
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.03.2026) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 78 கோடியே 41 இலட்சம் ரூபாய் செலவில் இராமநாதபுரம் மாவட்டம், வல்லிமாடன்வலசையில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரம், நாமக்கல் மாவட்டம், வையப்பமலையில் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு சுப்ரமணிய சாமி திருக்கோவில் மலைச்சாலை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அலுவலகக் கட்டடங்கள், பொது சுகாதார கட்டடங்கள், சமுதாயக்கூடங்கள், பள்ளிக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
=> இராமநாதபுரம் மாவட்டம், வல்லிமாடன்வலசை சமத்துவபுரம் திறந்து வைத்தல் :
சமூக நீதியை மேம்படுத்தவும், தந்தை பெரியாரின் சமுதாய சமத்துவ கொள்கையினை பரப்புவதும் சமத்துவபுரம் அமைப்பதன் முக்கியமான நோக்கமாகும். இங்கு 100 வீடுகள் கட்டப்பட்டு 40:25:25:10 என்ற விகிதாச்சார அடிப்படையில் முறையே ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர வகுப்பின மக்கள் குடியமர்த்தப்படுகிறார்கள்.
ஒரு சமத்துவபுரத்தில் 100 வீடுகள் அமைக்கப்படுவதோடு, சாலைகள், குடிநீர் வசதிகள் மற்றும் தெருவிளக்கு போன்ற பொது உட்கட்டமைப்பு வசதிகளுடன், தேவையின் அடிப்படையில் பொது விநியோகக் கடை, சமுதாயக்கூடம், நூலகக் கட்டடம், பள்ளிக் கட்டடம் மற்றும் கழிவறை, அங்கன்வாடி, விளையாட்டு மைதானம், பூங்கா போன்ற பிற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற இந்த ஐந்து ஆண்டு காலத்தில் 9 சமத்துவபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி கொத்தக்கோட்டை, வள்ளிமாடன்வலசையில் 7 கோடியே 91 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தினை முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.

=> நாமக்கல் மாவட்டம், வையப்பமலையில் அருள்மிகு சுப்ரமணிய சாமி திருக்கோவில் மலைச்சாலையை திறந்து வைத்தல் :
நாமக்கல் மாவட்டம் – மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், வையப்பமலையில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணிய சாமி திருக்கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான கோவிலாகும். இக்கோவிலுக்கு சுற்று வட்டார மற்றும் அண்டைய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வாரந்தோறும் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, வெள்ளி, மாதந்தோறும் கிருத்திகை நாட்கள், சஷ்டி திதிகளில் மற்றும் வருடாந்திர விழாக்களான தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா நாட்களில் பெருமளவில் கடினமான மலை பாதையின் மூலமாக மிகுந்த சிரமத்துடன் நடந்து சென்று மலை மேல் உள்ள முருகனை தரிசனம் செய்து வந்தனர்.
இதனை கவனத்தில் கொண்டு, பக்தர்களின் துயர்துடைத்து, அவர்களின் இன்னலை நீக்கிடும் விதமாக, பக்தர்கள் எளிதாக மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திட வசதியாக 850 மீட்டர் நீளத்திற்கு பாதுகாப்பான புதிய மலைச்சாலை மற்றும் வாகனங்கள் நிறுத்த வசதி ஆகியவை 4 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
=> முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல் :
ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை சந்திக்க வரும் பொதுமக்கள் ஆகியோரின் வசதிக்காக, பழைய பழுதடைந்த கட்டடங்களுக்குப் பதிலாக, புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்டும் திட்டம் 2008-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான அரசால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, தற்போது வரை 340 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 293 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்டம் - தாராபுரம் ஒன்றியத்தில் 5 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவிலும், திருவண்ணாமலை மாவட்டம் – செய்யாறு ஒன்றியத்தில் 5 கோடியே 90 இலட்சம் செலவிலும், தெள்ளார் ஒன்றியத்தில் 5 கோடியே 36 இலட்சம் செலவிலும், புதுப்பாளையம் ஒன்றியத்தில் 5 கோடியே 90 இலட்சத்து செலவிலும், கடலூர் மாவட்டம் – விருத்தாசலம் ஒன்றியத்தில் 5 