கோவை மாவட்டம் அவினாசி சாலை லட்சுமி மில்ஸ் பகுதி அருகே தனியார் வணிக வளாகம் உள்ளது. அந்த வணிக வளாகத்தில் ரோலிங் டப் கபே என்ற ஐஸ்கிரீம் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் இளைஞர் மற்றும் மாணவர்கள் அதிகளவில் கூடுவதற்கு மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும் இந்தக் கடையில் விற்படும் ஐஸ் கிரீம்களில் மது பானம் கலந்து விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்தக் கடையில் சோதனை செய்தனர். சோதனை செய்தபோது, உணவு கையாளுபவர்கள் உரிய மருத்துவ தகுதி சான்றிதழ்கள் பெறவில்லை என்றும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயார் செய்யும் இடம் இருந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் அந்த கடையில் இருந்து 2 மது மாட்டில்கள் மற்றும் காலாவதியான உணவுகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் உணவுப் பாதுகாப்பு துறையின் கீழ் பெறப்படும் உரிமத்தை காட்சிப்படுத்தவில்லை என பல்வேறு விதிமீறல் குற்றச்சாட்டுகள் அந்த கடையின் மீது இருந்துள்ளது.
இதனையடுத்து சுகாதாரத்துறை உத்தரவின் பேரில் அதிகாரிகள் அந்தக் கடையை பூட்டி சீல் வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.