தமிழ்நாடு

“உலகத் தலைவர்களே கவனிங்க... தாலிபான்களால் ஆப்கானிஸ்தானுக்கு ஆபத்து” : மலாலா வேண்டுகோள்!

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அதிர்ச்சி வெளிப்படுத்தியிருக்கிறார் நோபல் பரிசு பெற்ற செயற்பாட்டாளர் மலாலா யூசுப்சாய்.

“உலகத் தலைவர்களே கவனிங்க... தாலிபான்களால் ஆப்கானிஸ்தானுக்கு ஆபத்து” : மலாலா வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஆப்கானிஸ்தான் முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் படிப்படியாக முன்னேறிய தாலிபான்கள், தலைநகர் காபூல் நகரை கைப்பற்றி விட்டனர்.

இதையடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி விட்டார். இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

பிற்போக்குத்தனமான கொள்கைகளைக் கொண்ட தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடும் ஒடுக்குமுறையைச் சந்திக்க நேரிடும் என சர்வதேச அளவில் அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த செயற்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கவலையளிக்கிறது. இதனை அதிர்ச்சியுடன் கவனிக்கிறேன். அங்குள்ள பெண்கள், சிறுபான்மையினர், மனித உரிமை செயற்பாட்டாளர்களை நினைத்து கவலை கொள்கிறேன்.

ஆப்கனில் உனடியாக போர் நிறுத்தம் ஏற்பட உலகத் தலைவர்கள் வழிவகை செய்ய வேண்டும். அங்கு மனிதாபிமான ரீதியிலான உதவிகளை உலக நாடுகள் செய்ய வேண்டும். அகதிகளையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். கடந்த 2012ம் ஆண்டு 15 வயதுச் சிறுமியாக இருந்த அவரை தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் மலாலா உயர் தப்பினார்.

உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண்கள், குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்து வந்த மலாலாவுக்கு 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தாலிபான்களால் தாக்குதலுக்குள்ளான மலாலா, ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது குறித்து கவலை தெரிவித்திருப்பது கவனத்திற்குள்ளாகி உள்ளது.

banner

Related Stories

Related Stories