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவிலும், விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி ஒன்றியத்தில் 5 கோடியே 56 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவிலும், மதுரை மாவட்டம் – அலங்காநல்லூர் ஒன்றியத்தில் 5 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவிலும், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 5 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் சிவகங்கை மாவட்டம் – சிவகங்கை ஒன்றியத்தில் 5 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடமானது 17,324 சதுர அடி பரப்பளவில், இரண்டு தளங்களுடன், ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கு, பயிற்சி அரங்கு, ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான அறைகள், பொறியியல் பிரிவிற்கென தனி அலுவலகம், கணினி அறை, எழுதுபொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம் - திருப்பத்தூரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் / திட்ட அலுவலருக்கான அரசுப் பணிகளை 24/7 மணி நேரமும் ஒருங்கிணைத்து, கண்காணித்திட 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புடன் கூடிய முகாம் அலுவலகம்;
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கி வரும் உட்கோட்ட அளவிலான அலுவலகங்களை ஒருங்கிணைக்கும் வகையில், உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் உதவி இயக்குனர் மற்றும் பல்வேறு அலுவலர்களுக்கு தனித்தனி அறைகளுடன் 3 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உட்கோட்ட அலுவலக வளாகக் கட்டடம்;
ஊரகப் பகுதிகளில் பொது சுகாதரத்தினை மேம்படுத்திடும் விதமாக, தேனி மாவட்டம் – பெரியகுளம் ஒன்றியம், இ.புதுப்பட்டி ஊராட்சியில் 60 இலட்சம் ரூபாய் செலவிலும், உத்தமபாளையம் ஒன்றியம், கோம்பை ஊராட்சியில் 50 இலட்சம் ரூபாய் செலவிலும், கோயம்புத்தூர் மாவட்டம் – பொள்ளாச்சி (வடக்கு) ஒன்றியம், ராமபட்டினம் ஊராட்சியில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவிலும், சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஒன்றியம்- திடக்கோட்டை ஊராட்சியில் 45 இலட்சத்து ரூபாய் செலவிலும், புதுக்கோட்டை மாவட்டம் – புதுக்கோட்டை ஒன்றியம், ஆதனக்கோட்டை ஊராட்சியில் 50 இலட்சம் ரூபாய் செலவிலும், எம்.குலவாய்பட்டி ஊராட்சியில் 41 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – மணப்பாறை ஒன்றியம், புத்தாநத்தம் ஊராட்சியில் 65 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 7 பொதுசுகாதார கட்டடங்கள்;
ஊரகப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் இல்ல விழாக்களை சிறப்புற எளிமையாக நடத்திட தேனி மாவட்டம் – போடிநாயக்கனூர் ஒன்றியம், டொம்புச்செரி ஊராட்சியில் 47 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவிலும், கோயம்புத்தூர் மாவட்டம் – சுல்தான்பேட்டை ஒன்றியம் கம்மாலப்பட்டி ஊராட்சியில் 48 இலட்சம் ரூபாய் செலவிலும், புதுக்கோட்டை மாவட்டம் – கந்தர்வகோட்டை ஒன்றியம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் 80 இலட்சம் ரூபாய் செலவிலும், மதுரை மாவட்டம் – திருமங்கலம் ஒன்றியம் செக்கானூரணி ஊராட்சியில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவிலும், கட்டப்பட்டுள்ள 4 சமுதாயக்கூட கட்டடங்கள்;
கல்விக்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் “குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” என்று ஊரகப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் குழந்தை நேய சிறப்பு அமைப்புகளான உயர்த்தப்பட்ட மேற்கூரை, விசாலமான தாழ்வாரம், காற்றோட்டமிக்க ஜன்னல் வசதிகள், வழுக்காத தரைகள், கற்றலை ஊக்குவிக்கும் சுவர் ஓவியங்கள், வாழ்க்கைப் பாடங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். அதன்படி, சிவகங்கை மாவட்டம் – சிவகங்கை ஒன்றியம், நாச்சாங்குளம் மற்றும் செலுகை ஊராட்சியில் 72 இலட்சத்து ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 பள்ளிக் கட்டடங்கள்,
என மொத்தம் 78 கோடியே 41 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.






