தமிழ்நாடு

“தி.மு.க-வுக்கு வாக்களிக்கலையேன்னு இப்போ வருத்தப்படுறேன்” - அரசின் உடனடி உதவியால் பெண் நெகிழ்ச்சி!

‘சிந்தனைக்களம்’ நிகழ்ச்சியில் வைத்த கோரிக்கைக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனடி நடவடிக்கை எடுத்தது குறித்து பயனாளி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

“தி.மு.க-வுக்கு வாக்களிக்கலையேன்னு இப்போ வருத்தப்படுறேன்” - அரசின் உடனடி உதவியால் பெண் நெகிழ்ச்சி!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சிந்தனைக்களம்’ நிகழ்ச்சியில் வைத்த கோரிக்கைக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனடி நடவடிக்கை எடுத்தது குறித்து பயனாளி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

சேலத்தைச் சேர்ந்தவர் ராஜநந்தினி. இவருக்கு 14 வயதில் ஜனனி என்ற மகள் உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு சிறுநீரக செயலிழப்பு காரணமாக கோயம்புத்தூரிலுள்ள கே.எம்.சி.ஹச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜனனி. அங்கு அவருக்கு அவசரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டிய சூழல் காரணமாக அவரது தாய் நந்தினி தன்னுடைய சிறுநீரகத்தை ஜனனிக்கு கொடுத்தார். பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து சில வாரங்களிலேயே அவருக்கு பொருத்தப்பட்ட சிறுநீரகம் வேலை செய்யவில்லை என தெரிவிக்கவே அதிர்ந்து போயுள்ளார் நந்தினி.

தன் கணவரும் கைவிட்டதால் பெண் குழந்தையோடு பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார் ராஜநந்தினி. 2019ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்துள்ளார். அதற்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பாருங்கள் என பதில் வந்தது அவரை மேலும் உடைந்துபோகச் செய்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்ததும் உடடியான பதில் கிடைத்தது. இந்நிலையில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சிந்தனைக்களம்’ நிகழ்ச்சியில் ராஜநந்தினி பேசிய வீடியோவும் ஒளிப்பரப்பானது. இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராஜநந்தினியை தொடர்புகொண்டு பேசி தேவையான உதவிகளைச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாகப் பேசியுள்ள ராஜநந்தினி, “நான் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசுகிறேன் என்றதுமே எனக்கு நம்பிக்கை பிறந்துவிட்டது. அடுத்தநாளே அனைத்து உதவிகளும் கிடைக்கத் துவங்கியது. அமைச்சரே எங்களிடம் நேரில் பேசினார், என் குடும்பம் எங்களுடன் இருந்து செய்யவேண்டியதை இந்த அரசு செய்கிறது. இந்த அரசுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். தி.மு.க-வுக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டேன் என இப்போது வருந்துகிறேன். பொதுமக்களுக்கு கஷ்டம் என்றதும் ஓடோடி வந்து உதவும் அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது.

இப்போது எங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் தங்க இடம் கொடுத்து நான் கேட்டதற்கு இணங்க சமைக்க தேவையான பொருட்களை கொடுத்து, குடும்ப உறுப்பினர் போல் உதவி வருகிறார்கள். உண்மையாக உதவி தேவைப்படுவோருக்கு நிச்சயமாக இந்த அரசு உதவும். தலைமை சரியாக இருந்தால் ஒவ்வொரு துறையும் சரியாக இருக்கும் என்பதற்கு தமிழ்நாடு அரசே சாட்சி. இவர்களால்தான் இன்று உயிரோடு இருக்கிறோம்” என கலங்கிய கண்களோடு பேசினார்.

பின்னர் பேசிய மாணவி ஜனனி, “அமைச்சர் அவர்களை நேற்று சந்தித்தேன். எனக்கு உதவுவதாக கூறினார். அடுத்த நாளே எனக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்தனர். மருத்துவர்கள் உதவியாக இருக்கின்றனர். என்னை காப்பாற்றிவிடுவார்கள் என நம்புகிறேன்.

சென்னையில் எங்களுக்கு யாருமில்லை. எங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்க இடம் கொடுத்துள்ளனர். மருத்துவர்கள் இங்கு அருகில் இருந்து நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள்” என்றார்.

மக்கள் நல்வாழ்வு என்பது பெயரளவில் மட்டுமல்லாமல் அதனை உணர்வுபூர்வமாக செய்பவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்றால் அது மிகையல்ல. விருப்பு வெறுப்பினை கடந்து அனைவருக்குமானவராய் அனைத்துமானவராய் திகழ்கிறார் தமிழ்நாடு முதல்வர் என்பதே நிதர்சனமான உண்மை.

banner

Related Stories

Related Stories