ஜவுளிக்கடை ஒன்றில் இளைஞர் ஒருவர் நூதன முறையில் துணிகளை திருடி மாட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தாமரை மொழி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமதன். இவர் திசையன்விளை பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் துணி எடுக்கச் சென்றுள்ளார்.
ட்ரையல் ரூமுக்குச் சென்ற செல்வமதன் ஒவ்வொரு துணியாக மாற்றிப் பார்த்துள்ளார். பனியன், டீசர்ட்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அணிந்து கொண்டதோடு அவர் அணிந்திருந்த லுங்கிக்குள்ளும் புதுத் துணிகளைச் சுருட்டி வைத்துள்ளார்.
துணி எடுத்துக்கொண்டு ட்ரையல் ரூமுக்குள் சென்று, துணி இல்லாமல் வெளியே வந்ததால் அவர் மீது சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து அவர் அணிந்திருந்த டீசர்ட்டை கழற்றுமாறு கூறி, திருடிய துணிகளையெல்லாம் வாங்கியுள்ளனர்.
இதுகுறித்து கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நூதன திருட்டு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.