தமிழ்நாடு

“நாளை 3வது மெகா தடுப்பூசி முகாம்... விரைவிலேயே 5 கோடியை எட்டுவோம்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!

“விரைவிலேயே 5 கோடி பேர் தமிழகத்தில் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டுள்ளனர் என்ற நிலையை எட்டிடுவோம்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“நாளை 3வது மெகா தடுப்பூசி முகாம்... விரைவிலேயே 5 கோடியை எட்டுவோம்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு முழுவதும் நாளை (26-9-2021) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி, செப்.27 அன்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள முகாம்களுக்குப் பொதுமக்கள் செல்லவேண்டாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 40 ஆயிரம் முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கை விடக் கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

செப்.19ஆம் தேதி இரண்டாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில், 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிடக் கூடுதலாக 16 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

அதேபோல் நாளை (செப்.25) தமிழகம் முழுவதும் மூன்றாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தற்போது 29 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்திருக்கின்றன. அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசிகளைச் செலுத்தி தடுப்பூசி முகாமை நடத்துவதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அலுவலர்கள் தமிழகம் முழுவதும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

நீங்கள் வசிக்கக்கூடிய பகுதியிலேயே 40 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளன. எனவே இம்முகாம்களில் நீங்களாகவே முன்வந்து இரண்டாம் தவணைத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும்.

இதுவரை தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்கள் 56% பேர். 2வது தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்கள் 17% பேர். நாளை தடுப்பூசி முகாமில் 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இலக்கைத்தாண்டி கூடுதலாக 20 லட்சத்திலிருந்து 25 லட்சம் தடுப்பூசிகள் வெற்றிகரமாகச் செலுத்தப்படும்.

இதுவரை தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் மூலம் 4 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரத்து 75 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசின் வழிகாட்டுதல்கள், தொடர் அறிவுறுத்தலின் அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளின் சார்பில் 24 லட்சத்து 47 ஆயிரத்து 65 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆக 4 கோடியே 41 லட்சத்து 97 ஆயிரத்து 140 பேருக்கு தமிழகத்தில் இதுவரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. விரைவிலேயே 5 கோடி பேர் தமிழகத்தில் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டுள்ளனர் என்ற நிலையை எட்டிட வேண்டும்.

மருத்துவக் களப்பணியாளர்கள் இத்தடுப்பூசி முகாம்களுக்காக, முகாம் நடைபெறுவதற்கு முன்பும், தடுப்பூசி செலுத்திய பிறகும் 15 மணி நேரம் கடும் உழைப்பைக் கொடுக்கின்றனர். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். தடுப்பூசி முகாம்களில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்கள் அடுத்தநாள் திங்கட்கிழமை விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். பொதுமக்களும் திங்கட்கிழமை தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்குத் தடுப்பூசி முகாம்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories