உலகம்

”எங்கள் குழந்தைகள் பாலுக்குச் சாகிறார்கள்.. நீங்கள் அமைதிகாக்கிறீர்கள்”: பெண் இயக்குனர் உருக்கமான கடிதம்!

ஆப்கானிஸ்தான் திரைப்பட இயக்குநர் சஹ்ரா கரிமி திரையுலகினருக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

”எங்கள் குழந்தைகள் பாலுக்குச் சாகிறார்கள்.. நீங்கள் அமைதிகாக்கிறீர்கள்”: பெண் இயக்குனர் உருக்கமான கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அமெரிக்கா தனது படையினை ஆப்கனில் இருந்து விலக்கிக் கொள்ளத் தொடங்கிய நிலையில், ஆப்கானின் முக்கிய நகரங்களான கந்தகார், மசர் இ ஷரீஃப், காபூல் ஆகியவற்றை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் காபூல் நகரில் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. காபூல் நகரில் எங்கு நோக்கினும் துப்பாக்கி சத்தம் கேட்பதாக கூறப்படுகிறது. பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் கடும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் பெண் திரைப்பட இயக்குநர் சஹ்ரா கரிமி திரையுலகினருக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதத்தில், “நான் உடைந்த இதயத்துடன் இதை எழுதுகிறேன். தலிபான்களிடமிருந்து எனது அழகிய நாட்டை காப்பாற்ற நீங்கள் எங்களுடன் சேருவீர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் இதை எழுதுகிறேன்.

தாலிபான்கள் எங்கள் மக்களைக் கொன்று குவித்தனர், பல குழந்தைகளைக் கடத்தினர், ஆடையின் காரணமாக ஒரு பெண்ணைக் கொன்றனர், அவர்கள் எங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரை வன்கொடுமை செய்து கொன்றனர், அவர்கள் ஒரு கவிஞரைக் கொன்றனர்.

மேலும், தாலிபான்கள் அரசாங்கத்துடன் தொடர்புடைய மக்களைக் கொன்றனர், எங்களில் சிலர் பொது இடங்களில் தூக்கிலிடப்பட்டனர், மேலும், மில்லியன் கணக்கான குடும்பங்களை இடம்மாற்றினர். காபூலில் உள்ள முகாம்களில் அவர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளனர்.

குழந்தைகள் முகாம்களில் பால் பற்றாக்குறை காரணமாக பலர் இறக்கின்றனர். மிகப்பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இன்னும் உலகம் அமைதியாக உள்ளது. இந்த அமைதிக்கு நாங்கள் பழகிவிட்டோம், ஆனால் அது நியாயமில்லை என்று எங்களுக்குத் தெரியும்.

எங்களுக்கு உங்களின் குரல்கள் தேவை. என் நாட்டில் ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக நான் மிகவும் கடினமாக உழைத்தவை அனைத்தும் சரிய வாய்ப்புள்ளது. தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தால், அவர்கள் அனைத்து கலைகளையும் தடை செய்வார்கள். நானும் மற்ற திரைக் கலைஞர்களும் அவர்களின் குறிக்கு உள்ளாவோம்.

சில வாரங்களில் மட்டும் தாலிபான்கள் பல பள்ளிக்கூடங்களை அழித்துவிட்டனர். இரண்டு மில்லியன் பெண்கள் இப்போது பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை பூஜ்யமாகிவிடும்.

”எங்கள் குழந்தைகள் பாலுக்குச் சாகிறார்கள்.. நீங்கள் அமைதிகாக்கிறீர்கள்”: பெண் இயக்குனர் உருக்கமான கடிதம்!

தயவுசெய்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள், இந்த உண்மையை உங்கள் ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களைப் பற்றி உங்கள் சமூக ஊடகங்களில் எழுதுங்கள். உங்களது ஆதரவு எங்களுக்குத் தேவை. ஆப்கானிஸ்தான் பெண்கள், குழந்தைகள், கலைஞர்கள் சார்பாக எங்களுக்கு உங்கள் ஆதரவும் குரலும் தேவை.

இதுதான் இப்போது எங்களுக்குத் தேவையான மிகப்பெரிய உதவி. காபூல் தாலிபான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எங்களுக்கு உதவுங்கள். அதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன.” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தக் கடிதம் கடும் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் அவரது கடிதத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

banner

Related Stories

Related Stories