர் கடவுளை ஏற்றுக் கொண்டாரா, இல்லையா? முன்வினையை ஏற்றுக் கொண்டாரா இல்லையா? என்பது தமிழ்நாட்டில் காலம் காலமாக நடந்து வரும் விவாதம் ஆகும். கடவுள் வாழ்த்தை ‘வழிபாடு’ என்று தலைப்பிட்டார் தலைவர் கலைஞர். ஊழ் என்பதை இயற்கை என்று தலைப்பிட்டார் தலைவர் கலைஞர்.

“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!

இதன் வெளியீட்டு விழாவுக்கு தலைவரால் அழைக்கப்பட்டவர் ஆன்மீகத்திலும் அழுத்தமான பற்றுக் கொண்ட அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள். இந்த இரண்டு சொல்லையும் அவர் ஏற்றுக்கொண்டு பேசிய பிறகு தான் கலைஞர் அவர்களுக்கு பெரிய நிம்மதி ஏற்பட்டது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், ‘அறிவு வணக்கம்’ என்று சொல்லி இருக்கிறார். ஊழ் என்பதை, ‘சூழ்நிலை’ என்கிறார். இத்தகையஉலகப் பொதுமைப் பண்பு கொண்டது தான் திருக்குறள்.

ஆதிபகவன் முதற்றே உலகு, நீரின்றி அமையாது உலகு, வகை தெரிவான் கட்டே உலகு, பெருமை உடைத்து உலகு, சுழன்றும் ஏர் பின்னது உலகு என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகத்தை அடிப்படையாக வைத்து எழுதினார் வள்ளுவர். அவர் வேறு பிடித்து, காலூன்றி நின்ற இடம் தமிழ்நாடாக இருந்தாலும் அவரது பார்வை உலகப் பார்வை ஆகும். உலகு தொழில் நுட்பமானது, ‘குலோபல் வில்லேஜ்’ ஆக்கிவிட்டது என்று இன்று நாம் சொல்லி வருகிறோம். ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு தமிழன் தனது சிந்தனையால் ‘உலகம் நமது’ என்ற பரந்த பார்வையைச் சிந்தனையால் செலுத்தி இருக்கிறார்.

வள்ளுவ மனிதன், உலக மனிதனுக்குச் சொன்ன அறநூலை, இந்திய அரசு போற்ற வேண்டும். உரிய மதிப்பு தர வேண்டும். இதனைச் செய்ய வேண்டியது நமது கடமை என்பதைத்தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு அனைவருக்கும் உணர்த்துகிறது.

‘உலகளாவிய மனிதனின் ஒரு பாடகர்’ என்று வள்ளுவரைச் சொன்னார்ஜி.யு.போப். ‘உலகில் உள்ள பொருள்கள் எல்லாம் மாறுகின்றன, மறைகின்றன. ஆனால் திருவள்ளுவரின் புகழ் மாறவுமில்லை, மறையவுமில்லை’ என்றும் அவர் சொன்னார். ‘உலகச் சிந்தனையை உள்ளடக்கிய தொகுப்பு’ என்று திருக்குறளைச் சொன்னார் ஆல்பர்ட் சுவைட்சர். ‘இன்னா செய்யாமை’ அதிகாரத்தை தனது கடிதங்களில் மேற்கோள் காட்டினார் லியோ டால்ஸ்டாய்.

பெர்னாட்ஷா, புலால் மறுப்பு குறளை வியந்து எழுதி இருக்கிறார். ‘சாதி, சமய, இன வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் மனித இனம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய சிந்தனைகளைச் சொல்லி இருக்கிறார் வள்ளுவர்’ என்பது 1848 ஆம் ஆண்டு. ஆண்டு பிரெஞ்சு நாட்டு அறிஞர் எம்.ஏரியல் சொல்லி இருக்கிறார். அறிவுக்கு முக்கியத்துவம் தருவதை இங்கர்சால் போற்றி இருக்கிறார். ‘அனைத்து உலகத்துக்கும் கலங்கரை விளக்கம் இது’ என்றார் வீரமாமுனிவர்.

16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்ச்சுக்கீசிய பாதிரியார் ஜோமா டி விலா கோந்தே என்பவர் திருக்குறளைப் புகழ்ந்து இலங்கையில் பேசி இருக்கிறார். வீரமாமுனிவர் முதன் முதலில் 1730 ஆம் ஆண்டு திருக்குறளை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். 1747 ஆம் ஆண்டு பிரெஞ்சுமொழியில் திருக்குறள் திரட்டு வந்துவிட்டது.

திருக்குறள் பாடல்கள் சில ஆங்கிலத்தில் 1794 ஆம் ஆண்டு சிறுநூலாக வெளியாகி இருக்கிறது. எனவே திருக்குறள் இந்த உலகிற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்துவிட்டது. இந்த அடிப்படையில்தான் முதலமைச்சர் அவர்களின் கோரிக்கை வலிமை பெறுகிறது.

‘உலகில் எங்கு போனாலும் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுகிறார் பிரதமர் மோடி’ என்று சொல்லப்படுகிறது. இது உண்மையானால், திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும். அறிவிப்பு செய்ய வேண்டும்.

banner

Related Stories

Related Stories