தமிழ்நாடு

“அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்தா ஜெயிக்க முடியாது” : தனித்துப் போட்டியிடும் பா.ம.க - உடைந்தது கூட்டணி!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பா.ம.க அறிவித்துள்ளது.

“அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்தா ஜெயிக்க முடியாது” : தனித்துப் போட்டியிடும் பா.ம.க - உடைந்தது கூட்டணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்து பா.ம.க போட்டியிட்டது. எனினும், அ.தி.மு.கவுக்கும், பா.ம.கவுக்கும் இடையே சின்ன சின்ன உரசல்கள் இருந்து வந்தன.

இந்நிலையில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பா.ம.க அறிவித்துள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க, பா.ம.க இடையே கூட்டணி முறிந்தது உறுதியாகியுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து காணொலி காட்சி மூலம் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "பா.ம.கவால் கூட்டணி கட்சியினர் பலனடைந்துள்ளனர். ஆனால் அவர்களால் நமக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சீட் கிடைக்காத அ.தி.மு.கவினர் கூட்டணி தர்மத்தை மீறி சுயேட்சையாக போட்டியிட்டனர்.

அப்போது அ.தி.மு.க தலைமையால் இவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அ.தி.மு.க.வுடன் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைத்தால் வெற்றி பெற முடியாது. தேர்தலில் தனித்து நின்று பா.ம.க.வின் வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பா.ம.க தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத, புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து செப்டம்பர் 15 ,16ம் தேதி விருப்ப மனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலைக் குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories