
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை இன்றைக்கு இந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும் நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கும் மிகவும் நெருக்கமான மாவட்டம் இந்த தருமபுரி மாவட்டம். அப்படிப்பட்ட தருமபுரிக்கு வருகை தந்து உங்களையெல்லாம் சந்திப்பதில் உண்மையிலே மகிழ்ச்சி அடைகின்றேன்.
முதலில் இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய மாவட்ட பொறுப்பு அமைச்சர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் மணி அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய ஒவ்வொரு பயனாளியினுடைய முகத்திலும் மிகப்பெரிய சிரிப்பும், மகிழ்ச்சியும் தெரிகின்றது.
5 ஆண்டு கால திராவிட மாடல் அரசினுடைய வெற்றிக்கு சாட்சி தான் உங்களுடைய அந்த சிரிப்பு, அந்த மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கு இன்னும் பெருமை சேர்க்க வேண்டும். அந்த மகிழ்ச்சி இன்னும் தொடர வேண்டும், நீடிக்க வேண்டும் என்று தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 5 வருடத்தை எடுத்துக்கொண்டால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள், வாக்களித்த மக்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக, மகளிருக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 2021-ல் ஆட்சி அமைந்தவுடன் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான விடியல் பயணம் திட்டத்திற்கான கையெழுத்து. அந்த மகளிர் விடியல் பயணத்திட்டத்தில் கடந்த 5 வருடத்தில் இதுவரைக்கும் 920 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கின்றார்கள். குறிப்பாக, இந்த தருமபுரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 22 கோடி பயணங்களை விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மகளிர் மேற்கொண்டு இருக்கின்றார்கள்.
அதே மாதிரி பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தை நாம் செயல்படுத்தி இருக்கின்றோம். இந்த திட்டத்தினால் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 இலட்சம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பயன்பெற்று வருகிறார்கள். இந்த தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 46 ஆயிரம் குழந்தைகள் முதலமைச்சர் காலை உணவுத்திட்டத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.

அதே போல், அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி சேருகின்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகையை முதலமைச்சர் அவர்கள் கொடுத்து வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 13 இலட்சம் மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 46 ஆயிரம் மாணவ, மாணவிகள் மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகையை பெற்று வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் சமீபத்தில் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் திட்டத்தையும் நம்முடைய அரசு செயல்படுத்தி கொடுத்து முடித்திருக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 17 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் திட்டத்தை நம்முடைய அரசு செயல்படுத்தி இருக்கிறது.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இன்றைக்கு தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பையும் நம்முடைய அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.
இது எல்லாவற்றிற்கும் மேல் ஒரு திட்டம். அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இன்றைக்கு ஒவ்வொரு மாதமும்
ஒரு கோடியே 32 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் நம்முடைய அரசு உரிமைத் தொகையாக வழங்கி கொண்டிருக்கிறது. இந்த தருமபுரியில் மட்டும் சுமார் 3 லட்சத்து 17 ஆயிரம் மகளிர், உரிமைத்தொகை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த திட்டத்தை தேர்தலை காரணம்காட்டி எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று சிலர் முயற்சி எடுத்தார்கள். ஆனால் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், 3 மாதத்திற்கும் சேர்த்து 3 ஆயிரம் ரூபாயும், கோடை கால சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் மொத்தம் 5 ஆயிரம் ரூபாயை 1 கோடியே 32 இலட்சம் மகளிருக்கு ஒரே மாதத்தில் கொடுத்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல, முதலமைச்சர் அவர்கள் இன்னொரு வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தபிறகு இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி கொடுப்போம் என்ற வாக்குறுதியையும் கொடுத்திருக்கிறார்.
சென்ற வாரம் “கனவு மெய்ப்படும்” நிகழ்ச்சியில் வாக்குறுதிகளை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார். கல்வி, தொழில் வளர்ச்சி, அடிப்படைக் கட்டமைப்பு, விவசாயம் என்று ஒவ்வொன்றையும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை அடுத்தக் கட்டத்திற்கு நாம் அனைவரும் சேர்ந்து எடுத்துச் செல்வோம் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.
2030-க்குள் 8 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும், 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், School drop outs முழுவதுமாக தடுக்கப்படும், அரசு பள்ளிகள் அனைத்திலும் Smart Class Facility கொண்டு வரப்படும் என்று பல வாக்குறுதிகளை கொடுத்திருக்கின்றோம். இப்படி எல்லா வகையிலும் நம்முடைய அரசு உங்களுக்கு துணை நிற்கின்றது.
இந்த தருமபுரி மாவட்டத்திலும் இன்றைக்கு பல்வேறு திட்டங்களை நம்முடைய அரசு செயல்படுத்தி இருக்கிறது. சுமார் 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவண்ணாமலை – அரூர் நான்கு வழிச்சாலை பணிகள், 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் இணை உற்பத்தி நிலையம், 85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் இணை உற்பத்தி நிலையம்;
பென்னாகரத்தில் முதலமைச்சருடைய சிறிய விளையாட்டு மைதானம் கட்டுகின்ற பணிகள், நல்லம்பள்ளி வட்டத்தில், ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதிகளை கட்டும் பணிகள் என்று இப்படி பல்வேறு பணிகளை நம்முடைய தருமபுரி மாவட்டத்திற்கு நம்முடைய அரசு செய்து கொடுத்திருக்கிறது.
இதுபோன்ற பல்வேறு திட்டங்களால் தான், இன்றைக்கு இந்தியாவிலேயே நம்முடைய தமிழ்நாடு வளர்ந்து வருகின்ற மாநிலங்களில் நம்பர் 1 இடத்தில் இரட்டை இலக்கத்தில் 11.19 சதவீத வளர்ச்சியுடன் நம்முடைய தமிழ்நாடு இடம் பிடித்திருக்கிறது. இந்த வளர்ச்சியை அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துட்டுக் கொண்டு போக வேண்டும் என்றால், இன்றைக்கு இவ்வளவு நலத்திட்டங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இது மென்மேலும் வருகின்ற திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இன்னும் பல்வேறு திட்டங்களை உங்களுக்கு நிச்சயம் செய்து கொடுப்பார்.
இங்கே மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த எனது அருமை சகோதரிகள் நிறைய பேர் வந்திருக்கின்றீர்கள். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 4 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டிருக்கிறது.
ஆனால், அத்தனைக் குழுக்களுக்கும் தாய்வீடு என்று சொன்னால் அது இந்த தருமபுரி மாவட்டம்தான். ஏனென்றால் 1989-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முறையாக நம்முடைய கலைஞர் அவர்கள் இந்த தருமபுரி மாவட்டத்தில் தான் சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்தார்கள். இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அந்த குழுக்களுடைய வளர்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார்.

இந்த 5 வருடத்தில் சுமார் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடி அளவிற்கு குழு சகோதரிகளுக்கு, வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது. தருமபுரியில் மட்டும் கிட்டத்தட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை எல்லாம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்,
உங்களுக்கு கொடுக்கின்ற கடன் தொகையாக பார்க்கவில்லை. குழு சகோதரிகள் உங்களுடைய உழைப்பின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையாகத்தான் இதை பார்க்கிறார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு குழு சகோதரிகள் தொடர்ந்து சாதித்து வருகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருத்தருமே ஒரு தனி நிறுவனம் போல Corporate நிறுவனம் போல தொழில் முனைவோர்கள் (Entrepreneurs) என்று சொல்வார்கள். அப்படி செயல்பட்டு வருகிறீர்கள்.
அதனால் தான், IT company-ல கொடுப்பது போல் இன்றைக்கு குழுவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு சகோதரிக்கும் உங்களுடைய பெயர், புகைப்படத்துடன் அடையாள அட்டை கொடுக்கப்பட்டது இந்தியாவிலேயே முதல் மாநிலம் நம்முடைய தமிழ்நாட்டில்தான். இந்த அடையாள அட்டைகளின் மூலம் குழு சகோதரிகள் பல பயன்களை அடைந்து வருகிறீர்கள். குழு சகோதரிகள் தயாரிக்கின்ற பொருட்கள் 25 கிலோ வரை 100 கிலோ மீட்டர் தூரம் வரை அரசுப் பேருந்துகளில் எந்தவித கட்டணமின்றி எடுத்துச் சென்று அதை விற்பனை செய்யலாம்.
