தமிழ்நாடு

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை : நிர்மலா சீதாராமனுக்கு குறள் ஒன்றை நினைவூட்டிய முரசொலி!

மாநிலங்களுக்கான நிதி, பேரிடர் நிதி போன்ற எந்த ஒரு நிதிகளும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவில்லை.

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை : நிர்மலா சீதாராமனுக்கு குறள் ஒன்றை நினைவூட்டிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (03-02-2026)

ஒன்­றிய நிதிநிலை அறிக்­கை­யில் ஒன்­றும் இல்லை இல்லை இல்லை!

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் திருக்குறளும் இல்லை. தமிழ்நாடும் இல்லை.

தமிழ்நாட்டுக்கான எந்தத் திட்டமும் இல்லை. தமிழ்நாட்டுக்கான எந்த சிறப்புத் திட்டமும் இல்லை. மாநிலங்களுக்கான நிதி, பேரிடர் நிதி போன்ற எந்த ஒரு நிதிகளும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவில்லை.

தேர்தலுக்காகக் கூட எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவும் இல்லை. தமிழ் நாட்டுக்கான ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதி கூட அறிவிக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற அறிவிப்பும் இல்லை.

தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு 4.097 விழுக்காடு என்ற மிகச்சொற்ப அளவில் இருந்து கூடவும் இல்லை. ஜல்ஜீவன் குடிநீர்த் திட்டத்தில் தமிழ்நாடு கோரியிருந்த 3,112 கோடி ரூபாய் ஒன்றிய அரசால் வழங்கப்படவில்லை. அனைவருக்கும் கல்வி திட்டத்துக்காக தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 3,548 கோடி ரூபாய் விடுவிக்கப்படவில்லை. பிரதம மந்திரி கதிசக்தி பொருளாதார ரயில் மண்டலங்கள் என்பதில் ஒன்று கூட தமிழ்நாட்டுக்கு இல்லை.

இரயில்வே காரிடார் மேம்பாட்டில், ‘சென்னை - ஐதராபாத்' மற்றும் 'சென்னை - பெங்களூரு' என்று இருக்கிறதே தவிர தமிழ்நாட்டுக்குள் எந்த இரயில்வே திட்டமும் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலத்துக்குள் தானே தவிர, தமிழ்நாட்டுக்குள் இல்லை. கோவைக்கு மெட்ரோ ரயில் இல்லை. மதுரைக்கு மெட்ரோ ரயில் இல்லை. திருச்சிக்கு மெட்ரோ ரயில் இல்லை. ஒசூருக்கு விமான நிலையம் இல்லை. திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் ஜவளித் தொழில் துறையினருக்கு நிதிநிலை அறிக்கை ஊக்கமளிக்கவில்லை.

மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் பங்கு 41 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டும் என்பதை ஏற்கவும் இல்லை. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கோரிக்கையை மதிக்கவும் இல்லை.

ஏழைகளுக்கு இல்லை. பெண்களுக்கு இல்லை. விவசாயிகளுக்கு இல்லை. விளிம்பு நிலை மக்களுக்கு இல்லை. எந்தப் பிரிவினருக்கும் எந்த நன்மையும் இல்லை. வேலை வாய்ப்புக்கு எந்தத் திட்டமும் இல்லை. தனிநபர் வருமான வரியில் எந்தச் சலுகையும் இல்லை.

வரலாறு காணாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதை அதிகரிக்கத் திட்டமும் இல்லை.

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை : நிர்மலா சீதாராமனுக்கு குறள் ஒன்றை நினைவூட்டிய முரசொலி!

அமெரிக்க வரி விதிப்பு பயங்கரவாதத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற அறிவிப்பும் இல்லை. சரிந்து வரும் பங்குச் சந்தையை மீட்டெடுக்கும் திட்டமில்லை. பங்குச் சந்தையில் முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறி ஓடும் நிலையை தடுக்க முயற்சிக்கவும் இல்லை. ஏற்றுமதி தொழிலைப் பாதுகாக்கக் கூடிய வகையில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

பெட்ரோல் விலை பற்றிய கவலைகள் இல்லை. டீசல் விலை பற்றி கவலைகள் இல்லை. சிலிண்டர் விலையைப் பற்றி கவலைகள் இல்லை. தங்கம் விலை ஏற்றம் பற்றிய அக்கறை இல்லை. வெள்ளி விலை பற்றிய அக்கறை இல்லை.

முந்தைய நாள் வெளியான பொருளாதார ஆய்வறிக்கையை இவர்கள்படிக்கவுமில்லை. ஆய்வறிக்கையில் மிகச்சிறந்த மாநிலங்கள் என்று பாராட்டப்பட்ட மாநிலங்களுக்கு எந்தத் திட்டங்களும் இல்லை. பொருளாதார ஆய்வறிக்கையில் பிரச்சினைகள் என்று சொல்லப்பட்டவைகளை நிவர்த்தி செய்யும் முயற்சிகளும் இல்லை. இந்தியாவின் உண்மையான பிரச்சினைகளைக் கண்டுகொள்ளவில்லை.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்தக் கூடிய எந்தத்திட்டங்களும் இல்லை. விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் சட்டபூர்வ நிர்வாக ஏற்பாடு உருவாக்கப்படவில்லை. பண வீக்கத்தை கணக்கிட்டுப் பார்த்தால் ஒன்றிய அரசு 7 விழுக்காடு இந்தியா வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்ற புள்ளி விவரம் நம்பக் கூடியதாக இல்லை. 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற திட்டம் என்ன ஆனது என்பதே தெரியவில்லை.

வருமான வரியில் சலுகைகள் அறிவிக்கப்படவில்லை. வருமான வரிவிகிதங்களில் எந்த மாற்றங்களும் இல்லை. நதிநீர் இணைப்புத் திட்டங்கள்இல்லை. வேளாண் சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள் இல்லை.

11 ஆண்டு கால ஆட்சியில் என்ன சாதித்தோம் என்பது இல்லை. இனி என்ன சாதிக்கப் போகிறோம் என்பதும் இல்லை.

பிரதமர் மோடியை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சில கேள்விகளைக் கேட்டார்கள்.

“தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் கல்வி நிதி எப்போதுவரும்? உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் புதிய திட்டம் எப்போது கைவிடப்படும்? பத்தாண்டுகளாக ‘இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ற எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?”என்று கேள்வி எழுப்பினார் முதலமைச்சர். இவை எதற்கும் நிதிநிலை அறிக்கையில் பதில் இல்லை.

இப்படி மொத்தமும் இல்லை... இல்லை... இல்லை!!!

நிர்மலா சீதாராமன் திருக்குறளைச் சொல்லாவிட்டாலும் நமக்கு ஒரு குறள் நினைவுக்கு வருகிறது...

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாடொறும் நாடு கெடும்.

(ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்துஅதற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைத்த நாடு சீர்குலைந்து போய்விடும்)

banner

Related Stories

Related Stories