சேலம் மத்திய மாவட்ட தி.மு.க மற்றும் ஓமலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க சார்பில் திராவிட மாடல் அரசின் 4 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி," தமிழ்நாட்டின் மொழி, மண், இனம் காப்பதற்காக கழக தலைவர் முதலமைச்சரின் உத்தரவுபடி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு உள்ளது.
இந்த வரவேற்புக்கு காரணம் திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனைத் திட்டங்கள்தான். ஒவ்வொரு குடும்பத்திலும் நமது திட்டங்களால் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். கழகத்திற்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்துக் கொள்ள முடியாத பழனிசாமி உளறி கொண்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டஒழுங்கு பிரச்சனை இருப்பதுபோல் காட்ட முயற்சிக்கிறார். அவருக்கு சட்டம் ஒழுங்கை பற்றி பேச அருகதை இல்லை. ஆயுள் கைதியாக இருக்க வேண்டிய பழனிசாமி, செங்கோட்டையானால் காப்பாற்றப்பட்டார் என்பதை மறந்துவிடக் கூடாது.
அமித்ஷாவின் மிரட்டலுக்கு பயந்து அ.தி.மு.கவையும், அக்கட்சி தொண்டர்களையும் அடகுவைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. மகனையும், உறவினர்களையும் காப்பாற்றிக் கொள்ளவே பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து மீண்டும் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி” என தெரிவித்துள்ளார்.