மகளிர் குழுக்களுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை நிச்சயம் செயல்படுத்துவார். அந்த உறுதியை தந்து, வங்கி கடன் இணைப்பு பெற்ற அத்தனைபேரையும் வாழ்த்தி மகிழ்கின்றேன்.
அதேபோல இங்கே வீட்டுமனைப் பட்டாக்களையும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகட்டுவதற்கான ஆணைகளையும் கொடுக்க இருக்கின்றோம். இருக்க இடம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசிய தேவை. அந்த தேவையை நம்முடைய திராவிட மாடல் அரசு தனி கவனம் செலுத்து நிறைவேற்றி வருகிறது. பட்டா வேண்டும் என்று பொதுமக்கள் அரசு அலுவலங்களுக்கு செல்கின்ற காலம் மாறி, இன்றைக்கு அரசாங்கமே உங்களைத் தேடி வந்து உங்களுக்கான பட்டாக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த 5 வருடங்களில் மட்டும் சுமார் 24 இலட்சம் பட்டாக்களை நம்முடைய அரசு கொடுத்திருக்கிறது. இந்த தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 46 ஆயிரம் பேருக்கு பட்டாக்களை நம்முடைய அரசு வழங்கி இருக்கின்றது. பட்டா பெற்ற அத்தனைபேருக்கும் நம்முடைய வாழ்த்துகளை நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதே போல தலைக்கு மேல் ஒரு கான்கிரீட் கூரை இருக்க வேண்டும் என்பதுதான் உழைக்கும் மக்கள் பலருடைய கனவு. அந்தக்கனவை நம்முடைய திராவிட மாடல் அரசு நினைவாக்கி வருகிறது. குறிப்பாக கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் 3 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் தான், வீடு கட்டுவதற்கான ஆணையை இன்றைக்கு கொடுக்க இருக்கின்றோம்.
இன்றைக்கு உங்களுக்கு வீட்டை மட்டும் நம்முடைய அரசு தரவில்லை. உங்களுக்கான ஒரு முகவரியையும் நம்முடைய அரசு தந்திருக்கின்றது. ஆகவே கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகளைப் பெற்றுள்ள அத்தனைபேருக்கும் நம்முடைய வாழ்த்துக்கள்.
இந்த நிகழ்ச்சியில் அன்பிற்கினிய மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருத்தரும் மாற்றத்திற்கான திறனாளிகளாக மாறி இருக்கின்றீர்கள். உங்களுக்கான மோட்டார் பைக், செவித்திறன் கருவி, உள்ளிட்ட உபகரணங்களை நம்முடைய அரசு இன்றைக்கு கொடுத்திருக்கிறது. இது ஏதோ உங்களுக்கான சலுகை அல்ல. உங்களுடைய உரிமை.
மாற்றுத்திறனாளிகளுடைய உரிமைக்கு என்றைக்கும் நம்முடைய அரசு குரல் கொடுத்து கொண்டிருக்கும். அதனால்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை நேரடியாக நியமனம் செய்கின்ற சட்டத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக நம்முடைய தமிழ்நாட்டில் கொண்டு வந்திருக்கின்றார்.
இவ்வளவு நாள், தங்களுக்காக மற்றவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி இனிமேல் மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களுக்கான குரல் கொடுக்கின்ற நிலைமையை நாம் ஏற்படுத்தி இருக்கின்றோம். ஆகவே உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இப்படி மகளிர், மாணவர்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீரர்கள், என எல்லாத்தரப்பிற்கும் பார்த்து, பார்த்து நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றார்.
உங்களுக்காக இன்னும் அதிகமாக உழைக்க நம்முடைய அரசு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே உங்களுக்கு பக்கபலமாக இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு நீங்கள் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, நலத்திட்டங்களைப் பெற்ற அனைவரையும் மறுபடியும் வாழ்த்தி, இந்த சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த உங்களுடைய மாவட்ட பொறுப்பு அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து விடைபெறுகின்றேன்.






